வீணை எஸ்.பாலசந்தர்
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர் எஸ். பாலசந்தர். சிறந்த வீணை வித்வானான இவர் 'வீணா சக்ரவர்த்தி', 'இசைக்கடல்', 'நாதயோகி' என்றெல்லாம் போற்றப்பட்டவர். இசைத்துறையிலும், திரைத்துறையிலும் நிகரற்ற சாதனை படைத்த பாலசந்தர், ஜனவரி 18, 1927 அன்று சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் அய்யர்-பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தோர் இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பள்ளிப்படிப்பு மயிலையின் புகழ் பெற்ற பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில். தந்தை சுந்தரம் ஐயர் ஒரு வக்கீல். இசை ஆர்வலர். இசைத்துறை ஜாம்பவான்கள் பலர் அவருக்கு நெருங்கிய நண்பர்கள். மயிலாப்பூர் சங்கீத சபா இருந்த தெருவில் அவர் குடியிருந்ததால் அடிக்கடி இசைக்கலைஞர்கள் அவரது வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். பாலசந்தரின் மூத்த சகோதரர் எஸ். ராஜம் இளவயதிலேயே மிகுந்த இசையார்வம் கொண்டவராக இருந்தார். பாலசந்தர் முதலில் கஞ்சிரா வாசிக்கத் துவங்கி, பிறகு ஹார்மோனியம், தபலா, புல்புல்தாரா, மிருதங்கம் எனப் பல்வேறு வாத்தியங்கள் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். சகோதரர் ராஜத்தின் கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசிக்கத் தொடங்கி, செம்பை, அரியக்குடி, டைகர் வரதாச்சாரியார், மாலி, மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர் எனப் பலரது கச்சேரிகளுக்கும் 'சந்துரு' பக்கம் வாசித்தார்.

பிரபல ஹிந்திப் பட இயக்குநர் வி. சாந்தாராம், 1936ல் 'சீதா கல்யாணம்' என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் பாலசந்தரின் தந்தை சுந்தரம் ஐயர் தசரதராகவும், சகோதரர் ராஜம் ராமராகவும், சகோதரி ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். இதில் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகத் திரையில் தோன்றினார் பாலசந்தர். அதுதான் முதல் திரை அனுபவம். தொடர்ந்து 'காமதேனு' (1941), 'ரிஷ்யசிருங்கர்' (1941), 'நாரதர்' (1942) போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிலும், தன் உயர் கல்வியிலுமே கவனம் செலுத்தினார். அண்ணன் ராஜத்துடன் இணைந்து நாடெங்கிலும் கச்சேரிகள் செய்தார். ஒருமுறை கச்சேரிக்காக கராச்சி சென்றிருந்த போது 'சிதார்' ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதை வாசித்துப் பழகினார். அவரது முதல் சிதார் கச்சேரி சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது. தொடர்ந்து சில கச்சேரிகள் செய்தார். ஆனால் கீர்த்தனைகளை பாவத்துடன் வாசிக்க சிதார் உதவவில்லை என்பது அவர் கருத்தாக இருந்தது. ஆகவே வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 1943ல் மயிலையில் இவரது முதல் வீணைக் கச்சேரி அரங்கேறியது. திருவாலங்காடு சுந்தரேசய்யர் வயலின் வாசிக்க, ராம்நாட் ஈஸ்வரன் மிருதங்கம் வாசித்தார். தொடர்ந்து வீணைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

இந்நிலையில் மீண்டும் திரைப்பட ஆர்வம் வந்தது. 1948ல் 'இது நிஜமா?' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடித்ததோடு மட்டுமல்லாமல் திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இணை இயக்கம் எனப் பல பொறுப்புகளை மேற்கொண்டார். பி.யூ.சின்னப்பா நடித்த 'உத்தமபுத்திரன்' தமிழில் முதல் இரட்டை வேடம் இடம்பெற்ற வரலாற்றுப் படம் என்றால், 'இது நிஜமா' தமிழில் முதல் இரட்டை வேடம் இடம்பெற்ற சமூகப்படமாகும். தொடர்ந்து 'என் கணவர்' என்ற படத்தை இயக்கினார். அவர் இயக்கத்தில் வெளிவந்த 'கைதி' (1951) அக்காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் என்று பெயர் பெற்றது. 'ராணி' என்ற படத்தில் பானுமதியுடன் இணைந்து நடித்தார். ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக அறிமுகமான 'ராஜாம்பாள்' படத்தில் வில்லன் பாலசந்தர். 'டாக்டர் சாவித்திரி' படத்தில் குணச்சித்திர வேடம். 'பெண்' படத்தில் ஜெமினிகணேசனுக்குத் தோழனாக, நகைச்சுவை வேடம். தொடர்ந்து 'இன்ஸ்பெக்டர்', 'கோடீஸ்வரன்', 'மரகதம்' (கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலைத் தழுவியது) போன்ற படங்களில் நடித்தார். கே.ஆர்.ராமசாமி-ராஜசுலோசனா நடித்த 'அவன் அமரன்' படத்தின் இயக்கமும் பாலசந்தர்தான்.

