நவம்பர் 2012: வாசகர் கடிதம்
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'தென்றல்' இதழைப் பார்க்கிறேன். எதிர்பார்த்தபடியே மிக இளமையாக மறுவுரு எடுத்திருக்கிறது. என்போன்றவர்களுக்கு சுடோகு மிகச்சுவை. டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அறிவுரை சந்தர்ப்பத்துக்கேற்ற சிந்தனையை விதைக்கிறது. சுப்புதாத்தா கதைகள் தெனாலி ராமனை நினைவு படுத்துகின்றன. மகதியின் சாதனைகள் இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டி. 'லேபர் டே' சிறுகதை நன்றாக இருந்தது. சீதா துரைராஜ் அவர்களின் 'ஏரிகாத்த ராமர்' கட்டுரை வாசிக்கச் சிறப்பு.

ஆர். கண்ணன், கீதா கண்ணன்,
சான்டா க்ளாரா

*****


கடந்த ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த நான் தொடர்ந்து 'தென்றல்' இதழைப் படித்து வருகிறேன். 'அன்புள்ள சினேகிதியே' பகுதியில் வரும் ஒவ்வொரு கடிதமும், அவற்றுக்கு டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் சிறந்த பதிலுரைகளும் எண்ணற்ற வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர்களின் இந்தச் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்.

ப. இராமசாமி,
டிராய், மிச்சிகன்

*****


தென்றல் இதழ்களை மாதந்தோறும் முதல்தேதி வந்தவுடன் ஆவலுடன் படிக்கும் வாசகி நான். அன்புள்ள சிநேகிதியேவை ஒவ்வொரு மாதமும் தவறாமல் படிப்பேன். இதுவரை தங்கள் குறைகளையும் பிரச்சினைகளையுமே பலர் விவரித்துள்ளனர். இந்த இதழின் கடிதம் மனதிற்கு மிக நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. மாமியார், மருமகளை அனுசரித்துச் செல்வது நிதர்சனமான உண்மை எனத் தெரிகிறது. என் மகளுக்கும் அதே மாதிரி நல்ல மாமியார் அமைந்திருக்கிறார் என மிகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அதனால் நான் எந்தக் கவலையுமின்றி நிம்மதியாக இருக்கிறேன்.

கௌசல்யா சுவாமிநாதன்,
ப்ளசன்டன், கலிஃபோர்னியா

*****


நேர்காணல் பகுதியில் பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களை அடுத்துப் பதவி ஏற்றிருக்கும் டாக்டர் பிளேக் வென்ட்வர்த்தின் பேட்டி அருமை. தமிழ்நாடு, தமிழ் மக்கள் பேரில் இவர் கொண்டுள்ள அக்கறையும், நேசமும் இப்பணியை இவர் சிறப்பாகவே செய்வார் என்று புரிகிறது. தனக்கு மதுரை பிடித்த ஊர் என்று சொன்னதைப் படித்தபோது அங்கே வாழ்ந்த எனக்குப் பெருமையாக இருக்கிறது. 'அன்புள்ள சினேகிதி' பகுதியில் 'காலம் கடந்த விவேகம்' மனதைத் தொட்டது. என் நினைவும் பின்நோக்கிச் சென்றது. இருபத்திரண்டு வயதில் கல்யாணம். மாமியார் இல்லை. மாமனார், ஓர்ப்படிகள் இருந்தார்கள். பெற்ற அம்மாவைவிட அதிக அன்பு செலுத்தி என்னை வழி நடத்தியது இன்றும் நினைக்கும்போது நெஞ்சு நிறைகிறது. அன்பு எதையும் வெல்லும் சக்தி படைத்தது. திருமணம் செய்யும் அனைவரும் இதைக் கடைப்பிடித்தால் உலகமே அன்பு மயமாகிவிடும். அந்த நாள் விரைவிலேயே வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

வத்சலா விஸ்வநாதன்,
ப்ளசன்டன், கலிஃபோர்னியா.

