கனுச்சீர்
சற்றே அவகாசமிருக்கும் காலை நேரம்; மார்கழி மாதத்தின் பக்திச் சூழலை வார இறுதியிலாவது அனுபவிக்கலாமே என்று ஒலித்தகட்டில் ஒலித்துக் கொண்டிருந்த திருப்பாவைப் பாடல்களுடன் தானும் முணுமுணுத்தவாறே சமையலுக்காகக் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள் வனிதா. ஓடி உழைக்க வாரநாட்க ளென்றால், வாரநாட்களுக்காக அலைந்து ஆயத்தம் செய்வதற்காகவே வார இறுதி நாட்கள் வருகின்றன போலும். போதாக் குறைக்குக் குழந்தைகளைப் பள்ளி சாராத வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றுவருவது, வாராந்தர மளிகை, காய்கறி வாங்கி, வீட்டுத் துணிமணிகள், சீருடைகள் துவைத்து, மடித்து, தேய்த்து அடுக்கிவிட்டு நெளிந்த முதுகை நிமிர்த்துவதற்குள் திங்கட்கிழமை விடிந்துவிடுகிறது. இந்த அலைச்சலுக்கு மட்டும் ஆண் பெண் பேதமே கிடையாது. வனிதாவின் கணவன் வினய் குழந்தை சாருவை நடன வகுப்புக்கும் அங்கிருந்து நேரே பியானோ வகுப்புக்கும் அழைத்துச் சென்று விட்டு ஒரு மணிக்குமேல்தான் திரும்புவான். மளிகைச்சாமான் வாங்கும் முறை வனிதாவுடையது.

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை. மளிகைச் சாமான்களுடன் ஓரிரு கடைகளில் மட்டுமே கிடைக்கும் நாலு அங்குலக் கரும்புத்துண்டுகள், வெற்றிலை முதலியனவும் வாங்கிவர வேண்டும். இந்த நாட்டுக்கு வந்து மூன்றாண்டுகளில் இம்முறைதான் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப் போகிறாள். இவ்வூர் கடுங்குளிருக்குத் தப்பி இந்தியா சென்றால் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டுத் திரும்புவாள். அங்கேயே பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட முடிந்தது. பிறந்த வீடும் புக்ககமும் ஒரே ஊரில் அமைந்து விட்டதால் நாள் கிழமைகளில் உறவுகளின் வரவினால் வீடே கலகலப்பாக இருக்கும்.

பொங்கல் சீருடன் அவள் பெற்றோர் வருவதும், மறுநாள் கனுப்பிடி வைத்து விட்டுப் பிறந்தகம் சென்று ஆசி பெற்று அண்ணா கையால் கனுச்சீர் வாங்கி வருவதுமாக அந்த நாட்களை நினைத்தால் ஏக்கம் வரத்தான் செய்கிறது. ஏதோ இம்முறை வார இறுதியில் வருவதால் சற்று நிதானமாகப் பொங்கல் பானையேற்றி பூஜையாவது செய்ய முடியும்.

வெளியிலிருந்து திரும்பிய கணவனுக்கும், மகளுக்கும் மதிய உணவளித்துவிட்டு ஒரு மணி தூரத்திலிருந்த இந்தியக் கடைக்குச் சென்றாள். என்னதான் நாடுவிட்டு, ஊர்விட்டு வந்தாலும் பண்டிகைகளென்றால் இந்தியக் கடைகளில் கூட்டம் நிறையவே இருக்கும். பல தோழிகளை அங்கு சந்திக்க முடியும். இன்றும் செர்ரி ஹில்ஸிலிருக்கும் சாந்தியையும், சாமர்செட்டிலிருக்கும் சுகன்யாவையும் நெடு நாளைக்குப் பின் சந்திக்க நேர்ந்தது.

வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின் "என்ன சுகன்யா, வெற்றிலை, கரும்பெல்லாம் நிறைய வாங்குகிறாப் போலிருக்கே?" என்று கேட்டவளுக்கு, "பால்டிமோரிலிருந்து என் நாத்தனார் வருகிறாள். பிறந்தகத்துச் சீர் கொடுத்தனுப்ப வேண்டுமே" என்றாள் சுகன்யா.

சாந்தி பரிகாசமாக, "இந்தக் காலத்திலே கூட இந்தச் சீர் செனத்தியெல்லாம் யார் செய்கிறார்கள்? உன் நாத்தனார் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறாள். அவளுக்கு நீ எவ்வளவு செய்வாய்?" என்றாள்.

"பிறந்தகம் வந்து கலந்துறவாடும் மகிழ்ச்சி யும், நமக்காகப் பிடி வைத்து வேண்டிக் கொள்ளத் தங்கையோ, தமக்கையோ இருக்கிறார்களே என்ற பெருமையுமே இதில் முக்கியம். ஒரு தாய் மக்கள் கூடியிருக்கும் சுகம்தான் இதன் தத்துவம். அடையாளமாகக் கொடுக்கும் தாம்பூலமும், மிகச் சிறிய தொகையும் கூட விலை மதிப்பற்றவை" என்று அவளுக்கு பதில் சொன்னாள் சுகன்யா.

வீடு திரும்பும் வழியெல்லாம் சுகன்யாவின் சொற்கள் வனிதாவின் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. 'ஹ¥ம், எங்கேயோ பிரிந்து வந்தாயிற்று. வாழ்த்து அட்டையும், தொலைபேசி வாழ்த்தும் நிலைத்தாலே பெரிது' என எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

சாருவுடன் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான் வினய். மேஜைமீது அன்று வந்த கடிதங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அலட்சியமாகப் புரட்டிய வளுக்கு ஓர் ஆச்சரியம்; அவளுடைய பிறந்தகத்திலிருந்து கடிதம்! பொங்கல் வாழ்த்து அட்டையைப் பிரித்ததும் கீழே விழுந்தது ஒரு காசோலை. நூற்றியொரு ரூபாய்க்கு இருந்த அந்தக் காசோலையுடன் அண்ணாவின் கடிதம்.

"என்ன, ஊரில் ஏதாவது விசேஷ முண்டா?" என்று கேட்ட கணவனிடம் "அண்ணாதான் கனுச்சீர் அனுப்பி யிருக்கிறார்" என்றபடிப் பெருமையுடன் கடிதத்தையும் காசோலையையும் நீட்டினாள். "பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பிய வரை சரி. ரூபாய் செக் அனுப்பறது வேடிக்கையாக இல்லை! இதனால் உனக்கு என்ன உபயோகம்?" என்று கேலி செய்தான் வினய்.

"எந்த நாணயமாற்றும் தேவைப்படாத பாசமாற்றுக் காசோலை இது. இதற்கு மதிப்பே இல்லை" என்றபடி ஆயிரம் டாலர் பரிசாகப் பெற்ற திருப்தியுடன் அதைச் சுவாமி படங்களுடன் வைத்து வணங்கினாள் வனிதா.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com