அரங்கேற்றம்: ரம்யா வெங்கடேஸ்வரன்
ஆகஸ்ட் 11, 2012 அன்று ரம்யா வெங்கடேஸ்வரனின் பரத நாட்டிய அரங்கேற்றம், ஹோகசினில் (Hockessin) உள்ள டெலவர் இந்துக் கோவிலில் நடைபெற்றது. ஸ்ரீ பத்மா நிருத்யக் கலைப்பள்ளி (Shree Padma Nrityam Academy of Performing Arts, Princeton, NJ) இயக்குனரும், டாக்டர். பத்மா சுப்ரமணியம் அவர்களின் மாணவியுமான குரு பாலாதேவி சந்திரசேகரிடம் 8 ஆண்டுகள் நாட்டியம் பயின்றுள்ளார். சலங்கைபூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலாவதாக கம்பீர நாட்டை ராகப் புஷ்பாஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து வந்த விறுவிறுப்பான தத்தாகாரத்திற்கு ரம்யா அழகாக ஆடினார். இதில் ரம்யாவின் தாள ஞானம் நன்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் 'பாற்கடல் அலைமேலே' என்ற பாடலுக்கு விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ரம்யா நம் கண்முன்னே கொண்டுவந்ததுதான்.

'நீ இந்த மாயம்' என்ற தன்யாசி ராக வர்ணத்தில் கஜேந்திர மோட்சம், கோவர்த்தன மலையைத் தூக்கியது ஆகிய சம்பவங்களைச் அழகாகச் சித்திரித்தார். 'ஆனந்த நடமிடும் பாதன்' என்ற பதத்திற்கு சிவனின் ஆனந்த தாண்டவத்தை அற்புதமாக நிகழ்த்திக் காட்டினார். 'அதுவும் சொல்லுவாள்' என்ற அடுத்த பதத்தில் நாயகி தன் கணவனின் இரண்டாவது மனைவியிடம் கொண்ட பொறாமையை அபிநயித்தது சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக ஹிந்தோள ராகத் தில்லானாவிற்கு ஆடியதில் பத்மா சுப்ரமணியத்தின் சிறப்பு அம்சமான கோவில் சிற்பங்களின் கரணங்கள் இடம் பெற்றிருந்தன.

குரு பாலாதேவி (நட்டுவாங்கம்), கீதா நவநீதன் (வாய்ப்பாட்டு), ஜயந்த் பாலசுப்ரமணியன் (மிருதங்கம்), ப்ரீதா நாராயணசுவாமி (வீணை), ஷ்ரேயஸ் ஹோஸ்கெரே (புல்லாங்குழல்) ஆகியவை நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. கீர்ணாவளி வித்யாசங்கரிடம் கர்நாடக இசை பயின்றுள்ள ரம்யாவின் இசை அரங்கேற்றம் சென்ற ஆண்டு நடைபெற்றது.

ஆங்கில மூலம்: நளினி, ஹோகசின், டெலவர்;
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com