*****


'தென்றல்' முதல் இதழிலிருந்து படித்து வருகிறேன். செப்டம்பரில் தமிழ்வாணன் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன். 'கல்கண்டு' இதழையும் முதல் இதழிலிருந்து இன்றுவரை படித்துக் கொண்டிருக்கிறேன். சிறுபருவத்தில் 'அணில்', ஜில் ஜில்', 'ஜிங்குலி', 'கரும்பு', 'அம்புலிமாமா' போன்ற சிறுவர் பத்திரிகைகளை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். கல்கண்டும், அம்புலிமாமாவும் மட்டுமே இன்றும் வந்து கொண்டிருக்கிறது. சிறுவனாக இருந்தபோது எனக்கு தமிழ்வாணன் என்றால் உயிர். 'தமிழ்ப்ரியன்' என்று பெயர் வைத்துக் கொண்டேன். அவர் எங்களைப் போன்ற சிறு எழுத்தாளர்களையும் ஊக்குவித்தார். என்னுடைய மூன்று ஒரு பக்கக் கதைகளைக் கல்கண்டில் வெளியிட்டார். நானும் சிறுவனாக இருந்தபோது கறுப்புக்கண்ணாடி + தொப்பியை அஞ்சலட்டையில் முகவரியாக வரைந்து அனுப்பினேன். அவரிடமிருந்து பதிலும் வந்தது. கத்திரிக்காய், சங்கர்லால் போன்றவர்களை மறக்கவே முடியாது. சின்ன ஊரிலிருந்து அவரைப் பார்க்கச் சென்னை சென்றபோது எங்களை அன்புடன் வரவேற்றுத் தேநீர் கொடுத்து உபசரித்தார்.

'மனுஷ்யபுத்திரன்' நேர்காணலில் அவர் கவிதையை வரையறுப்பது மாறுபட்டதாக இருக்கிறது. தவிர, "சமையல் குறிப்பு, ஜோதிடம், தொழில்நுட்பம் சார்ந்த கையேடுகள் புத்தகமாகா" என்று அடித்துச் சொல்லிவிட்டார். ஆயகலைகள் அறுபத்து நான்கில் இவைகளும் உண்டே. கவிதை மட்டும்தான் புத்தகம் என்றால் உண்மையான வாசகர்கள் 'எள்' அளவே இருப்பார்கள். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கனாரை நேரில் பார்த்திருக்கிறேன். சா.கணேசன், ராஜாஜி, திரு.வி.க., டி.கே.சி., ரா.பி.சேதுப்பிள்ளை அனைவரையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. மேரி ராஜாவின் 'முதுமை' கவிதை உள்ளத்தைக் கவர்ந்தது. வாழ்த்துக்கள்.

லிபியா ராமானுஜம்,
கேன்டன், மிச்சிகன்

*****


நாங்கள் தென்றல் பத்திரிகையைத் தொடர்ந்து வாசிக்கிறோம்; குறிப்பாகக் குறுக்கெழுத்துப் புதிர் பகுதியை மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் எதிர் கொள்கிறோம். எங்கள் அன்பும் பாராட்டுகளும்.

ஆர். நடராஜன்,
சென்னை, தமிழ் நாடு

*****


அக்டோபர் இதழில் பி.ஸ்ரீ. ஆச்சார்யாவின் குறித்த கட்டுரையை வெளியிட்டது அருமை. எங்கள் செட்டிநாட்டில் மூன்றாண்டுகள் தங்கி 'குமரன்' பத்திரிகை ஆசிரியராக இருந்தவர் அவர். விட்டலாபுரத்தில் பிறந்து, எட்டாத உயரத்துக்குச் சென்று மட்டில்லா புகழ் குவித்தவர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா. தென்றல் தலையங்கம் அமெரிக்காவின் எதிர்காலத் தலையெழுத்தை எடுத்தியம்புவதாகவே இருந்தது. அமெரிக்க இந்தியரின் அபரிதமான பொருளாதார வளர்ச்சி, சம வாய்ப்பு, கருத்துச் சுதந்திரம், சகோதரத்துவம், அறிவுஜீவித் திறன், ஒட்டுமொத்த அமெரிக்காவின் கனபரிமாண வளர்ச்சி என அனைத்தும் மீண்டும் தொடர அதிபர் ஒபாமாவே மீண்டும் அதிபராக வரவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஃப்ரீமான்ட் நகர மேயர் தேர்தலில் அனு நடராஜன் வெற்றியும் பிரகாசமாகவே தெரிகிறது.

தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்ஸாஸ்

*****


அக்டோபர் இதழில் எழுத்தாளர் இரா.நடராசன் பற்றிய அறிமுகமும் அவரது 'ஆயிஷா' சிறுகதையும் சிறப்பாக இருந்தன. நெஞ்சை மிகவும் வருத்தி விட்டாள் ஆயிஷா. தமிழ்நாட்டில் கல்வி வணிகமாகிவிட்ட நிலையில், தினந்தினம் எத்தனை ஆயிஷாக்கள் பலியாகிறார்கள் என்பதை நினைக்க இதயம் ரணமாகிறது. சாயிரஞ்சனாவின் சிறுகதை சிறப்பு. பானுரவியின் 'பசி' ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் முடிவில் அழுத்தம் இல்லை. எல்லே சுவாமிநாதன் நம்மை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகிறார். சுப்புத்தாத்தாவின் சிறுகதை அருமை. திருக்குறள் விளக்கம் நல்லதோர் இலக்கியச் சுவை. ஹரிமொழி குறள் மொழி அல்லவா? ஓவியர் மாருதியின் நேர்காணல் சிறப்பு. அவர் முன்வைக்கும் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது அவசியம். நூல்களுக்குத் தரும் ராயல்டி போல் ஓவியங்களுக்கும் தருவது; நூல்கள் நாட்டுடைமை ஆகும்போது ஓவியங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றுக்கும் உதவுவது என்ற கருத்துக்கள் சரியே. இதழின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது டாக்டர் பிளேக் வென்ட்வர்த் அவர்களுடனான நேர்காணல். வட அமெரிக்காவில் அவர் செய்து வரும் தமிழ்ப்பணிகள் கொண்டாடத் தகுந்தவை. புலம் பெயர்ந்த தமிழர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் நம் மகாகவி பாரதியின் மனைவி ஊரான கடையத்தில் அமைதியாக வாழ்வதுதான் தனது குறிக்கோள் என அவர் தனது இறுதி ஆசையாகச் சொல்வது நெஞ்சை நெகிழச் செய்தது. பதிவர் பழமைபேசியின் கவிதை நம் அடையாளம் எது என்பதை நனவோட்டமாக நிகழ்வுகளில் புகுந்து இறுதியில் புத்தகத்தின் தலைப்பில் இருப்பதை நம்மோடு பகிர்ந்து கொண்டு நினைவூட்டுகிறது. நல்ல கவிதைகள் பழசாவதில்லை, பழமைபேசி! அவை படிக்குந்தோறும் புதிதாய்ப் பூப்பதால்!

இரவீந்திர பாரதி,
சிடார் ரேபிட்ஸ், அயோவா

*****


அக்டோபர் இதழில் பி.ஸ்ரீ. ஆச்சார்யா பற்றிய கட்டுரை மிக நன்றாக இருந்தது. பி.ஸ்ரீ.யின் பேத்தியான நான் எனது தாத்தாவைப் பற்றி மேலும் சில விவரங்களைக் கூற விரும்புகிறேன். அவர் தனது "இராமானுஜர்" என்ற நூலிற்காக 'சாகித்ய அகாதமி" விருது பெற்றார். கம்பன் கவிதையில் ஊறித் திளைத்தவர். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற்பட்டவர். தமிழ் இலக்கியத்தை கரைத்துக் குடித்தவர். ஆங்கில மேதையான பி.ஸ்ரீ. ஆங்கில இலக்கியத்தின் திறனாய்வு நெறிகளைத் தமிழ் உலகிறகு அறிமுகப்படுத்தினார். பேச்சாற்றல் மிக்கவர். காவல்துறையில் பணியாற்றிய பி.ஸ்ரீ., சுதந்திரப் போராட்டத்திற்காகப் பதவியைத் துறந்தார். ஆங்கில துரை ஒருவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். 96 வயதிலும் பி.ஸ்ரீ. இளைஞர் போல் திகழ்ந்தார் என்றால் அதற்குக் காரணம் அவர் தமிழ்மீது கொண்டிருந்த காதலே!

ஹரிணி ஸ்ரீவத்ஸன்,
மௌண்டன் வியூ, கலிஃபோனியா

© TamilOnline.com