பித்தநீர்க் கல்
40 வயது சந்தியாவுக்குக் காலை பத்து மணி அளவில் திடீரென்று வயிற்றின் வலது பக்கம் வலித்தது. அழுத்திப் பிடிக்கும் வலி, நேரம் ஆக ஆக அதிகமானது. சற்று நேரத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கியது. வலி மேலும் அதிகமாகவே உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள்.

54 வயது ராமச்சந்திரனுக்கு மூன்று மாதங்களாக வயிற்றின் வலது பக்கத்தில் முணுமுணு என்று ஒரு வலி வந்து வந்து போகிறது. ஆரம்பத்தில் அவர் அதைக் கண்டும் காணாமல் இருந்தார். ஆனால் இப்போது அடிக்கடி வந்து, ஒரு உபாதையாக மாறத் துவங்கியது. அந்த வலி வந்தால் சாப்பிடப் பிடிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் அவதிப்படுவார். அவரது மனைவி நச்சரிக்கவே மருத்துவரை நாடினார்.

41 வயது சேகருக்குச் சமீப காலமாகத்தான் வயிற்றில் உபாதை. ஏதேனும் பொரித்த உணவைச் சாப்பிட்டாலோ, சற்று அதிகமாக மது அருந்தினாலோ வயிறு வலித்தது. இரண்டு நாட்கள் பத்திய உணவு சாப்பிட்டால் சரியாகப் போய்விடும். இந்த முறையும் அப்படித்தான் நினைத்தார். ஆனால், தனது சிறுநீர் மஞ்சளாகத் துவங்கியதைக் கண்டார். வயிற்று வலி அதிகமாகி, சுருண்டு படுத்தார். அவரைத் தொட்டுப் பார்த்த மனைவி, கடுங்காய்ச்சல் இருப்பதைக் கண்டு பயந்து போனாள். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்.

60 வயது துரைசாமிக்கு அமெரிக்கப் பயணம் முன்னிட்டு செய்யப்பட்ட முழு உடல் பரிசோதனையில் பித்தப் பையில் கற்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தனக்கு அதனால் எந்தவித வலியோ தொந்தரவோ இல்லை என்று துரைசாமி மருத்துவரிடம் சொன்னார். வேளா வேளைக்கு உணவு உண்டு தகுந்த உடற்பயிற்சி செய்து, நலமாக இருப்பதாகச் சொன்னார். ஆனால் தனது பித்தப்பையில் கற்கள் இருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

மேலே சொன்ன நான்கு நோயாளிகளுக்கும் பித்தப்பையில் கற்கள் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப் பட்டது. நம் எல்லோருக்கும் கல்லீரலின் கீழ் ஒரு பித்தப்பை (Gallbladder) இருக்கிறது. இது கல்லீரலில் சுரக்கும் பித்தநீரைச் சிறுகுடலில் சேர்க்க உதவுகிறது. இந்தப் பித்தநீர் நாம் உண்ணும் உணவை, குறிப்பாக கொழுப்புச் சத்து நிறைந்தவற்றை, செரிக்க உதவுகிறது. ஒரு சிலருக்குப் பித்தப்பையில் கற்கள் உருவாகலாம்.

முதல் நோயாளிக்கு அந்தக் கற்களினால் அடைப்பு ஏற்பட்டு வாந்தியும் வலியும் உண்டானது. இரண்டாவது நோயாளிக்கு அந்தக் கற்களால் துன்பம். மூன்றாவது நோயாளிக்கு அவற்றால் அடைப்பும், நுண்ணுயிர்க் கிருமித் தாக்கமும் ஏற்பட்டு வலியும் மஞ்சள் காமாலையும் ஏற்பட்டன. நான்காவது நோயாளிக்கு எந்த உபாதையும் இல்லாமல் பித்தப்பைக் கற்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்துமே சாத்தியம்.

காரணங்கள்
ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, அதிக உடல் எடை, உணவில் அதிகக் கொழுப்பு, உணவில் குறைவான அளவு நார்ப்பொருள் (Fiber) போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கும், பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல் எடை கூடிய நாற்பது வயதுக்கு மேலான பெண்களுக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். உடல் எடை அதிவேகமாக குறைபவர்களுக்கும் ஏற்படலாம்.

பரிசோதனை, தீர்வு
வயிற்றில் இருக்கும் கல்லீரல், பித்தப்பை முதலிய பாகங்களை மீயொலி வரைவிப் பரிசோதனை (Ultrasonogram) செய்தால் கற்கள் இருப்பது தெரிய வரலாம். சில சமயத்தில் குறுக்குவெட்டு வரைவி (CT scan) தேவைப்படலாம். HIDA Scan என்ற பரிசோதனையும் செய்வதுண்டு.

பித்தப்பையின் வாயில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரும். நுண்ணுயிர்க் கிருமித் தாக்கம் இருந்தால், மருந்துகள் (antibiotics) கொடுத்து கிருமியின் தாக்கம் ஒழிந்தபின் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அவ்வப்போது வலி ஏற்பட்டுத் துன்புறுத்தினால், தகுந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். நமது துரைசாமி போல் எந்த உபாதையும் இல்லையென்றால் எந்தச் சிகிச்சையும் தேவையில்லை.

தவிர்ப்பு முறைகள்
உடலில் கொழுப்பின் அளவைக் குறைத்து, உணவில் கொழுப்புப் பொருட்களின் அளவைக் குறைத்து, வேளா வேளைக்கு உணவு உண்டு வந்தால் இந்தக் கற்கள் உருவாவதைத் தவிர்க்கலாம். சரியான வேளையில் உண்ணாமல் இருத்தலும் இந்தக் கற்கள் உருவாகக் காரணம். அதிக தண்ணீரும், நார்ப்பொருளும் உட்கொள்வது நல்லது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com