வள்ளல் அழகப்பர்
தமிழுக்கும் கல்விக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் வள்ளல் டாக்டர். ஆர்.எம் அழகப்பச் செட்டியார். காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில், ஏப்ரல் 06, 1909 அன்று ராமநாதன் செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாரம்பரியச் செல்வமிக்க குடும்பம் என்பதால் ஓர் இளவரசரைப் போலவே வளர்க்கப்பட்டார். பள்ளிக்கல்வியைக் காரைக்குடி எஸ்.எம்.எஸ். வித்யாசாலையில் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர். ராதாகிருஷ்ணன் அக்காலத்தில் அழகப்பரது நண்பரானார். உயர்கல்வி கற்க விரும்பி லண்டன் சென்றார் அழகப்பர். 1933ம் ஆண்டில் பாரிஸ்டர் படிப்பை நிறைவு செய்தார். அங்கிருந்த லண்டன் சார்டட் வங்கியில் சிலகாலம் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் 1934ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு சிலகாலம் வழக்கறிஞர் பணி செய்தார். பின்னர் தொழில்துறை மீது அவரது கவனம் சென்றது. 1937ல் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் நிறுனவத்தைத் துவக்கினார். அது லாபத்தை ஈட்டவே தொடர்ந்து பல தொழில்களில் ஈடுபட்டார். பர்மா, மலேசியா என்று வெளிநாடுகளிலும் மும்பை, கல்கத்தா, சென்னை, கேரளா என உள்நாட்டிலும் பல தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார். பங்கு வணிகத்திலும் முதலீடு செய்தார். ஜூபிடர் ஏர்வேஸ் என்ற விமானக் கம்பெனி ஒன்றை நிறுவி வெற்றிகரமாக நடத்தினார். ஈஸ்ட் அண்டு வெஸ்ட் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஜூபிடர் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவற்றை ஏற்றுத் தனது மேற்பார்வையில் வழி நடத்தினார். அழகப்பர் தொட்டதெல்லாம் துலங்கியது.

தான் பிறந்து வாழ்ந்த செட்டிநாட்டுப் பகுதி, கல்வியில் மிகவும் பின் தங்கி இருந்ததைக் கண்டு மனம் வருந்தினார் அழகப்பர். கல்வி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். அக்காலத்தில் கேரளாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் இருந்தது. அங்கே தமிழ் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டிருந்தும் தமிழுக்கென தனித்துறை இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த அழகப்பர், தமிழ்த் துறையைத் தோற்றுவிக்க ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். தனது ஊரின் கல்விக்கூடத்திற்கு நன்கொடை வழங்கியதுடன் அங்கே சுற்றுப்புற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பயில ஏற்பாடும் செய்தார். ஏழை மாணவர்களது கல்விக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொண்டார். அதோடு மதிய உணவையும் இலவசமாக வழங்கினார். "நான் வள்ளல் அழகப்பரின் இலவசப் பள்ளியில் பயின்று, இலவச உணவு உண்டு வளர்ந்தவன்" என்று குறிப்பிடுகிறார் பேரா. டாக்டர். அய்க்கண். காமராசருக்கும் முன்னதாகவே பள்ளியில் இலவச உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருமை டாக்டர் அழகப்பச் செட்டியாருக்கு உண்டு.

சென்னை அடையாறில் நடந்த டாக்டர் அன்னிபெசண்ட் நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அழகப்பருக்குக் கிடைத்தது. அங்கு உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. இலட்சுமணசாமி முதலியார், கல்வியில் தமிழகம் மிகவும் பின்தங்கி இருக்கிறது; ஆகவே அந்தந்தப் பகுதிகளில் வாழும் செல்வந்தர்கள் கல்வியை வளர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டவுடன் மேடையேறிய அழகப்பர், தாம் காரைக்குடியில் கல்லூரி ஆரம்பிக்க விரும்புவதாகவும் அதற்கு துணைவேந்தர் அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேடையிலேயே அனுமதி அளித்தார் டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார். பாரதம் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1947ல் காரைக்குடியில் இருந்த ‘காந்தி மாளிகை’ என்ற வாடகைக் கட்டிடத்தில் அழகப்பா கல்லூரி துவங்கப்பெற்றது. 1948ல் கணிதமேதை இராமானுஜத்தின் பெயரால் சென்னையில் பெரும் பொருட்செலவில் அழகப்பர் கணித அறிவுக்கூடத்தைத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தென்னிந்தியக் கல்விக் கழகத்திற்கும், மதுரை லேடி டோக் கல்லூரிக்கும் நன்கொடைகள் வழங்கினார். தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஒரு பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது பெருமைக்குச் சான்று. அந்த இல்லத்திற்கு அக்காலத்தில் நேரு போன்றோர் வருகை தந்து சிறப்பித்திருப்பது அழகப்பரின் பெருமைக்குச் சான்றாகும். ராஜாஜி, டாக்டர். ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் அழகப்பர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர்.

