முக்கனிகளும் கொல்லிமலையில் ஏராளமாக விளைகின்றன. வழியிலிருந்த மாமரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மாம்பழங்கள் மண்ணில் விழுந்து எடுப்பாரற்றுப் புதைந்திருந்தன. மலைச்சரிவில் நிறைய வாழைமரங்கள். வற்றாயிருப்பில் இருந்த காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து எங்கள் வீதிக்கு மலைத்தேன், மலைவாழைப் பழம், வகைவகையான மாம்பழங்கள் என்று விற்பனைக்கு வரும். சைக்கிள் கேரியரில் எவர்சில்வர் பாத்திரத்தில் தேனடைகளை வைத்துக்கொண்டு ஒருவர் வருவார். தூய்மையான (உஜாலா போடாமல் துவைத்த) வேட்டித் துணியில் அடையை வைத்து நாம் கொடுக்கும் பாத்திரத்தில் பிழிந்து தருவார். நிறைய தேனீக்கள் அந்த ஆளைச் சுற்றி ஒட்டிக்கொண்டு பறக்கும். கொட்டிவிடுமோ என்ற பயத்துடன் அதே சமயம் வாயில் எச்சிலூறப் பார்த்த நாட்கள் நினைவுக்கு வந்தன. கிழவன் கோவிலுக்கும், காட்டழகர் கோவிலுக்கும் செல்லும்போதெல்லாம் துண்டை விரித்து மாம்பழங்களை மூட்டை கட்டிக்கொண்டு வருவோம்.
"இதான் கடைசிக் கரடு" என்றார் ஸ்ரீநிவாஸன். என் முகத்தில் கேள்வியைப் பார்த்து "கரடுன்னா குன்று மாதிரி" என்றார். "இதான் கடைசி ஏத்தம் - ஏறிட்டோம்னா உச்சிதான். இன்னும் அரை மணியில் போயிரலாம்".
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மலையேறியதில் கால்களும் இதயத்துடிப்பும் ஒரு நிதானத்திற்கு வந்து விட்டிருந்ததால் அந்தக் கரடைக் கடப்பது அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை. ஏற்றம் முடிந்து சற்று மேல்நோக்கிச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். காஃபிச் செடியை முதன்முதலாகப் பார்த்தேன். மகா எளிமையான, அழகான குடிசை ஒன்றைக் கடந்தோம். குலை தள்ளிய வாழை, அடுத்து நெடிதுயர்ந்த பலாமரம், பின்னணியில் மாமரம் என்று முக்கனிகள் தரும் மர வரிசை பார்த்தேன். வல்வில்ஓரி மாதிரி ஒரே கல்லில் வாழை, பலா, மாம்பழங்களை அடிக்கமுடியுமா என்று யோசனை தோன்றியது. தோப்புக்காரர் யாராவது கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் வல்கல் எறியனாகும் எண்ணத்தைக் கைவிட்டேன்.
பாதை கிட்டத்தட்ட சமதரையாகச் செல்லவே, உச்சியை அடைவதை உணர்ந்தேன். மரங்களற்ற பரந்த புல்வெளி. மலைச்சரிவில் பெரிய படிக்கட்டுகளாகத் தேயிலை. பாதையின் முடிவில் கற்சுவரும் தார்ச்சாலையொன்றும் தெரிந்தது. அதையடைந்ததும் எனது கையைக் குலுக்கி "Welcome to Kolli Malai" என்றார் ஸ்ரீநிவாஸன். பயங்கரமாய்ப் பசிக்க அந்தக் கற்சுவரில் உட்கார்ந்து புளியோதரையை விழுங்கினோம். நாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களில் இரண்டைக் காலி செய்தோம். கையில் பரவியிருந்த எண்ணெயைப் பாறையில் துடைத்தேன்.
கற்சுவரின் ஓரமாக ஒடிசலான ஒருவர் உட்கார்ந்திருந்தார். நாங்களெல்லாம் வெளியூர் என்றுதான் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதே! "பஸ்ஸூ பத்தரை மணிக்கு வந்துரும்" என்றார். நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு பேருந்து விட்டிருக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோவில் வரைக்கும் போகலாம். இருபதோ என்னவோ கிலோமீட்டர் தூரம்தான். அட, அவசரப்பட்டு சந்தோஷப்படாதீர்கள். சும்மா ஒரு எழுபது கொண்டைஊசி வளைவுகள்தான் இருக்கின்றன. மலையைச் சுற்றிச் பேருந்து ஏறுவதில், தலையைச் சுற்றிவிடும். நான்கைந்து மணி நேரம் ஆகும்.
அந்த நபரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அங்கிருந்து மெதுவாக நடந்து களூர் போய் இறங்கும் பாதையைக் கண்டுபிடித்து இறங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். அவரிடமும் பசு சிறிது பணம் கொடுக்க அவரும் ஏகமாக மறுத்துவிட்டுப் பின் தயங்கி வாங்கிக்கொண்டார். நாங்கள் "பெரப்பர்றோம்ணே" என்றதும் "வாங்க, வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. நாட்டுக்கோழியடிச்சு சாப்ட்டுட்டுத் தங்கிட்டு நாளைக்குப் போலாம்" என்று வற்புறுத்தியவரைச் சமாதானப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டு அந்தத் தார்ச்சாலையில் நடந்தோம்.
கொல்லிமலை பற்றி ஏகமாகக் கதைகள் உலவுகின்றன. செவிவழியாகக் கதைகளா, இட்டுக்கட்டியவையா என்று இனம்பிரிக்க முடியாத கதைகள். பசுபதியும், நண்பர்களும் பல வழித்தடங்களில் கொல்லிமலைத் தொடர்களில் ஏறியிருக்கிறார்கள். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தை அவன் சொன்னபோது அதை நம்பிவிடலாம் போலத்தான் இருந்தது.
விறகுவெட்டும் சிறுவர்களில் ஒருவன் மலையில் எங்கேயோ ஒரு மரக்கிளையை வெட்டியபோது தவறுதலாக இடது முழங்கைக்குக் கீழே வெட்டுப்பட்டு கை தொங்கியதாம். அலறித்துடித்த அந்தச் சிறுவனை மற்றச் சிறுவர்கள் தூக்கிக்கொண்டு கிராமத்திற்குத் திரும்பிச் செல்லும்போது ரத்தப்போக்கை நிறத்துவதற்காகப் போகும் வழியில் இருந்த செடிகொடிகளின் இலைகளைப் பறித்துக் கசக்கி வெட்டுப்பட்ட இடத்தில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்து பெரியவர்களைக் கூவியழைக்க, பதறியடித்து வந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியத்தில் மூச்சே நின்று விட்டது. காயம்பட்ட சுவடே கிட்டத்தட்ட தெரியவில்லை. ஒருவேளை பையன்கள் விறகுவெட்டச் சோம்பல்பட்டுக் கதையடிக்கிறார்களோ என்று அவர்களுக்குச் சந்தேகம். "டேய்! என்னங்கடா ஆச்சு?" பையன்களாலும் நம்பமுடியவில்லை. அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் வெட்டுப்பட்ட இடத்தையும் ரத்தச் சிதறல்களையும் காட்டி இலைகளைப் பறித்து கட்டுப்போட்டதையும் சொல்ல, அவர்களுக்கு இலைகளில் ஏதோ ஒன்று சக்திவாய்ந்த மூலிகை என்பது புரிந்தது.
விறகு வெட்டுவதையும், பழங்கள் பறிப்பதையும் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் அம்மக்களுக்குத் தொழிலில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு. மருத்துவ வசதி இல்லாத, நகரங்களின் நாகரிகங்களும், வசதி வாய்ப்புகளும் இல்லாத ஆயிரக்கணக்கான கிராமங்கள் தார்ச்சாலைகளின் கரங்களுக்கு எட்டாத தொலைவில் இன்னும் இருக்கின்றன. அம்மக்கள் தற்கால மருத்துவத்தைவிட இயற்கை தரும் மூலிகைகளையே சார வேண்டிய நிலை. தகுந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மரணங்கள் நிகழ்கின்றன. நகரத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? மருத்துவம் சேவையாக இருந்த காலம் மலையேறிவிட்டது. நகரச் சாமான்யர்களுக்கும் மருத்துவம் எட்டாக் கனியே. அரசு நிறுவனங்களில் சாஸ்வதமான ஊழல் மருத்துவத்துறையிலும் மலிந்திருக்கிறது. அதிலும் தத்தமது நிறுவனத் தயாரிப்புகளை விற்க மருந்து நிறுவனங்களின் ‘சந்தைப்படுத்தும் உத்திகள்’ கேவலமானவை. சட்டத்திற்குப் புறம்பானவை. ஐயய்யோ... இதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகிவிடும். இத்தோடு நிறுத்திக்கொண்டு கொல்லிமலைக்குப் போகிறேன்.
"டேய் எந்தெந்த எலைங்களைப் பறிச்சீங்க?" என்று பெரியவர்கள் குடைய, சிறுவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. மறுபடியும் ஊருக்குச் சென்று மற்றவர்களிடம் அந்த அதிசயத்தைச் சொல்ல மொத்த கிராமமும் மலை முழுவதும் பரவி அந்த மூலிகையைத் தேடினார்களாம். சும்மா தேடவில்லை. கையை, காலை கீறிக்கொண்டு இலைகளைப் பறித்துக் கசக்கி கீறல்களில் தேய்த்து காயம் ஆறுகிறதா என்று பார்த்து. கடைசிவரை அந்த மூலிகை அவர்களுக்குத் தட்டுப்படவில்லையாம். நான் "நல்ல வேளை! தலை வெட்டுப்படவில்லை" என்றேன், பசு என்னை முறைத்தான்.
களூர் நோக்கி நடந்தோம். ஓரிடத்தில் மழையில் மண்சரிவில் சரிந்த தார்ச்சாலையைச் செப்பனிடும் பணி நடந்துகொண்டிருந்தது. கேமராக்கள், முதுகுப்பைகள், தடிமனான காலணிகள் என்று நாங்கள் கடந்து போகும்வரை பணிகளை நிறுத்திவிட்டு எங்களையே விநோதமாகப் பார்த்தார்கள். குறிஞ்சிக் காற்று அவ்வவ்போது வருடியது. மலைச்சரிவில் ஓரிரண்டு வீடுகள். ஆங்காங்கே வெகுசில மலைகிராமத்து மக்கள் தட்டுப்பட்டார்கள். அவரவர் தத்தமது வேலைகளை அமைதியாகப் பார்த்துக்கொண்டு, பேசினால் இயற்கை கலைந்துவிடும் போல இரைச்சலில்லாது இருந்தார்கள்.
மலையில் வேட்டையாடிப் பழகிய நாய் ஒன்று, ஜாக்கிசான் மாதிரி கராத்தே நடை நடந்து சென்றது. வழியில் பார்த்தீனியச் செடி ஒன்றைப் பார்த்துவிட்டு பசு "எவ்வளவு மூலிகைகள் இருக்கற இடம் இது! பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து பரப்பிட்டானுங்க. இதெல்லாம் water guzzlers. இங்க இருக்கவே கூடாத செடி இது. இப்படியும் இயற்கையைச் சாவடிக்கறானுங்க" என்று இன்னும் யாரையோ திட்டினான். ஒரு பக்கம் மலை. மறுபக்கம் சரிவு. சரிவில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரவியிருந்த பசுமை. மலைக்காற்று. அடிவாரத்தில் பழனியப்பர் கோவில் புள்ளியாகத் தெரிந்தது. ஏறிவந்த கரடுகள் தெரிந்தன. சற்றே கீழே மேகங்கள் மலைமீது படர்ந்து நகர்ந்து கொண்டிருந்தன. எதிரே ஒற்றைக் கருடன் ஒன்றைப் பார்த்தோம். இயல்பாகப் பறந்தது கருடன். அதன் சுதந்திரம் உண்மையான சுதந்திரம். நாமெல்லாம் சுதந்திரம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று ஏனோ தோணியது. ஓரிருமுறை வட்டமடித்த அது கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தோம்.
(தொடரும்)
வற்றாயிருப்பு சுந்தர், போஸ்டன் |