அரங்கேற்றம்: ஹிரண்மயி அக்கூர்
ஜூலை 7, 2012 அன்று நூபுர் டான்ஸ் அகாடமி மாணவியான ஹிரண்மயி அக்கூரின் பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமஹாலில் நடந்தேறியது. மிச்சிகனில் வசித்து வரும் ராதா மற்றும் வீரா அக்கூர் தம்பதியினர் மகள் இவர். 'சரணு சரணு' என்ற விநாயகர் துதியில் நிகழ்ச்சியைத் தொடங்கிய ஹிரண்மயி, ராகமாலிகையில் அமைந்த த்ரிதேவி தோடய மங்கலத்தில் துர்கா, லக்ஷ்மி, திரிபுர சுந்தரியைத் துதித்து, ஷண்முகப்ரியாவில் சுப்ரமணிய கவுத்துவமும் நாட்டையில் அமைந்த அலாரிப்பில் முருகனின் புகழ் வர்ணித்தும் நடனம் ஆடினார். தொடர்ந்த ஜதிஸ்வரமும், சப்தமும் விறுவிறுப்பாக வடிவமைக்கப் பட்டிருந்தன. முக்கிய அங்கமான வர்ணம் 'சகியே' எனத் தொடங்கும் ஆனந்த பைரவி வர்ணம். சவாலான அதனைத் திறம்பட ஆடி மனதைக் கவர்ந்தார். வசந்தாவில் 'நடனம் ஆடினார்', கரகரப்ரியாவில் 'திருமலைதனில் வாழும்', ஹம்சானந்தியில் புரந்தரதாசர் பதம் ஆகியவற்றை நேர்த்தியாக ஆடினார் ஹிரண்மயி. இறுதியாக ஹிந்தோள ராகத் தில்லானாவும், ராகமாலிகையில் குறவஞ்சி நடனமும் கண்ணுக்கு விருந்து.

குரு ராதிகா ஆச்சாரியா தனது நூபுர் நடனப் பள்ளியின் வாயிலாக நடனம் பயிற்றுவிப்பதோடு, 'உபாசனா', பாஞ்சஜன்யம், 'அமர் நிருத்ய கதா', 'ருத்ரா', 'சக்தி' போன்ற பல நாட்டிய நாடக நிகழ்ச்சிகளை அளித்தவர். இந்த நிகழ்ச்சியில் தனது குரு பண்டிட் வேணுகோபால் பிள்ளை அவர்களோடு இணைந்து நட்டுவாங்கம் செய்தார். ராதா பத்ரி (வாய்ப்பாட்டு), கலைமாமணி நெல்லை கண்ணன் (மிருதங்கம்), ஆர். கலையரசன் (வயலின்), ஏ.என். பாக்யலக்ஷ்மி (புல்லாங்குழல்) ஆகியோரின் திறனும் நிகழ்ச்சியைப் பரிமளிக்கச் செய்தன.

10ம் வகுப்பு பயிலும் ஹிரண்மயி படிப்பிலும், விளையாட்டுகளிலும் கூடத் திறமை பெற்று விளங்குகிறார். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் இவரது தாய்வழிப் பாட்டி ரேவதி அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சிறப்பு அம்சமாகும்.

கல்பனா ஹரிஹரன்,
ட்ராய், மிச்சிகன்.

© TamilOnline.com