அழகப்பரின் பெருமைக்குச் சான்றாக ஒரு சம்பவம்: ஒருமுறை அழகப்பர் வணிகம் தொடர்பாக மும்பைக்குச் சென்றார். அங்கிருந்த பிரபல ரிட்ஸ் ஹோட்டலுக்குச் சென்று அதன் மேலாளரிடம் தமக்கு தங்கும் அறை ஒன்று ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அழகப்பரை ஒரு சாதாரண மனிதராக நினைத்த அந்த மேலாளர், "உங்களால் எல்லாம் இந்த ஹோட்டலில் தங்க முடியாது. உங்களுக்கு இங்கே அறை தரமுடியாது" என்று சொல்லிவிட்டார். உடனே அழகப்பர், "இந்த ஹோட்டலில் எத்தனை அறைகள் இருக்கின்றன?’’ என்று கேட்டார்.

"என்ன? என்னவோ ஹோட்டலை விலைக்கு வாங்கப் போகிறவர் மாதிரிக் கேட்கிறீர்களே’’ என்றார் மேலாளர் கிண்டலாக.

அழகப்பர் அதற்கு விடை கூறாமல் புறப்பட்டார். நேராக அதன் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றவர், தான் அதை விலைக்கு வாங்க விரும்புவதாகவும், அதற்கு என்ன விலை ஆனாலும் கொடுப்பதாகவும் சொன்னார். அழகப்பரைப் பற்றி முன்னரே அறிந்திருந்த ஹோட்டல் முதலாளி உடனே அழகப்பருக்கு அதை விற்றுவிட்டார். மேலும், ஹோட்டல் மேலாளருக்கு போன் செய்து, தான், தமது ஹோட்டலை வேறொருவருக்கு விற்றுவிட்டதாகவும், உடனே இங்கே வந்து அவரிடம் கணக்கு வழக்குகளை ஒப்புவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். மேலாளர் ஓடி வந்து, யார் புதிய முதலாளி என்று பார்த்தார். அது தாம் "அறை இல்லை" என்று சொன்ன நபர்தான் என்று தெரிந்ததும் அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அழகப்பர் புன்னகையுடன் "பார்த்தீர்களா, உமது அகம்பாவத்தினால் எனக்கு இத்தனை லட்சம் செலவாகிவிட்டது. இனிமேலாவது யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்ளாமல் இருங்கள்" என்று அறிவுரை கூறியதுடன், அவரையே தொடர்ந்து மேலாளராகப் பணியாற்ற உத்தரவிட்டார்.

தொடர்ந்து வர்த்தகத் துறையிலும், பங்குவணிகத்திலும் ஈடுபட்டுப் பெரும் பணத்தைக் குவித்தார். ஆனால் ஈட்டிய வருமானம் அனைத்தையுமே கல்வி வளர்ச்சிக்காகவே செலவிட்டார். நேரு தலைமையிலான மத்திய அரசு மின்வேதியியல் துறை வளர்ச்சிக்காக இரசாயன ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை நிறுவத் திட்டமிட்டிருந்தது. இதனை அறிந்த அழகப்பர், நேருவை நேரடியாகச் சந்தித்தார். தனது ஊரான காரைக்குடியில் அதை நிறுவ வேண்டும் என்றும் அதற்காகத் தாம் 15 லட்சம் ரூபாய் பணமும், 300 ஏக்கர் நிலமும் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நேரு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டு அதற்கு அடிக்கல் நாட்டினார். இச்செயலுக்காக அழகப்பரை "சோஷலிஸ் முதலாளி" எனப் புகழ்ந்துரைத்தார் நேரு. 1953ம் ஆண்டு, ஜனவரி 14 அன்று ’சிக்ரி’ (Central Eletro Chemical Research Institute) இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அழகப்பச் செட்டியார் சிறந்த கலா ரசிகரும் கூட. உலகப் பயணி. தமிழ், ஆங்கில நூல்களை விரும்பி வாசிப்பவர். அறிவார்ந்த பல மனிதர்கள், சிந்தனையாளர்கள் அழகப்பரிடம் அன்பும், நட்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். அழகப்பரின் மகள் உமையாளுக்கும் ராமநாதனுக்கு நிகழ்ந்த திருமணம் அக்காலத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. அந்த விழாவைக் காண செட்டிநாடு முழுவதிலிருந்தும், சுற்றியுள்ள பதினெட்டுப் பட்டிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினார் அழகப்பர். விழாவில் மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களும், பிரபல அரசியல், இலக்கிய, சினிமாப் பிரபலங்களும் வந்து கலந்து கொண்டனர். சென்னை உட்படப் பல பகுதிகளிலிருந்து கோட்டையூருக்கு இலவசப் பேருந்து, ரயில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ஜி.என்.பாலசுப்ரமணியன், எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எம். தண்டபாணி தேசிகர், எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோரது இசை நிகழ்ச்சிகள் தொடர் நிகழ்ச்சிகளாக நடந்தன. லலிதா, பத்மினி, ராகினியின் நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான நிதிக்கொடை அளித்துள்ளார் அழகப்பர். கிண்டியில் அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியை நிறுவுவதற்கு ஐந்து லட்சம் ரூபாயும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர் அண்ணாமலை பொறியியற் கல்லூரி தொடங்க ஐந்து லட்சம் ரூபாயும் அளித்தார். காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரியை நிறுவ ஏற்பாடு செய்ததும் அவரே. இவை தவிர மழலையர்களுக்கான மாண்டிசோரிப் பள்ளி, ஆயத்தப்பள்ளி, மாடல் ஸ்கூல் எனப்படும் ஆதாரப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பாலிடெக்னிக், உடற்பயிற்சிப் பள்ளி, இசைப் பள்ளி போன்றவையும் அழகப்பரின் முயற்சியால் உருவாயின. அக்காலத்தில் கல்வியகங்கள் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களிலேயே இருந்தன. மிகவும் பின்தங்கிய பகுதியான காரைக்குடி, திருப்பத்துர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்தோர் உயர்கல்வி கற்க இயலாமல் போனது. இதனை மாற்றியமைத்தார் அழகப்பர். வெறும் காரைப் புதர்கள் மண்டியிருந்த காரைக்குடியை கல்விக்குடி ஆக்கிய பெருமை அழகப்பரையே சாரும். அவர் நிறுவிய கல்விக்கூடங்களின் அடிப்படையில் தமிழக அரசு 1985ம் ஆண்டில் அழகப்பா பல்கலைக்கழகத்தை (www.alagappauniversity.ac.in) உருவாக்கியது. அழகப்பரது பணிகளைப் பராட்டி 1943ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், 1944ல் சென்னைப் பல்கலைக்கழகமும் ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. 1946ல் அழகப்பருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பெற்றது. இந்திய அரசு அவருக்கு 1957ம் ஆண்டு ‘பத்மபூஷண்’ விருது வழங்கியது.

பல சமூக மற்றும் அற நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் அழகப்பர் வழங்கிய கொடைகளின் பட்டியல் மிக நீளமானது. அழகப்பர் தமது சொத்துக்களை எல்லாம் திரட்டி ஓர் அறநிதியமாக ஏற்படுத்தினார். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுதும் கல்விக்கே செலவழிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். தாம் வாழ்ந்த வேப்பேரி இல்லத்தையே அவர் மாணவியர் விடுதி ஒன்றுக்குக் கொடையாக அளித்தார். இதனால் இவரை ‘வள்ளல் அழகப்பர்’ என்று வாயார அழைத்து மகிழ்ந்தனர் மக்கள்.

"கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
வீடும் கொடுத்த விழுச்செல்வன் - தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்...."

என்று வள்ளல் அழகப்பரைப் பாராட்டுகிறார் டாக்டர். வ.சுப. மாணிக்கம் அவர்கள். ஈதல்மூலம் இசைபட வாழ்ந்த வள்ளல் அழகப்பர், நாற்பத்தொன்பதாம் வயதில் ஏப்ரல் 5, 1957 அன்று சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் இன்று உலகெங்கும் பரவி அந்நிறுவனத்திற்குப் புகழ் சேர்த்து வருகின்றனர். வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியாரின் பேரரான டாக்டர் ஆர்.எம். வைரவன் தமது பாட்டனார் காட்டிய வழியில் நின்று, அழகப்பா குழும நிறுவனங்களான Alagappa Institute of Technology, Alagappa Foundation Inc (USA) உட்படப் பல புதிய நிறுவனங்களை உருவாக்கி இன்று சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறார்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com