பாலசந்தர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் 'அந்தநாள்'. படத்தில் ஏராளமாகப் பாடல்கள் இடம்பெற்ற காலத்தில் பாடலே இல்லாமல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது அப்படம். சிவாஜி அதில் வில்லனாக நடித்திருந்தார். 'ஃப்ளாஷ்பேக்' உத்தியைப் பயன்படுத்திச் சிறப்பாக உருவாக்கப்பட்ட அப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய 'அவனா இவன்?' புதுமைக்காக அக்காலத்தில் பேசப்பட்டது. மற்றுமொரு புதுமைப்படைப்பு 'பொம்மை'. ஆங்கிலப் படப் பாணியில் அதை இயக்கியிருந்த அவர், திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். படத்தின் இறுதிக் காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு அவர், படத்தின் கலைஞர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் காட்சி திரையுலகம் சந்தித்திராத ஒன்று. 1965ல் வெளியான 'நடு இரவில்' தான் அவர் கடைசியாக இயக்கியது. சினிமாவே தன்னை ஆக்ரமித்துக் கொண்டதால், அதிலிருந்து விலகிக் கர்நாடக சங்கீதத்துக்கே வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.

கர்நாடக இசையின் சிறப்பு மிக்க அம்சமான கமகங்களை வெளியிட வீணையே சிறந்தது என்று பாலசந்தர் கருதினார். அதில் பல்வேறு ஆய்வுகள் செய்து அவர் உருவாக்கிய பாணிதான் காயகி பாணி. வாய்ப்பாடு பாடுவது போல் வீணையையும் பேச வைத்தவர் எஸ். பாலசந்தர் என்று சொன்னால் அது மிகையல்ல. 1962ல் அமெரிக்காவில் இருந்த 'ஆசிய சொசைட்டி' பாலசந்தர், உமையாள்புரம் சிவராமன், புல்லாங்குழல் ரமணி, வேலூர் ராமபத்ரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த 'சங்கீத மெட்ராஸ்' என்னும் இசைக் குழுவை கச்சேரி செய்ய அழைத்தது. அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தினர். பாரதத்தின் பாரம்பரியமான கர்நாடக இசை பற்றி அவர்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அக்கச்சேரிகள் அமைந்தன. லாஸ் ஏஞ்சலஸின் புகழ்பெற்ற ரிச்சர்ட் பாக் இக்கச்சேரிகளைப் பதிவு செய்து அக்காலத்தில் LP Record ஆகக் கொண்டு வந்தார். 1965ல் ரஷ்யா சென்று பாலசந்தர் நிகழ்த்திய கச்சேரிக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. தொடர்ந்து ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, ஃபிரான்ஸ், சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தார்.

"வீணை என்றால் பாலசந்தர்; பாலசந்தர் என்றால் வீணை" என்று அவர் போற்றப்பட்டார். அவருக்கு குரு என்று யாரும் இல்லை. டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், டி.என். ராஜரத்னம் பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேச ஐயர், வீணை தனம்மாள் பலரது கச்சேரிகளைக் கேட்டு தனது ஞானத்தை வளர்த்துக் கொண்டார். இதுபற்றி அவர், "எனக்கு குரு என்று யாரும் கிடையாது. I only say I had manaseega reference, no manaseega guru" என்று குறிப்பிட்டிருக்கிறார். "வீணையில் பாலசந்தர் ஒரு அசகாய சூரன். நான்கு ஸ்டைல்களிலும் அவர் அளவுக்கு யாரும் சாதித்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம்" என்கிறார் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன். "கச்சேரி நடக்கும்பொழுது யாராவது குறுக்கே பேசினால் அவருக்குப் பிடிக்காது. முறைத்துப் பார்ப்பார். அவர்கள் உடனே பேசுவதை நிறுத்தி விடுவர். கீர்த்தனை இல்லாமல், ஸ்வரங்கள் இல்லாமல் ராகங்களை மட்டுமே அவர் வாசிப்பார்" என்று டி.கே. பட்டம்மாள் குறிப்பிடுகிறார்.

