பாட்டி சொன்ன பழமை
கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி இருந்த ரகுபதி திடீரென்று "எல்லாம் வேணும்தான் நம்ம நாட்டுக்கு" என்றார்.

"என்ன ஆச்சு ரகு?" இது ஜானகி அம்மாள், ரகுவின் தாயார். "அமெரிக்கக் கான்சுலேட் லேடி ஒருத்தி நம்ம ஊருக்குப் போயிட்டு அங்கே ஒரே குப்பையும், சூடும்தான் இருக்குன்னு அறிவிப்பு கொடுத்திருக்கா. அதுக்கு நம்ம மக்கள் எல்லாம் நெட்ல கமெண்ட் எழுதிட்டு இருக்காங்க. நம்ம நாடு இருக்கே உருப்படவே உருப்படாது."

ரகுவின் சொற்கள் ஜானகியின் மனதைச் சுருக்கென்று தைத்தன. ஐந்து நிமிடங்கள் கழித்து ரகு, "அம்மா உன் ஜெட்லாக் சரியா போச்சா? இப்போ டயர்டா இருக்கா?" என்றான். "இல்லைடா கண்ணா எனக்கு டயர்டா இல்ல" என்று ஜானகி வாஞ்சையாகக் கூறினாள். "சரி அப்ப வா. மது மளிகை சாமான் வாங்கணும்னு சொன்னா. நான் வால்மார்ட் போகப்போறேன். நீயும் என்னோட வா. ஹே சுசி, அம்மா டேபிள்மேல ஒரு பேப்பர் வெச்சிருப்பா அதை எடுத்துண்டு வா."

"இந்தாப்பா. வால்மார்ட் நானும் வரேன்" என்றாள் பேப்பரை நீட்டியபடி சுசி.

வால்மார்ட்டில் ஒரே கும்பல். வேகமாகச் சாமான்களை எடுத்தபடி வந்தார் ரகுபதி. “பார்த்தியா அம்மா இங்கெல்லாம் எவ்ளோ க்ளீனா இருக்கு. அதனால கீழ எதுவும் போடாம பத்திரமா குப்பைத் தொட்டில போடு. நம்ம ஊரு மாதிரி கிடையாது. நம்ம ஊரில எங்க வேணா குப்பை போடலாம்.” ரகுவின் கேலிக்கு பதில் கூறாமல் அமைதியாக வந்தாள் ஜானகி.

*****


காரில் பேத்தியுடன் அமர்ந்து பேசியபடி வந்தாள் ஜானகி. "பாட்டி எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ இங்கேயே இருந்துடேன்". "நான் இங்கே கொஞ்ச நாள் இருப்பேன். அப்புறம் நீ இந்தியா வந்து என்கூடக் கொஞ்ச நாள் இரு."

"இந்தியாவா! ஒரே போர் பாட்டி. போன தடவ நான் வந்தபோதே ஒரே குப்ப, அழுக்கு. நான் வரமாட்டேன். நீ இங்கயே இருந்துடு."

"அப்ப உனக்கு இந்தியா பிடிக்காதா?"

"இந்தியா பிடிக்கும் பாட்டி. நம்ம ஊரு கலாசாரம் பிடிக்கும். ஆனா அங்க குப்ப இருக்கு பாரு. அது பிடிக்காது."

பேத்திக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள் ஜானகி.

*****


பாட்டி இந்த ஸ்கூல் ஹோம்வர்க்குக்கு ஹெல்ப் பண்றியா? நான் ரீசைக்கிள் பத்திக் கட்டுரை எழுதணும்."

"இந்தியாவும் ரீசைக்கிளும் அப்படின்னு எழுதேன்."

கேட்டுக்கொண்டே வந்த ரகுபதி "நம்ம ஊரில எங்கம்மா ரீசைக்கிள்?" என்று கேலியாக கேட்டார்.

"என்னப்பா இப்படிப் பேசற ரகு? இங்க இப்பதான் ரீசைக்கிள்னு சொல்லிப் பெரிய உரைகள் நடக்கறது. நம்ம ஊரில எத்தனை வருஷமா அது இருக்கு! நீங்க அலுமினியம் ஃபாயில் அப்படின்னு சொல்றத பல காலமா நம்ம வாழையிலையில மடிச்சு செய்யறோம். நாம போடற குப்பைகளும், உணவுகளும், மண்ணுக்கு உரமாகற வகையிலதான் முன்னாடி போட்டோம். அதையேதான் கம்போஸ்ட்ன்னு சொல்லி நீங்க தனியா தயாரிக்கறீங்க. அந்தக் காலத்தில தூக்கு டப்பா சாப்பிட எடுத்துண்டு போனோம். இப்ப அதையே ஈகோஃப்ரெண்ட்லி கன்டெய்னர் அப்படீன்னு சொல்ற. சனிக்கிழமை விரதம்னு சொல்லி காய்கறி, பழம் சாப்பிட்டா நான் பஞ்சாங்கம். ஆனா அதையே low carb டயட்ன்னு ஒருத்தி டி.வி.ல சொல்லித் தரா அதை மெனக்கட்டு எழுதி வெச்சிக்கறீங்க. கைப்பிடித் துணின்னு நான் சமையல் அறையில வெச்சிருந்தா அது அசிங்கம், ஆனா reusable bountyன்னு சொல்லி ஒரே துணியை அலம்பி வெச்சுக்கறீங்க. நீ இங்க ரீசைக்கிள்ன்னு சொல்றது எல்லாமே காலம் காலமா நம்ம ஊரில செய்யறதுதான். ஆனா நீங்க எல்லாம், இங்க பொறுப்பா குப்பையை குப்பைத் தொட்டில போட்டுட்டு, இங்கேந்து அங்க வந்தா கீழதான் குப்ப போடறீங்க. நம்ம தேசத்த சுத்தமா வெச்சுக்கற எண்ணம் உங்களுக்கு இல்ல.

“நம்ம வீட்ட யாராவது குப்பைன்னு சொன்னா சரி பண்ணுவோமா? சிரிப்போமா? தேசம் முழுக்க நம்மளால சரி பண்ண முடியாதுதான். ஆனா ஒவ்வொரு மனுஷனும் ஒழுக்கமா நடந்துண்டா குப்பை சேராம தவிர்க்கலாமே. அப்படிச் செய்யாம இந்தியா குப்பைன்னு யாராவது கிண்டல் பண்ணினா, கூடசேர்ந்து சிரிக்கறீங்க. மல்லாக்கப் படுத்து மேல துப்பினா நம்மமேலயே தானே விழும் ரகு. நம்ம ஊருக்குப் புதுமை கொண்டு வந்த இந்த தலைமுறை நீங்க, அருமையான பழமைய சாகடிசிட்டீங்க, இப்போ அந்தப் பழமையோட அருமை தெரிஞ்சாலும் ஏத்துக்காம எள்ளி நகையாடறீங்க!"

ஜானகி சொன்னதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானான் ரகு.

லக்ஷ்மி சுப்ரமணியன்,
மின்னசோட்டா

© TamilOnline.com