செட்டிநாட்டின் கானாடுகாத்தானில் பிறந்து சுவாமிமலையிலும், சென்னையிலும் வளர்ந்தவர். நியூயார்க்கிற்குச் சென்று தமிழன் பெருமையைப் பரப்பியவர். ஐ.நா. சபையில் பணியேற்று, 96 நாடுகளுக்கு மேல் பயணம் செய்தவர். லண்டனில் படித்த போது பி.பி.சி. தமிழ்ச் சேவைக்காகப் பணியாற்றியிருக்கிறார். தி ஹிந்து இதழுக்காக இதழியல் பணிகள் செய்திருக்கிறார். வாடிகனுக்குச் சென்று போப்பைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அமெரிக்காவின் முதலும் முன்னோடியுமான 'வல்லப மகா கணபதி' ஆலயத்தை நிறுவியர். லண்டனில் பாரிஸ்டர் ஆஃப் லா படித்தவர். புகழ்பெற்ற நியூ யார்க் யுனிவர்சிடியில் டாக்டர் பட்டம் பெற்றவர். பல்வேறு ஆலயப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பொறுப்பேற்றுச் செய்தவர். 'வாழ்க்கைப் பயணமும் அதற்கு அப்பாலும்' என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து....
*****
கே: அமெரிக்காவின் முதல் இந்து ஆலயமான வல்லப மகா கணபதி ஆலயம் தோன்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் நீங்கள். அந்த எண்ணம் எப்படி வந்தது? ப: அமெரிக்காவைப் பொறுத்தவரை 1970வரையில் கோயில்கள் ஏதும் இல்லை. இந்தியர்கள் தத்தம் வீட்டில் பஜனை, வழிபாடு செய்தார்கள். எனக்கும் என் மனைவிக்கும் அது பெரிய மனக்குறையாக இருந்தது. 1975ல் நான் தமிழகம் வந்தபோது அமிர்தகடேசன் என்பவரிடம் நாடி ஜோதிடம் பார்த்தேன். அதில், "ஐங்கரத்தோன் 'ந' என்னும் நகரத்தில் சிறு இடம் கொள்வார். இந்தத் திருப்பணியை நீ எடுத்துச் செய்வாய்" என்று வந்தது. எனக்கு வியப்பு. எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கட்டும் என்று இருந்து விட்டேன். நியூ யார்க் மாகாணத்தின் குவீன்ஸ் கௌன்டியில் ஒரு ரஷ்ய சர்ச் விற்பனைக்கு இருப்பதாக என் மனைவி சொன்னார். அதை வாங்கி ஓர் ஆலயம் எழுப்பினால் என்ன என்றார். நாங்கள் இருவரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரிடமும் அதுபற்றி எடுத்துச் சொன்னோம். அப்போது ஐ.நா.வின் துணைச் செயலராக சி.வி. நரசிம்மன் இருந்தார். நடிகை பத்மினி அப்போதுதான் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா வந்திருந்தார். இருவரும் இதில் ஈடுபாடு காட்டினர். அமெரிக்கத் தமிழர் பலரும் ஆர்வத்துடன் நிதி அளித்தனர். நிதி திரட்டுவதற்காகப் பத்மினி பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்தார். அப்படித்தான் அந்தப் பணி ஆரம்பித்தது.
கே: இப்போதுள்ளது போன்ற வசதிகள் இல்லாத சூழலில் எப்படி அதைச் செய்ய முடிந்தது? ப: இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. பலரும் ஒத்துழைத்தார்கள். குறிப்பாக ஆந்திர முதலமைச்சர், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஸ்தபதிகள், கமிஷனர் புருஷோத்தம நாயுடு எனப் பலர் இதற்காக உழைத்தார்கள். இவை எல்லாவற்றையும் விடப் பெரிய விஷயம் மஹா பெரியவாளின் ஆசி. நான் பொறுப்பேற்றுப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது, என்னுடன் ஐ.நா.வில் பணியாற்றிய ஒரு நண்பர் எதிர்ப்புத் தெரிவித்தார். காரணம், நான் அசைவம் சாப்பிடுபவன், பார்ட்டிகளில் மது அருந்துபவன் என்பதால். அவர் நினைத்ததும் ஒருவிதத்தில் சரிதான். நமக்கு குடும்பம், குழந்தைகள் என்று இருக்கிறது. அதனால் காஞ்சி மஹா பெரியவரைச் சந்தித்து, அவர் உத்தரவின்படிச் செய்யலாம் என நினைத்தேன். அதன்படி எதிர்த்த நண்பரையும், மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதையரின் சிஷ்யர் விஸ்வநாத ஐயரையும் அழைத்துக் கொண்டு பெரியவரைப் பார்க்கப் போனேன்.
