அமெரிக்காவைப் பொருத்தவரை சந்தர்ப்பத்தின் சூழ்ச்சியால் அல்லாது தேர்தலின் மூலம் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபராக வர முடியாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருந்தது இர்விங் வாலஸ் எழுதிய 'தி மேன்' என்ற முன்னாள் புதினம் ஒன்று. ஆனால், அடுத்தடுத்து இரண்டு முறை ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை உலகுக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டார்கள். முதல் வெற்றி அது. அடுத்த வெற்றி என்னவென்றால் வெற்றி பெற்றபின் ஒபாமா ஆற்றிய உரை. அதில் அவர், "என்னை எதிர்த்துப் போட்டியிட்டவரும் அமெரிக்காவை உயர்த்த வேண்டும் என்னும் அதே லட்சியத்துக்காகத்தான் போட்டியிட்டார்" என்று சற்றும் காழ்ப்போ, கசப்போ தொனிக்காமல் பேசியது மானுடத்தின், நல்லெண்ணத்தின் வெற்றி. ஒருவர் ஆளும்போது மற்றவர் சட்டசபைக்கே வராமல் இருப்பதும், நேரில் பார்ப்பதையே தவிர்ப்பதும், தனிநபர்த் தாக்குதல் செய்வதும் எனப் பலவகையிலும் அரசியல் அநாகரிகத்தில் ஈடுபட்டு வரும் இந்திய அரசியல்வாதிகளும் தொண்டர்களும் இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
எப்படித் தேர்தல் சமயத்தில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் நடந்தன என்பதை கவனித்தால் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும். அக்டோபர் மாத நடுவில் ஒரு காரணமுமில்லாமல் திடீரென்று கேஸலீன் விலை உயர்ந்தது. தேர்தல் முடிந்தது அதே வேகத்தில் இறங்கியும் போனது. அது மட்டுமல்ல, அறிவியல்பூர்வமாகச் செய்யப்பட்ட கணிப்புகள் ஏதோ ஒபாமாவுக்கு எதிர்த் திசையிலும் காற்று வீசுவதாகப் புள்ளி விவரங்களை அள்ளி வீசியது. ஆனால், தன் முயற்சியில் சற்றும் தளராமல் ஒபாமா தேர்தல் பணிகளை மட்டுமல்ல, சூறாவளி நிவாரணப் பணிகளையும் மிக லாகவமாகக் கையாண்டு எல்லாத் தரப்பினரின் பாராட்டுகளையும் வென்றது இன்றைக்கு வரலாறு.
*****
வானத்தில் சுழலும் கோள்களின் பார்வை மனிதனின் விதியை நிர்ணயிக்கிறது என்று நம்பாதவர்கள் கூட, அங்கே சுற்றிவரும் செயற்கைக் கோள்களின் பார்வை மிகவுயர்ந்த, தொடமுடியாத இடத்திலிருப்பவர்களின் விதியைக்கூட மாற்றியமைத்துவிடுகிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இவற்றின் உதவியால் கணநேரத்தில் பூமிக்கோளத்தைத் செய்தி சுற்றி வந்துவிடுகிறது என்பது ஒருபுறமிருக்க, தகவல் பரிமாற்றம் எதுவுமே ரகசியமில்லை என்பது மற்றொரு கசப்பான ஆனால் அசட்டை செய்ய முடியாத உண்மை. அதுதான் இந்த மின்வழித் தகவல் தொலைநுட்ப உலகின் அச்சமூட்டும் வசீகரம். எப்பேர்ப்பட்டவரின் வாழ்க்கையினுள்ளும் மூக்கை நுழைத்துப் பார்க்கும் தொழில்நுட்பமும் ஆள்பலமும் கொண்ட சி.ஐ.ஏ.யின் இயக்குனர் ஜெனரல் பெட்ரேயஸ் தானே ஒரு எக்குத்தப்பான சிக்கலில் மாட்டிப் பதவி துறக்க நேரிடும் என்று யாரால் நினைத்துப் பார்த்திருக்க முடியும்! அதன் எதிரொலியாக ஜெனரல் ஜான் ஆலன் மீதான சந்தேகங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஒரு குன்று போல உயர்ந்து நிற்பவர்களும், குன்றிமணியளவு குற்றம் செய்துவிட்டால் குன்றிப்போய் நிற்க வேண்டிவரும் என்று வள்ளுவர் கூறியது எத்தனை தீர்க்கதரிசனம்!
*****
அமெரிக்க மண்ணில் முதல் கோவிலைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்தவரும், ஐ.நா.வில் பல உயர்ந்த பதவிகளை வகித்தவருமான டாக்டர். அழகப்பா அழகப்பன் அவர்களோடான நேர்காணல் ஒரு வரலாற்றுப் பெட்டகம். சாகசம் நிறைந்த வீ.கே.டி. பாலன் அவர்களோடான நேர்காணலின் நிறைவுப் பகுதியும் நகத்தைக் கடித்தபடி வாசிக்கச் செய்யும் சுவைகொண்டது. பதின்மூன்றாம் ஆண்டில் தென்றல் காலடி எடுத்துவைக்கும் இதே இதழில் ஹரிமொழி தனது 60வது தவணையைக் கண்டு ஐந்தாண்டை நிறைவு செய்கிறது. மானுடத்தை உயர்த்திப் பிடிக்கும் கதைகளுக்கும் பஞ்சமில்லை. இந்த வரலாற்றுப் பயணத்தைத் தொடர்வோம் வாருங்கள் என்று வாசகர்களையும் விளம்பரதாரர்களையும் அழைத்தவாறு பீடு நடை போடுகிறது உங்கள் தென்றல்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறைக் கால வாழ்த்துக்கள்!
டிசம்பர் 2012 |