உவமை நயம் என்று எடுத்தால், அதை வள்ளுவர் கையாண்டிருக்கிற அழகைச் சொல்வதா, அதற்கு உரைசெய்த பரிமேலழகரின் நுட்பத்தைப் பேசுவதா என்று திகைப்பே ஏற்படுகிறது. உதாரணமாக, 660ம் குறளுக்கு, 'சலத்தால் பொருள்செய்து ஏமாத்தல்' என்று பாடம் கொண்டு, உரை செய்திருப்பவர்கள், 'தன்வினை, பிறிதின் வினையுமாய் உவமை இலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்' என்று காரணம் காட்டி, 'ஏமாத்தல்' என்பதற்கு மாறாக, 'ஏமார்த்தல்' என்பதே பாடமாக இருக்கவேண்டும் என்பதை ஒரே வரியில் திருத்தமான விளக்கவுரையாக பரிமேலழகரின் உரை நேர்த்தியை இன்னொரு சமயத்தில் பார்க்கலாம். சொல்ல எடுத்துக்கொள்ளும் பொருளாக வள்ளுவர் தேர்ந்தெடுப்பதில் உள்ள தொலைநோக்கை இப்போது கொஞ்சம் பார்க்கலாம்.
'ஒரு வீட்டைக் கட்ட என்னென்ன தேவைப்படும்' என்று ஒருவர் கேட்கிறார். நாம் என்ன சொல்வோம்? 'செங்கல் வேணும்; சிமென்ட் வேணும்; மணல் வேணும்; கருங்கல் வேணும்; மரப்பலகை, சவுக்கு மரம் எல்லாம் வேணும். கட்டுவதற்குக் கொத்தனாரும், சித்தாளும், மேஸ்திரியும் வேணும்' என்றெல்லாம் அடுக்குவோம். ஆனால், வள்ளுவர் கண்ணுக்கு இவை எதுவும் தென்படாது என்பதுதான் வியப்புக்குரியது. தொழில்நுட்பம் மாறமாற, செங்கல் தேவைப்படாமல் போகலாம். இக்காலத்தில் செங்கல்லின் இடத்தை ஸெல்க்ரீட் கற்கள் பிடித்துவிட்டன. போகப்போக, சுண்ணாம்புச் சாந்தின் இடத்தை சிமென்ட் பிடித்ததைப் போல, சிமென்ட்டும் காணாமல் போக நேரிடலாம். அன்று செங்கற்களை நான்கடுக்கு மாடிகளுக்கு ஏற்ற நூற்றுக்கணக்கில் சிற்றாட்கள் தேவைப்பட்டார்கள். இன்று ஒரே ஒரு பாரந்தூக்கி போதும். இருபது, முப்பது அடுக்குகள் இப்போதெல்லாம் இந்தியாவில் வழக்கமாகிவிட்டன. இதே கேள்வியை வள்ளுவரிடம் கேட்டால், என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? 'வீடு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்; எப்போதும் வெளிச்சம் உள்ளதாய் இருக்க வேண்டும்; புழங்குவதற்கு தாராளமாக இடம் இருக்க வேண்டும்....' இவற்றில் ஒன்றே ஒன்றைக் கூட, எந்தக் காலத்திலும் மாற்றிவிட முடியாது. இவை அடிப்படை-ஆதாரமான தேவைகள். Eternal truths. இவற்றை இனம் கண்டு, இவற்றை மட்டுமே தன் நூல் நெடுகிலும் செறித்து வைத்திருக்கும் ஒருவருடைய மதிநுட்பத்தைப் பார்த்தால் பிரமிப்பு ஏற்படுமா, படாதா?