என்னுடைய ஆல்பத்தை எடுத்துப் பெரியவர் பக்கத்தில் வைத்த விஸ்வநாதனின் மாமனார் என்னைப் பற்றி, நான் செய்யும் கோயில் பணிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். உடனே தீர்க்கமாக அவரை ஒரு பார்வை பார்த்த பெரியவர், "நீங்கல்லாம் தள்ளிப் போங்கோ. டேய், இங்க வாடா, வந்து இங்க உட்கார்" என்று என்னை கூப்பிட்டார். நானும் பயபக்தியுடன் அவர் அருகில் போய் அமர்ந்தேன். கோவில் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனச் சொல்ல நினைத்து நான் பேச்சை எடுக்கும் முன்பேயே, அவர் மிகவும் உற்சாகமாக, ஆலயம் பற்றி, அதன் அமைப்பு பற்றி, எது எது எப்படி எல்லாம் அமையவேண்டும் என்பது பற்றியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பல உபதேசங்கள் செய்தார். கோயில் பணி செய்ய என்னை ஆசிர்வதித்ததுடன் அது நல்லபடியாக நிறைவேறப் பல ஏற்பாடுகளையும் செய்தார். கோயில் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டு, 1977, ஜூலை 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. அருள்திரு பன்றிமலை சுவாமிகள் வந்து நடத்திக் கொடுத்தார்.
கே: நியூ யார்க் ஆலயத்தை அடுத்து பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா மற்றும் ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம் உருவாக்கத்திலும் பங்காற்றியிருக்கிறீர்கள் அல்லவா? ப: நான் New york Hindu Temple Society செயலராக இருந்தபோது திருப்பதி தேவஸ்தானத்திற்கு, இங்கு வெங்கடாசலபதிக்கும் ஒரு ஆலயம் அமைக்கலாம் என்று ஒரு கடிதம் எழுதினேன். என் சகோதரர் வள்ளியப்பன் அப்போது சித்தூர் மாவட்டக் கலெக்டராக இருந்தார். அவர் அதைப் பரிந்துரைத்தார். தேவஸ்தானத்தினர் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் நியூ யார்க் வந்து இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். பின்னர் குழு அமைத்து நிதி திரட்டினோம். திருப்பதி தேவஸ்தானமும் நிதி ஒதுக்கியது. திருப்பதி கோயிலில் என் அண்ணா அதிகாரியாக இருந்தார். அதே போல புருஷோத்தம நாயுடு கமிஷனராக இருந்தார். அவர்களும், ஆந்திர அரசும் உதவியதால் எல்லாம் சாத்தியமானது. சிற்பி கணபதி ஸ்தபதியின் வழிகாட்டலில் ஆலயம் அமைக்கப்பெற்று ஜூன் 8, 1977ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹூஸ்டன் மீனாட்சி ஆலயமும் அதுபோல் அமைந்ததுதான். அது எனது தாயாரின் பெயரில் அமைந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். கணபதி ஸ்தபதி, முத்தையா ஸ்தபதி இருவரும் சேர்ந்து இதனை வடிவமைத்தார்கள். ஜூன் 1982ல் இதற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கே: சாதாரண கிராமத்தில் பிறந்த நீங்கள் ஐ.நா. வரை எப்படி உயர முடிந்தது? ப: அதற்குக் காரணம் என் தாயார்தான். என் வாழ்க்கைக்கும் உயர்வுக்கும் அடிப்படை கல்வி. அதற்கு என்னை ஊக்குவித்தவர் என் தாயார் மீனாட்சி. என் தந்தையார் சுகவாசியாக இருந்தவர். தாயார்தான் எங்களை வளர்த்து ஆளாக்கினார். அவருக்கு கல்விதான் முக்கியம். நாங்கள் சுவாமிமலையில் வசித்தோம். என் தாத்தாவின் அப்பாதான் சுவாமிமலை கோயிலைக் கட்டியவர். அதற்கு அருகில் எங்களுக்குச் சொந்தமான ஒரு விடுதிகூட இருந்தது. நான் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் படித்தேன். பின்னர் சாந்திநிகேதனில் உயர்நிலைக் கல்வி. அதன்பிறகு தியோசஃபிகல் சொசைட்டியில் படித்தேன். பின், பிரசிடென்சி காலேஜில் அரசியல் விஞ்ஞானம் படித்தேன். பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் முதல் மாணவனாக வந்ததால் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. தமிழகத்தில் முதல் மாணவனாக மட்டுமல்ல; சிறந்த உலகக் குடிமகனாகவும் விளங்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்பட்டார்.
