செப்டம்பர் 29, 2012 அன்று குரு நிருபமா வைத்யநாதன் அவர்களின் சிஷ்யை அபிராமி முருகப்பனின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது. கம்பீர நடை ராகத்தில் 'நர்த்தன கணபதி' பாடலுடன் நடனத்தைத் துவக்கினார். பாவம் மிளிரும் கண்களும், புன்னகை பூத்த முகமுமாக நேர்த்தியாகத் தன் திறனை முதல் பாடலிலேயே வெளிபடுத்தினார். 'அம்ரிதவர்ஷினி'யில் முத்துசுவாமி தீட்சிதரின் பாடலுக்கு மழை வேண்டும் பாடலில், மழை எப்படித் தரிசு நிலத்தையும் வளமாக்குகிறது என்பதை அழகாகச் சித்திரித்தார். அடுத்து ஆபோகி ராக வர்ணத்தில் மயில்மீது வரும் முருகன் மீது மையல்கொண்டு உருகும் என்னைக் காண வரச்சொல் என்று தோழியிடம் தூது விடும் பெண்ணாய் சிருங்கார பக்தியை வெளிப்படுத்தினார். 'போ சம்போ' பாடலில் சிவனாய் மாறிப் பஞ்சபூதங்களையும் நர்த்திக்கச் செய்தது அற்புதம். கண்ணனின் அசையும் மயிலிறகும், ஒலி எழுப்பும் சதங்கையும் எவ்வாறு கோபியரை மெய்மறந்து ஆட வைக்கிறது என்பதை 'ஆடினாயே கண்ணா' என்ற பாடலில் கண்முன் கொணர்ந்தார். 'ஓமன திங்கள் கடவு' என்ற மலையாளப் பாடலுக்குத் தாலாட்டும் தாயாக மாறிக் கைதட்டலை அள்ளினார். லால்குடி ஜெயராமனின் மாண்டு ராகத் தில்லானாவுக்கு ஆடியது அருமை. மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
குரு நிருபமா வைத்யநாதனின் நடன அமைப்பும், நட்டுவாங்கமும் சிறப்பாக அமைந்திருந்தன. ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியவை சரியான பக்கபலம்.
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |