ரொறொன்ரோ: தமிழ் இலக்கியக் குரல்கள்
அக்டோபர் 20, 2012: ரொறொன்ரோ பொது நூலகம் இதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வை நடத்தியதில்லை. ஆங்கில எழுத்தாளர்களுக்கு ஏற்பாடு செய்ததுண்டு. ஆனால் இம்முறை முதன்முதலாகத் தமிழ் எழுத்தாளர்களின் குரலை மல்வேர்ன் பொது நூலகத்தில் ஒலிக்க வைத்தது. இதற்கு முழுக்காரணமாக இருந்தவர் நூலகத்தின் நிகழ்ச்சி நிரல் மேற்பார்வையாளர் மிரியம் ஸ்கிரிப்னர்.

பேரா. செல்வா கனகநாயம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், கவிஞர் சேரன், நாடகவியலாளர் துஷி ஞானப்பிரகாசம், நடனக் கலைஞர் சிந்தியா சிவசிதம்பரம், முனைவர் சுல்ஃபிகா இஸ்மயில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை ஆரம்பித்துப் பேசினார் மிரியம் ஸ்க்ரிப்னர். பேரா. செல்வா நல்ல ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கியம் பரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அ. முத்துலிங்கம் புலம் பெயர்ந்தவர்கள் இலக்கியம் உலகப் பொது இலக்கியமாக நீளவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். கவிஞர் சேரன் தன் கவிதைகளை ஆங்கில வடிவத்தில் உணர்ச்சிகரமாகப் படித்தார். துஷி ஞானப்பிரகாசமும் சிந்தியாவும் இணைந்து சில கவிதைகளை நிகழ்கலையாக நடத்தினர். சேரன், புதுவை ரத்தினதுரை, வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோருடைய கவிதைகள் இதில் இடம்பெற்றன. முனைவர் சுல்ஃபிகா இஸ்மயில் ரொறொன்ரோவில் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பேசினார். ரொஹான் ஃபெர்னாண்டோவின் 'Snow' படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதங்களில் பலர் பங்குபற்றினர். இறுதியாக லாவணியா ராஜின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவேறியது.

கந்தசாமி கங்காதரன்,
ரொறொன்ரோ, கனடா

© TamilOnline.com