படிப்பை முடித்ததும் ஹிந்துவில் வேலை கிடைத்தது. ஹிந்து நிறுவனரின் மகன் பார்த்தசாரதி என் நண்பர். அவர் விருப்பப்படி ஹிந்துவில் சில காலம் பணிபுரிந்தேன். வள்ளல் அழகப்பர் என் மேற்கல்விக்கு உதவினார். படிப்பதற்காக இங்கிலாந்து சென்றேன். லா முடித்தவுடன் அங்கிருந்து திரும்பி வந்தேன். பார்த்தசாரதி மூலம் மீண்டும் ஹிந்துவில் பணியாற்ற அழைப்பு வந்தது. அப்போது பொறுப்பில் இருந்தவர், "இவ்வளவு படித்துவிட்டு ஏன் இந்த வேலைக்கு வருகிறீர்கள்?" என்று கேட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் எழுந்து போய்விட்டேன். பின் பாம்பேயில் சர்தார் படேல் ஆரம்பித்த 'பாரத்' என்ற இதழில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 75 ரூபாய். அங்கே ஆர்.வி. மூர்த்தி என்பவர் இருந்தார். அவர் என்னை, துளசிதாஸ் கிலால் சந்த் நிறுவனத்தில் ரிசர்ச் ஆஃபிஸராகச் சேர்த்து விட்டார். மாதச் சம்பளம் 250/- ரூபாய். துளசிதாஸ் ரொம்ப சுவாரஸ்யமான மனிதர். கோடீஸ்வரர். அவர் செலவுக்கு என்று எவ்வளவு பணம் வேண்டுமானாலும் - எட்டாயிரம், பத்தாயிரம் என்று - கொடுப்பார். சம்பளம் என்று மட்டும் கேட்கக் கூடாது. அவருக்குக் கோபம் வந்து விடும். பின்னர் அவர் எம்.பி.யாகி டெல்லிக்குச் சென்றுவிட்டார். அப்போதுதான் எனக்கு ஐ.நா. பணி வந்தது.
கே: அதைப்பற்றிச் சொல்லுங்கள்... ப: அப்போது 28 வயது. ஐ.நா.வில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிந்தேன். விண்ணப்பித்தேன். அப்போது ஐ.நா.வின் பாங்காக் கிளையில் லோகநாதன் என்ற தமிழர் இருந்தார். அந்த வேலைக்காக ராமசாமி முதலியார் என்னை நேர்காணல் செய்தார். எனது திறமையைக் கண்டவர் உடனே என்னை அப்பாயின்ட் செய்துவிட்டார். ஏழு வருடம் அங்கு இருந்தேன். பின் நியூ யார்க் போனேன். வேலை நிமித்தமாக உலகின் பல நாடுகளுக்கும் சுற்றினேன். நியூ யார்க்கில் வேலை பார்த்துக் கொண்டே பிஎச்.டி. செய்துவிட்டேன். முதலில் Program officer ஆகத் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தேன். பின் Special Assistant to the Director; Special Assistant to the Commissioner என படிப்படியாக உயர்ந்து, இறுதியில் Director in charge of Water Resourcement ஆனேன். என்னுடைய பணிக்காலத்தில் நிறைய இந்தியர்களைப் பணியமர்த்தினேன்.
கே: சென்னையிலும் ஒரு கோவில் கட்டியிருக்கிறீர்களே.... ப: ஆமாம். இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் மஹா பெரியவாளைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது வழக்கம். அப்படி ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, "முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஓரிடத்தில் இருக்கிறது. ஆறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றேன். உடனே பெரியவர் சிரித்துக் கொண்டே, "ஆமாம். நன்னாத்தானிருக்கும். நீ கட்டு. நான் உனக்கு நிலம் வாங்கித் தருகிறேன்" என்றார். பின் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடம் சொல்லி பெசன்ட் நகர் அருகே கடற்கரையையொட்டி ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கோயிலுக்கு அளிக்கச் செய்தார். அங்குதான் முழுக்க முழுக்கக் கல்லால் ஆன அறுபடை வீடு கோயில் தற்போது இருக்கிறது. கட்டிமுடிக்க 25 வருடங்கள் ஆயின. அருகிலேயே பாம்பன் சுவாமிகளின் சமாதி ஆலயம் இருக்கிறது. அந்தக் கோவிலை என்னுடைய சகோதரர், சகோதரி ஆகியோர் பொறுப்பில் விட்டுவிட்டேன். இப்போது அதை நிர்வகிக்கும் டாக்டர். சுந்தரம் Royal Science Society உறுப்பினர். சர். சி.வி. ராமனின் மாணவர். மிகப் பெரிய விஞ்ஞானி.
கே: தற்போது என்ன செய்கிறீர்கள்? ப: குடும்பத்திலும் சரி, தொழிலிலும் சரி என்னால் முடிந்த நற்பணிகளைச் செய்தேன் என்ற மனத் திருப்தி உண்டு. ஓய்வு பெற்று 28 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. மென்மேலும் பணத்தைத் துரத்திக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் என் மனதுக்குப் பிடித்த நற்பணிகளைச் செய்கிறேன். ஒருமுறை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார், "I am seventy seven years young" என்றார் மிகவும் கம்பீரமாக. அது எனக்கு நினைவுக்கு வருகிறது. வயது ஒரு சுமையல்ல. வயது ஒரு சுமை என நினைக்கும் மனம்தான் நமக்குச் சுமை. நான் இப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். Because I am eighty seven years young.
தளர்ச்சியோ, அயர்ச்சியோ இல்லை டாக்டர் அழகப்பா அழகப்பனிடம். ஆலயப் பணிகளின் அருமையை நாம் வியந்து சொன்னாலும், "நான் என்ன செய்திட்டேன். எல்லாம் என் அம்மாவின் ஆசி. முன்னோர் செய்த புண்ணியம். பெரியவாளின் கருணை" என்கிறார். "எனக்கு மிகவும் பிடித்தவர் சுவாமிநாத சுவாமிதான். காரணம் அவர் ஆசிரியர். அப்பனுக்கே பாடம் சொன்னவர். 'குரு' ஸ்தானம் எப்போதுமே உயர்ந்தது. சிறுவயதில் அங்கு வளர்ந்த எனக்கு முருகனின் அந்த 'உரு'வின் மீது அலாதி பக்தி உண்டு. என்னுடைய இளவயதில் முருகனின் அருட்காட்சி கிடைத்தது. மீண்டும் அந்தக் காட்சி எப்போது கிடைக்கும் என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தினமும் முருகனை வழிபாடு செய்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியுடன். அந்த உருக்கமான தருணத்தில் நன்றி கூறி விடை பெற்றோம்.
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
ராஜாஜியுடன் இரண்டு நிமிடம்! நான் பிரசிடென்சியில் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்தேன். கல்லூரியில் பேச அழைப்பதற்காக முதல்வர் ராஜாஜியைச் சந்திக்கச் சென்றேன். அதற்கு முந்தைய நாளே அவரை எப்படிச் சந்திப்பது, என்னவெல்லாம் பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தேன்.
"வாங்கோ, என்ன வேணும்?" என்றார் ராஜாஜி.
"கல்லூரியில் ஆண்டுவிழா நடக்க இருக்கிறது. அதற்கு நீங்கள் தலைமை தாங்கிப் பேசவேண்டும்" என்றேன்.
"என்றைக்கு, எத்தனை மணிக்கு?" என்று கேட்டார்.
சொன்னேன். குறித்துக் கொண்டார். பின் "சரி போய்ட்டு வாங்கோ" என்று கைகூப்பி விட்டார்.
மற்றபடி ஒரு பேச்சில்லை. விசாரிப்பில்லை. மொத்தத்தில் இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது அந்தச் சந்திப்பிற்கு. அதிலிருந்து நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றால், உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நேரம் பொன் போன்றது; அதை வீணாக்கக் கூடாது என்று. அதுமுதல் நானும் நேர விஷயத்தில் எப்போதும் கவனமாகவே இருக்கிறேன்.