இப்படித்தான் அவர் சொல்லியிருக்கும் ஒவ்வொரு உவமையும். 'அனிச்சப்பூ' நீங்கலாக, அவர் பயன்படுத்தியுள்ள எல்லா உவமையும், எல்லா காலங்களுக்கும், அனேகமாக எல்லா நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்கும். 'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று' என்ற குறளை ஆகஸ்ட் 2012 இதழில் பார்த்தோம். இந்தக் குறளில் பேசப்படும் தூண்டிலும், அதை விழுங்கும் மீனும் எந்தக் காலத்திலும் உள்ளவைதாம்; இன்னமும் இருக்கப் போகின்றவைதான்; இவற்றை அறியாத ஒரு நாடு இருக்க முடியாது. சொல்வதற்கு எத்தனையோ உவமைகள் இருந்தும், எல்லாவற்றையும் விடுத்து, மீனையும் தூண்டிலையும் தேர்ந்தெடுத்திருக்கும் நயத்தை நுணுகிப் பார்த்தால் அல்லவா ரசிக்க முடியும்! 'நுனிக்கொம்பர் ஏறினார்', 'பீலிபெய் சாகாடும் அச்சு இறும்' என்று எந்த உவமையை எடுத்துக் கொண்டாலும், எந்த நாட்டிலும் எந்த நாளிலும் கண்ணெதிரில் நிகழ்வதைக் காட்டுவனவாக அமைந்திருக்கும் நேர்த்தியைப் பார்க்க வேண்டாமா! இப்படிப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்ய, ஒருவனுக்கு எவ்வளவு மதிநுட்பமும், சிந்தனா சக்தியும், உரியதைத் தேர்ந்தெடுக்கும் லாகவமும், செய்நேர்த்தியும் இருந்தாக வேண்டும் என்பதையெல்லாம் பார்க்கும் போதல்லவா, திருக்குறள் எதையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு, திமிறிக் கொண்டு நிற்கும் காளையைப் போல நிற்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது!
இவை சொல்லி உணர்த்திய நயங்கள். இவர் சொல்லாமலும் உணர்த்த வல்லவர். எதைச் சொல்லாமல் விடுவார் என்றால், எது வாக்கியத்தின் மிக முக்கிய அங்கமோ, உயிர்நாடியோ, அந்தச் சொல்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், எழுவாய் இல்லாமல் ஒரே ஒரு வாக்கியத்தைப் பேச முடியுமா? தமிழ் இலக்கண வகுப்பு எடுக்கிறேனோ என்று மிரட்சியாக இருந்தால் கொஞ்சம் லகுவாக இதே கேள்வியைக் கேட்கிறேன். Can there be a sentence without a subject? அவன், அவள், அது, அங்கே, இங்கே, எங்கே என்று ஏதாவது ஒன்றைப் 'பற்றிய'படிதானே நாம் பேசுகின்ற ஒவ்வொரு வாக்கியமும் சுழல்கிறது? ஸப்ஜெக்ட் என்று சொல்லப்படுகிற அந்த ஆணிவேர் இல்லாமல் எதைப்பற்றியாவது பேசிவிட முடியுமா? பேசினால் புரியுமா? இவர் செய்வார். இந்த 'இவர், செய்வார்' என்ற இரண்டு சொற்களைக் கொண்ட ஒரு சிறிய வாக்கியத்திலும் 'இவர்' என்று எழுவாய் எழுந்து நிற்கிறதல்லவா? அந்தப் பிடிப்பும் இல்லாமல் ஒரு செய்தியைப் பொட்டில் அறைந்ததைப் போல் சொல்ல முடியுமா? இவர் சொல்வார். நாமும் கேட்டுக் கொண்டிருப்போம். அடிநாதம் புரிந்துவிடும். அவர் எதையோ விட்டுவிட்டார் என்பதுகூடத் தெரியாது.
ரொம்ப சுத்தியடிக்க வேணாம். நேரா ஒரு குறள எடுத்து சொல்லிடறேன்.
உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும். உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னார் உடைத்து. (667)
அட இவ்வளவுதானா! இதுக்குத்தான் இத்தன பூர்வபீடிகையா! நான்கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். ஆமா. இந்தக் குறள் எனக்கும் தெரியும். அப்படி என்னத்த சொல்லாம விட்டுட்டாரு? இதுக்குப் போயி மொழ நீளத்துக்கு எழுதணுமாக்கும்... கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆமாம். இந்த ஆசாமியைக் கூர்ந்து கவனிக்காத வரைக்கும் நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தக் குறளை அப்படியே மிகவும் தளர்வான நடையில் சொன்னால், 'உருவத்தைப் பார்த்து இகழாத தன்மை வேண்டும். உருண்டு ஓடுகிற தேருக்கு அச்சாணியைப் போன்றவர்களை உடையது.' உருவத்தைப் பார்த்து இகழாத தன்மை வேண்டும். சரி. யாருக்கு வேண்டும்? அங்கே பதிலில்லையே!
அட பரவால்ல, போயிட்டுப் போவுது. அவர் என்கிட்டதானே பேசிட்டு இருக்காரு. அதனால, 'யாரையும் உருவத்தப் பாத்து தப்பா மதிப்பிட்டுடாதே' அப்படின்னு எனக்குதான் சொல்றார்--அவர் உங்களுக்குச் சொல்வதாக அவர் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் அப்படி விளங்கிக் கொண்டீர்கள். சரி. அதுவாவது போகட்டும். அடுத்த வாக்கியத்தைக் கூர்ந்து கவனியுங்கள். 'உருண்டு ஓடுகிற தேருக்கு அச்சாணியைப் போன்றவர்களை உடையது.' உடையதுன்னா, எது உடையது? தேர் இருக்கிறது, அச்சாணி தென்படுகிறது, உடையவர் யார் என்று தெரியவில்லையே! 'உருளாநின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணி போல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்' என்று பரிமேலழகர் வருவித்துக் கொடுத்தால்... 'ஓகோ... உலகம் இப்படிப்பட்டவங்களை உடையது; அல்லது, உலகத்துல இப்படிப்பட்டவங்க இருக்காங்க' என்று வாக்கியத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். 'உலகம்' என்பதுதான் எழுவாய்; இந்தச் சொல்லைத் தருவிக்க நமக்குப் பரிமேலழகரின் துணையல்லவா தேவைப்படுகிறது!
"அவர் உவமையா சொல்ற பொருள் எல்லா காலத்துக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்னியே, இங்க இவர் காட்ற தேரை யாராவது பாத்திருக்காங்களா? அட அமெரிக்கால வேணாம். ஒங்க இந்தியால யாராவது பாத்திருந்தா சொல்லுங்க". இதத்தானே கேட்க விரும்பறீங்க? உருளுதல் என்று அங்கே ஒரு அடைமொழி கொடுத்திருக்கிறாரா? ஏதோ ஒன்று உருளுகிறது, ஓடுகிறது, இயங்குகிறது என்று புரிந்துவிட்டதல்லவா? அடுத்த 'க்ளூ' 'பெரும்' இந்த தேர் எப்படி இருக்கும்னு நான் பாத்ததில்லதான். ஆனா இது ஒரு பெரிய ஸ்டரக்சர் என்று புரிந்துவிட்டது.
அடுத்ததாக, இது உருண்டு ஓடும் என்பது புரிகிறது. அச்சாணி என்று வேறு சொல்கிறார். அப்படியானால், இதற்கு அச்சாணி மட்டுமல்லாமல், சக்கரமும் இருந்தே ஆக வேண்டும். எனவே, இவர் ஏதோ ஒரு வாகனத்தைப் பற்றிதான் பேசுகிறார். அந்த வாகனம் மிகப் பெரிய வாகனமாக இருக்க வேண்டும். அவர் காலத்தில் தேர் என்றால் என் காலத்தில் ட்ராக்டர், டம்ப்பர், புல்டோஸர், பொக்லைன் என்று எத்தனை இல்லை? ஏன்? பெரிய வாகனங்களுக்கு மட்டும்தான் சக்கரமும் அச்சாணியும் இருந்தாக வேண்டுமா? 'கட்டவண்டி கட்டவண்டி, கடயாணி கழண்ட வண்டி' என்று பாடுகிறார்களே, அந்தக் கட்டைவண்டிகளுக்கும் வேண்டும்; குழந்தைகளின் நடைவண்டிக்கும் வேண்டும். கடையாணி, இருசு என்பதெல்லாம் அச்சாணியின் மற்ற பெயர்கள். தேர் இருக்கும் இடத்தில் இவற்றை இடம் மாற்றி வைத்துவிட்டால் புரிந்துவிடுகிறது. அவ்வளவுதானே! இல்ல. இன்னொண்ணையும் கவனிக்க வேண்டும் என்று யாரோ சொல்கிறார்கள். எதைக் கவனிக்க வேண்டுமாம்? 'உருள்' என்ற சொல்லை. அதாவது, இவர் பேசுகின்ற அந்தப் பெரிய வாகனம் இப்போது நின்ற நிலையில் இல்லை. இயங்கிக் கொண்டிருக்கிறது. உருளுகின்ற பெரிய தேர். அது உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
'எவ்வளவு பெரிய தேராக இருந்தாலும், அல்லது மிகச் சிறிய நடைவண்டியாக இருந்தாலும், அச்சாணி இல்லாவிட்டால் ஒண்ணும் வேலைக்காவாது அப்பு' என்று பேரக்குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல் சொல்லிக் கொடுக்கிறார். ஆகவே, அச்சாணி என்னவோ உலகமகா முக்கியத்துவமுள்ள ஒரு விஷயம் போலிருக்கிறது. இந்த உலகத்தில் 'அச்சாணி அன்னார்' உள்ளார்கள் என்று சொல்கிறாரே, அவர்கள் எல்லோரும் அதிமுக்கியமான, இன்றி-அமையாத மனிதர்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டுவிடுவோம். அந்த 'இன்றி-அமையாத' என்ற சொல்லின் ஆழத்தைதான் கொஞ்சம் பாருங்களேன். 'நீரின்றி அமையாது உலகு' என்றாரே, அங்கே இந்த 'இன்றி-அமையாத' என்ற ஆட்சி ஒளிந்துகொண்டிருக்கிறது. 'எது இல்லாவிட்டால் ஏதொன்றும் அமையாதோ, அது இன்றி-அமையாதது.' இந்த நோக்கில் வைத்து இவர் பேசும் அச்சாணியைக் கொஞ்சம் பிச்சாணியாக்கலாமா? அதாவது இந்த ஆணியக் கொஞ்சம் பிச்சிப் போட்டு யோசிக்கலாமாங்கறேன். 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்று இன்னொரு குறளிலும், 'பீலிபெய் சாகாடும் அச்சிறும்' என்று மற்றொரு குறளிலுமாக இந்த அச்சாணியை மொத்தம் மூன்று குறட்பாக்களில வைத்து மூன்று வெவ்வேறு கோணங்களில்--perspective--அச்சாணியின் தன்மைகளைப் பேசியிருக்கிறார். எனில், இந்த 'உருள்பெரும் தேர்க்கு அச்சாணி' இருக்கிறதே, இந்த அச்சாணியும், உழுவார் உலகத்தார்க்கு ஆணியில் உள்ள அச்சாணியும் ஒரே தன்மையை உடையன அல்ல. அப்படி என்ன வேறுபாடு என்கிறீர்களா?
இப்போதுதான் சிக்கலின் முதல் நுனியைப் பிடித்திருக்கிறேன். கொஞ்சம் காத்திருங்கள். அல்லது கூடவே சிந்தியுங்கள். திருக்குறளைச் சிந்திப்பதே உள்ளத்தையும் அறிவையும் ஒட்டுமொத்தமாக நிறைத்துவிடும் அனுபவம். ஒருமாத காலம் அப்படிக் கொஞ்சம் இருந்துதான் பார்ப்போமே!
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |