அருண் "சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லியாச்சா?" நண்பன் சிவாவின் குரலுக்கு நிமிர்ந்தான் அருண். அப்பா இப்படிப் படுத்துவிட்டதில் இருந்து எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்கிற நினைப்பே அருண் மனதில் பிரதானமாகிப் போனது. அப்பா என்கிற ராமநாதன் நான்கு மாதங்களைப் படுக்கையில்தான் கடத்தினார். ஒரே மகன் அருணை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்? இப்படி நினைவு இழந்து அப்பா படுத்திருந்தாலும் அவர் மனத்தில் என்ன சிந்தனைகள் ஓடும் என்று அருண் சிந்திப்பது உண்டு. அம்மா பற்றி நினப்பா? தன் குடும்பம்பற்றிய சிந்தனை இருக்குமோ? மரணம்பற்றி இருக்குமோ? அவரிடமே கேட்க முடிந்தால்?
ராமநாதன் ஊட்டியில் இருப்பது போல் ஒரே புகை மூட்டம். தெளிவு இல்லை. பனியில் பாதை தெரியாமல் குழப்பம்.
முன்னும் பின்னும் சம்பவங்கள் ஊர்வலமாக ஓடின. முழுவதும் யோசித்து முடிவதற்குள் மறுபடியும் குழப்பம். இன்னிக்கு யார் பால் வாங்கப் போனார்கள்? இருபது வருஷம் ஆகி இருக்குமா ராஜம் சித்தி போய்? குழந்தை அருண் ஸ்கூல் போனானா? இல்லை. அருண் பெரிசா வளர்ந்து வேலைக்குப் போய் நாள் ஆச்சே! நெஞ்சு அடைக்கிறதுபோல் இருக்கிறது. அருண் என்மேல் ஏறி விளையாடு. அழுகை ரொம்ப வந்தது. "மறக்க மாட்டீங்களே" என்ற ஜானுவின் குரல். நினைவுகள் அழுத்திய போதும் இருட்டு இன்னும் அருகில் வந்தபோதும் அந்த முகம் அவரை பார்த்துப் புன்னகை செய்தது.
அருண் வாசலில் வந்த அந்தப் பெண்மணி யார் என்று யோசித்தவாறே எழுந்தான் அருண். கூட வந்தவர் "உங்க அப்பா ஊர்காரங்... அப்பாவை பார்க்கணும்னு" என்றார். "வாங்க" என்று அப்பாவின் அறைக்கு அழைத்துப் போனான்.
"அப்பா அப்பா" என்று சிலமுறை அழைத்துப் பார்த்தான். ராமநாதன் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தார்.
ராமநாதன் ரொம்ப நேரம் தூங்கி விட்டேனோ? தலை வலித்தது. ராஜம் முகம் நினைவுக்கு வந்தது. ராஜம்.... ராஜம். எங்கே போனாள்? சிரிக்காத ராஜம்.... அருணை அடிக்கும் ராஜம்.... அம்மாவை அழவைத்த ராஜம். வெறுப்பைத் தவிர வேறு ஏதும் தெரியாத ராஜம். ஆத்திரமாக வந்தது. எப்படி ராஜம் எனக்கு மனைவி ஆனாள்? ஜானு எப்படித் தொலைந்து போனாள்? நான்தான் ஜானுவைத் தொலைத்தேன். என் ஜானு. எனக்காகத்தான் வாழ்ந்தாள். காத்திருந்தாள். தங்கைமார் கல்யாணம் முடிந்தாலும் எனக்காகக் காத்திருந்த ஜானு....
ரொம்பப் பாவம் பண்ணிட்டேன் ஜானு. உன்னைக் கொன்றுவிட்டேனே! கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர். வருடக் கணக்காய் மனசில் ஓரமாய் ஒளித்து வைத்திருந்த ஞாபகங்கள் இப்போது விஸ்வரூபம் எடுத்தன.
அருண் ஏதோ புரிந்தமாதிரி இருந்தாலும் சற்றே ஆழமாகச் சிந்திக்க ஏனோ அருண் பிரியப்படவில்லை. "நீங்க பாத்துட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு அந்த இடம்விட்டு வெளியில் சென்றான். இது அப்பாவின் தனிப்பட்ட விஷயம். வந்தவர்களிடம், "நீங்கள் யார், உங்களுக்கு அப்பா எப்படி தெரியும்?" என்று கேட்பதுகூட நாகரிகமாகத் தெரியவில்லை.
ராமநாதன் மனம் ஜானு ஜானு என்று புலம்பியது. கேட்குமா ஜானு உனக்கு? புரியுமா எப்படி நான் பிணமாக தினம் வாழ்ந்தேன் என்று? சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு குழந்தை அருண் ஒருவனுக்காக நடைப்பிணமாக வருடங்கள் கழித்தேன். அம்மா இந்த வீட்டுக்கு வரவே இல்லை. தெரியுமா ஜானு உனக்கு? ராஜம் நடந்து கொண்டது அப்படி... எல்லாமும் உன்னிடம் சொல்லி அழுதால் எனக்கு நிம்மதி வருமா?
ஜானகி எவ்வளவு வருஷம் இருக்கும் இவரைப் பார்த்து? இந்த கோலத்தில் படுக்கையாகப் பார்ப்பது என்ன கொடுமை? ஏதோ.... பார்த்துவிட்டேன்.... முகத்தையும் அந்தச் சுருள் முடியையும் தொடவேண்டும் போல இருந்தது. நாங்கள் இருவர்மட்டும் தான் இங்கே இப்போது. இருந்தும் தயக்கம். அந்நியமாகப் போய்விட்ட பந்தம். கைகளை மெதுவாகப் பற்றி "தெய்வமே" என்று பிரார்த்தித்துவிட்டுப் பிரிய மனசே இல்லாமல் மறுபடியும் பிரிந்தாள் ஜானு என்கிற ஜானகி.
ராமநாதன் உள்ளே அம்மா சாயங்கால வேலைகளில் இருக்கிறாள். மணி நாலு இருக்குமா? ஜானு வரும் நேரம்.... அம்மாவிடம் பேசப் போகிறேன். ஜானு எப்படித் திக்குமுக்காடிப் போகப்போகிறாள் என்று நினைக்கும்போதே எனக்கு அழவேண்டும் போல இருக்கிறது. அம்மா ஆசீர்வாதத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். நல்ல வாழ்க்கை தருவேன் ஜானு. நல்லா பார்த்துக் கொள்வேன். மனசு முழுக்க ஜானு முகம். நீதான் என் மனைவி. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. ரொம்ப சந்தோஷம் வந்தால் நெஞ்சு அடைக்குமா என்ன?
அருண் தூக்கத்தில் இறப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று எல்லோரும் அப்பாவின் மரணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அருண் மனசு மட்டும் தூரத்தில் எங்கோ இருந்தது.
யாமினி, பெல்மான்ட், கலிஃபோர்னியா |