CTA: ஆசிரியர் பயிற்சி
புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் கற்பிப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவதை ஒரு முக்கியப் பணியாகக் கொண்டுள்ளது கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA). அதன் ஒரு கட்டமாக செல்வி ராஜமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மஹாதேவி பாலசுப்ரமணியம் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார். அவர் செயின்ட் ஹில்டாஸ் பள்ளியில் முதன்மை ஆசிரியராகவும், சிங்கப்பூர் கல்வி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியாகவும் உள்ளார். 30 ஆண்டு ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் உடையவர்.

இவருடனான கலந்துரையாடல் 3 மணி நேரமாக 8 வாரங்கள் நடைபெறும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியில் இருந்தும் இருவர் தெரிந்தெடுக்கப்பட்டு கலந்து கொள்வர். இவர்கள் தத்தம் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பர். வேற்றுச் சூழலில் வளரும் மாணவர்களுக்குத் தமிழ் கற்றலில் ஆர்வத்தை உண்டாக்குதலே இதன் முக்கிய நோக்கம். மனத்தடை இல்லாமல் குழந்தைகள் பேசுவதற்கான சூழலை உருவாக்குதல், அவர்களுக்குப் பிடித்த விளம்பரங்கள், திரைப்படங்கள், வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைக் கொண்டும, தலைப்புகளைக் கொடுத்தும் அவர்களைப் பேச ஊக்குவித்தல், எழுவதை எளிமைப்படுத்தல், இலக்கணம் ஏற்கச் செய்தல் என்பதுவரை கற்பித்திருக்கிறார்.

இந்த ஆண்டு புதிதாக ஏழு தமிழ்ப் பள்ளிகள் கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்துடன் இணைந்துள்ளன. அமெரிக்க மண்ணில் வாழும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மொழி கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டு முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இரண்டாம் வகுப்பிலிருந்து அறிமுகமாகிறது. உரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவின் எந்த மாநிலத்திற்கு மாற்றலாகிச் சென்றாலும் மாணவர்கள் எளிதாகத் தமிழ் கற்பதைத் தொடர வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.

மேலும் அறிய: www.catamilacademy.org

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com