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டிருந்தார் பாலசந்தர். அதனால் அவருக்கு சக இசைக் கலைஞர்களுடன் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக அவர் எழுதிய நூல் ஒன்றில், "கேரள சமஸ்தான ராஜாவான சுவாதித் திருநாள் என்றொருவர் இல்லவே இல்லை; அவர் எழுதியதாகக் கூறப்படும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் அனைத்தும் அவர் சமஸ்தானத்துக் கலைஞர்கள் அமைத்தது" என்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். அது பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது. அதுபோல மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயர், "மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக் கச்சேரிகள் இல்லை. அப்படி நடத்தினால் அது சோபிக்காது" என்று ஒரு கூட்டத்தில் பேசினார். உடனே பாலசந்தர், "மிருதங்கம் இன்றி வீணைக் கச்சேரி" என்று அறிவித்து அவ்வாறே அக்கச்சேரியை பல்வேறு ராகங்களைக் கொண்டதாக அமைத்துச் சிறப்பாக நடத்தியும் காட்டினார். நிகழ்ச்சியின் இறுதியில், "ஒரு மிருதங்க வித்வான் 'மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக்கச்சேரி நடக்காது' என்று சொன்னாராம். அதைப் பொய் ஆக்குவதற்காகவே இன்று மிருதங்கம் இன்றி வாசித்தேன்" என்று பேசினார்.

இவருடைய வீணை இசை மொத்தம் 25 நீண்ட நேர இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளது. மேளகர்த்தா ராகங்கள் 72ஐயும் 12 இசைத் தட்டுகளாக இவர் வெளியிட்டுள்ளார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவக்ரக கிருதிகளை காயத்ரி நாராயணனுடன் இணைந்து சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில கையேட்டு விளக்கத்துடன் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையுலகில் அக்காலத்தில் அதிகம் எல்.பி. ரெகார்ட் வெளியிட்டவர் பாலசந்தர்தான். சென்னை கிருஷ்ணகான சபாவில் 45 ராகங்களைக் கொண்டு கச்சேரி செய்திருக்கிறார். மத்திய கர்நாடக சங்கீதக் கல்லூரி மாணவர்களுக்கு இசைப் பயிலரங்குகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறார். தமிழக அரசின் 'கலாசிகாமணி' (இன்றைய கலைமாமணி) மற்றும் பல அமைப்புகளிடமிருந்து 'வீணா யோகி', 'வீணா வித்யாதர', 'அபிநவ நாரத', 'வீணா வரப்பிரசாதி', 'யாழிசை வல்லுனர்', 'வீணை செம்மல்', 'வீணா வாத்ய வல்லப', 'நாத ப்ரம்மம்', 'இசைக்கடல்', 'முத்தமிழ் கலைமணி', 'மதுர ஞான கான வித்தகர்' என ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்றிருக்கிறார். உலகின் பல அமைப்புகள் இவரை கௌரவித்துள்ளன. 'சங்கீத நாடக அகாதமி' விருது, 'பத்மபூஷன்' போன்றவையும் இவருக்கு வழங்கப்பட்டன. சீனாவில் உள்ள அகில உலக நுண்கலை கலாசார அகாதமி இவருக்கு 'டாக்டர்' பட்டம் வழங்கியது.

புகைப்படங்கள் எடுப்பதிலும் பாலசந்தர் ஆர்வம் மிக்கவர். ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் வீரரும்கூட. தன் இசைபற்றி பாலசந்தர், "என்னுள் பூட்டிக் கிடந்த இசைச் செல்வங்கள் ஏதொவொரு தெய்வீக உந்துதலால் வெளியே பாய்ந்து வருகின்றன" என்று சொல்லியிருக்கிறார். இசையைப் பொருத்தவரை சில பிடிவாதமான கொள்கைகளை அவர் கொண்டிருந்தார். "இசை என்பது ஒரு தெய்வீகக் கலை. அதில் கண்டபடி புதுமைகளைப் புகுத்துவது சரியல்ல. ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையில் மாற்றம் செய்வது அதன் தரத்தைக் குறைக்கும். தூய இசையை ரசிப்பதற்கேற்றவாறு ரசிகர்களின் தரத்தை, அவர்களது இசையறிவை உயர்த்துவதுதான் இசைக் கலைஞனின் மிக முக்கியக் கடமை" என்பது அவர் கருத்து. மத்தியபிரதேசத்தில் உள்ள பிலாய் நகரில் இருந்த குணால் பல்கலைக் கழகத்தின் கௌரவ இசைப் பேராசிரியராகவும் இருந்தார். கச்சேரி நிகழ்த்துவதற்காக அங்கு சென்றவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஏப்ரல் 13, 1990 அன்று காலமானார்.

காயத்ரி நாராயணன், ஜெயந்தி குமரேஷ், எஸ்.வி. மாதவன் ஆகியோர் அவர் வழிவந்த சிஷ்யர்களாவர். பாலசந்தரின் மனைவி பெயர் சாந்தா. இந்த தம்பதிகளின் ஒரே மகனான எஸ்.பி.எஸ். ராமன் புகழ் பெற்ற வக்கீல். 'ரேணி குண்டா' படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, வீணை பாலசந்தரின் கொள்ளுப்பேரன்.

(தகவல் உதவி: Great Maestros of Carnatic Music: Veena S.Balachander - Documentary flim மற்றும் சு.ரா. எழுதிய 'இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்')

பா.சு.ரமணன்

© TamilOnline.com