டாக்டர் அழகப்பா அழகப்பன்
*****
ஏழாவது படை வீடு நவம்பர் 16, 2004 அன்று சென்னையில் ஏ.என்.கே. சுவாமி அவர்களிடம் மீனாட்சி நாடி பார்த்தேன். அதில் "குருவான குருவே! குமரா! கந்தா! குவலயத்தில் பன்னிரு கண்களைப் பெற்றாய். வரிசை பெற இனியோனும் ஆனாய் நீயே. வன்மை பெற ராசியது பன்னிரண்டும் ஆக்கி, வரிசை பெற ஆறுமுகமாகி இரண்டாக்கி முகம் ஆறும் கிரகங்கள் வரிசை பெற வேரோடு ஏழும் ஆச்சு என்று அருள்புரிவாய் முருகா கந்தா அழகப்பன் அழகப்பனுக்கே! நன்மை பெற அகத்தியர் வாக்கிதே! நன்மை பெற இதை அறிந்து நடந்துகொள் அப்பா!" என்று வந்திருந்தது. மேலும் அதில் 'அறுபடை வீடு கட்டிய நீ ஏழாவதாக ஒரு படை வீட்டையும் கட்டுவாய்' என்று வந்திருந்தது.
அறுபடை வீடுகளுக்கு நம் உடலில் உள்ள சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பும் அதன்மூலம் தெரிய வந்தது. திருப்பரங்குன்றம்: மூலாதாரம், திருச்செந்தூர்: சுவாதிட்டானம், பழனி: மணிபூரகம், சுவாமிமலை: அநாகதம், திருத்தணி: விசுத்தி, ஆக்ஞை: பழமுதிர்சோலை. ஏழாவதாக சஹஸ்ராரம் என்ற ஒன்று உள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப்பூவாக இதனைப் பெரியோர்கள் உருவகம் செய்திருக்கின்றனர். இதுதான் ஞானத்தை நல்குவது. "இதனைக் குறிக்க நீ ஒரு கோவில் கட்டு" என்று வந்தது. அதன்படி குன்றக்குடி அருகே 'மயிலாடும்பாறை' என்ற இடத்தின் எதிரே உள்ள நிலத்தை வாங்கி அங்கே ஓர் முருகன் ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன். குன்றக்குடி முருகன் வருடம் ஒருமுறை இங்கு வந்து தரிசனம் தருவார். காரைக்குடியைக் கல்வி நகரமாக்கிய அழகப்ப செட்டியார் எனக்கு குருவைப் போன்றவர். அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவர் செய்த அறப்பணியை கௌரவிக்கும் வகையிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு அங்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறேன். மிகப் பெரிய நந்தவனமும் அமைத்திருக்கிறேன். 'விசாலாட்சி அழகப்பன் தோட்டம்' என்று அதற்குப் பெயர். பிள்ளையார்பட்டி, குன்றக்குடி செல்பவர்கள் தவறாமல் அங்கு சென்று வாருங்கள்.
டாக்டர் அழகப்பா அழகப்பன்
*****
குடும்பம் எனக்கு மூன்று பையன்கள், ஒரு பெண். மூத்தமகன் டாக்டர். குமார் அழகப்பன் உலகிலேயே Emergency Medicine துறையில் முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் அழகப்பனைப் பற்றித் தென்றல் வாசகர்களுக்குத் தெரியும். கல்வியாளர். அட்வான்டேஜ் டெஸ்டிங்கின் நிறுவனர். மூன்றாவது மகன் வைரம் அழகப்பன் அட்வான்டேஜ் டெஸ்டிங் நிர்வாகத் தலைவர். பெண் மீனா சட்டத்துறை நிபுணர். விலங்குகள் நலத்தில் ஆர்வம் கொண்டு அது சார்ந்த கல்வியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். மனைவி விசாலாட்சி அழகப்பன் என் எல்லாப் பணிகளுக்கும் உறுதுணை.
டாக்டர் அழகப்பா அழகப்பன்
*****
விசாலாட்சி அழகப்பன் டாக்டர். அழகப்பா அழகப்பனின் மனைவி சாதாரண கிராமத்தில் பிறந்தவர். சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றவர். குழந்தைகளைச் சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கியவர். மன்ஹாட்டனில் ஒரு ட்ராவல் ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர் பதவி விலக நேர்ந்தது. தாமே புதிதாக ஒரு ட்ராவல் ஏஜென்ஸியைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி சிறந்த சேவைக்காக ஏர் இந்தியாவிடமிருந்து விருது பெற்றார். நியூ யார்க்கில் ட்ராவல் ஏஜென்ஸி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி இவர். புகைப்படக் கலையிலும் தேர்ந்தவர். New york Institute of Photographyயின் விருதுகள் பல பெற்றவர். ஒருமுறை தமது இல்லத்திற்கு வந்திருந்த பத்மினியைப் புகைப்படங்கள் எடுத்தார். அவற்றின் பிரதிகளை விற்று வல்லப மகா கணபதி ஆலயத்திற்கு நிதி திரட்டப்பட்டது. |