நாதசுதா: 'Spirit of Krishna'
நவரத்தன் கொர்மாவில் வடையை ஊற வைத்து அதற்கு மேல் இனிப்பான ராஜஸ்தானி சுர்மாவைப் போட்டுச் சாப்பிடு என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நினைத்தேன் குழலிசை அரசர் ஷஷாங்குடன், மங்கானியர் சகோதர்கள் அன்வர்கான், ஃபெரோஸ்கான், புர்பயன் சாட்டர்ஜி மற்றும் பத்ரி சதீஷ் சேர்ந்த அளித்த ஜுகல்பந்தி இசை விருந்து பற்றி. ஆனால் உண்மையை ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் - பிரமாதம்.

'நாதசுதா' நண்பர்கள் திவ்யாவும் அஷ்வினும் அக்டோபர் 6, 2012 அன்று ப்ளெயின்ஸ்பரோவில் (நியூ ஜெர்சி) ஏற்பாடு செய்திருந்த 'Spirit of Krishna' என்ற இந்நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பொழுது கொஞ்சம் பதைபதைப்பாகவே இருந்தது. கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீதம் போதாது என்று, ராஜஸ்தானிய தொல்லிசைத் வேறா! எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்தான் சென்றேன்.

கர்நாடக இசைக்கு ஒரு புல்லாங்குழல், தொட்டுக்கொள்ள மிருதங்கம். பக்கத்தில் ஹிந்துஸ்தானி இசையைப் பொழிய சிதார். அந்தப் பக்கம் தொல்லிசைப் பாடகர் ஒருவர். அவர் துணைக்கு டோலக். இவர்கள் தனித்தனியாக இசைப்பதும், தடுமாற்றமின்றி ஒன்று சேர்வதும், பிரிவதும், பாடல்கள் முடியும் நேரத்தில் பிசிறின்றிச் சங்கமிப்பதும் கேட்கப் பரவசம். ஆஹிர் பைரவ் ராகத்தில் ஷஷாங்க் 'வசுதேவ சுதம் தேவம்' என்ற சுலோகத்துடன் தொடங்கியது வரப்போகும் இனிய அதிர்ச்சிகளுக்குக் கட்டியம் கூறியது. ஜெயதேவரின் 'ராதிகா கிருஷ்ணா', சௌரஜ் ராகத்தில் ஒரு தொல்லிசைப் பாடல், தொடர்ந்து கல்யாணியில் அட்டகாசமான ராகம்-தானம்-பல்லவி. இதில் ஷஷாங்க் வாசித்த தானம் பகுதிகளும், அதற்கு புர்பயன் சிதாரில் தந்த பதிலடிகளும் மிகப்பிரமாதம். 'கானலோல முரளிதரா ஸ்ரீகிருஷ்ணா' என்ற பல்லவியை வாசிக்கும் பொழுது நடுவே அன்வர்கான் அருமையாக இணைந்து பாடினார்.

அடுத்து தனியாவர்த்தனம். பத்ரி லயக்கோர்வையை முதலில் வாயால் சொல்லி, பின் மிருதங்கத்தில் வாசித்ததும், அதற்கு ஃபெரோஸ்கான் தன் பாணியில் டோலக்கில் பதில் தந்ததும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 'நந்த நந்தன கோபாலா' என்ற தேஷ் ராகப் பாடல், சிந்துபைரவியில் மீரா பஜன் ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

'நாதசுதா' இந்திய இசை, நாட்டியப் பாரம்பரியத்தை அமெரிக்க மண்ணில் பரவச் செய்யவெனத் தொடங்கப்பட்ட இயக்கம்.

தொலைபேசி - 732.821.8410; 732.422.6830
மின்னஞ்சல் - nadasudhainc@gmail.com

இலவச கொத்தனார்,
எடிசன், நியூ ஜெர்சி

© TamilOnline.com