காற்றோடு வந்தது காற்றோடு போகட்டுமே!
அன்புள்ள சிநேகிதியே

உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதிக் கொண்டே இருக்கிறீர்களே? இரண்டு மனிதர்களுக்கும் அந்த உறவின் முக்கியத்துவம் தெரிய வேண்டாமா? நாம் மட்டும் உறவு முக்கியம் என்று நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டே போவதில் என்ன பிரயோசனம்? இந்த மாதிரி உறவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்பது போலக் கசப்புத்தான் மிஞ்சுகிறது. பிறருக்காக அட்ஜஸ்ட் பண்ணிப் பண்ணி எனக்கு அலுத்துப் போய்விட்டது. மாமியார், நாத்தனார் என்று பயந்து, பயந்து மரியாதை கொடுத்து என்னத்தைக் கண்டேன்? நம்மைப் புரிந்து கொள்ளாதவர்களை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் எழுதுகிறேன். சொற்களால் மனிதர்கள் நம்மை எப்படிப் புண்படுத்தமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம். விவரமே தெரியாமல் நம்மீது எகிறினால் எப்படி? எனக்கு இன்னும் அந்த அதிர்ச்சி போகவில்லை.

என்னுடைய பெரிய நாத்தனார் இந்தியாவில் இருக்கிறார். கொஞ்சம் அதிகாரத்துடன் தான் செயல்படுவார். எனக்கு பயம் உண்டு. ஆனாலும், சிறுவயதிலேயே கணவரை இழந்து இரண்டு குழந்தைகளைத் தன் சாமர்த்தியத்தால் முன்னுக்குக் கொண்டு வந்தவர் என்று எனக்கு அவர்மேல் மரியாதை, பரிதாபம் உண்டு. அவருடைய இரண்டு பையன்களுக்கும் இங்கே வந்த பிறகு நாங்கள்தான் மேற்படிப்புக்கு உதவி செய்தோம். வசதி வந்த பிறகு அவர் சமூகசேவை என்று ரோடரி, லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகளில் பதவி ஏற்க ஆரம்பித்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவருடைய முக்கிய நண்பர் குடும்பம் அமெரிக்கா வருகிறார்கள், நாங்கள் ஒரு வாரம் 'host' செய்ய வேண்டும் என்றார். அவர்கள் இங்கே வந்தபின் தங்கள் தேவைக்கேற்பக் கூப்பிட்டுச் சொல்வார்கள் என்று சொல்லியிருந்தார். நானும், 'நோ ப்ராப்ளம். கண்டிப்பாக’ என்று ஃபோனில் சொன்னேன். மறுக்கவில்லை. எனக்கு அந்த நண்பர், செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் வர இருக்கிறார்கள் என்றுதான் புரிந்ததே தவிர, தேதி, மற்ற விவரங்கள் ஏதும் குறிப்பாகத் தெரியவில்லை. நான் என் வேலையில் மிகவும் பிஸியாகி விட்டேன்.

இதற்கு நடுவில் என் கணவருக்கு திடீரென்று உடம்புக்கு வந்துவிட்டது. மிகவும் பயந்து போய்விட்டேன். எமர்ஜன்சி, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று ஒரு வாரம் ஒரே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். மின்னஞ்சலைப் பார்க்காமல், அது நிரம்பி வழிந்திருக்கிறது. வேலைக்கும் இரண்டு நாள் போகவில்லை. எவ்வளவோ குழப்பத்தில் இருந்தேன். எல்லாம் சரியாகி என் கணவர் வீட்டுக்கு வந்த பிறகுதான் மற்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றியது.

என் நாத்தனாருக்கு இவருக்கு ஏற்பட இருந்த விபரீதத்தைச் சொல்லிவிட வேண்டும். அவரை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்து ஃபோன் செய்தேன். "அக்கா, எப்படி இருக்கிறீர்கள்?" என்று ஆரம்பித்தேன். அவ்வளவுதான், அவர் கத்த ஆரம்பித்தார். "நான் எப்படி இருந்தால் உனக்கென்ன? உன்னை நம்பி என் மானம் போய் விட்டது. அவ்வளவு முக்கியமான ஃப்ரெண்ட்ஸ் எனக்கு. அவர்கள் உன் ஆஃபீஸ் மாற்றி வீடு என்று ஃபோன் செய்து பார்த்திருக்கிறார்கள். நீ பெரிய மேனேஜர் என்று தெரியும். திரும்பி ஃபோன் செய்து என்னால் முடியவில்லை என்று கூடவா உன்னால் சொல்ல முடியாது? என்ன படித்தவர்கள் நீங்கள்? பணத் திமிர், படிப்புத் திமிர், தொழில் திமிர் உங்களுக்கெல்லாம். நானும் பார்க்கிறேன். அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாருக்குமே இந்த வாய்ஜாலம் தான் இருக்கிறது. ஒரு உபகாரம் செய்ய ஆயிரம் தடவை யோசிக்கிறீர்கள். அந்தக் குடும்பம் நடுத்தெருவில் நின்றது. எனக்கு ஃபோன் செய்து கேட்டார்கள். உன் புருஷனைக் கூப்பிட்டால் அவனும் எடுக்கவில்லை. எனக்கு இவர்களைப் பார்க்கவே அவமானமாக இருக்கிறது. உங்களுக்கு இஷ்டமில்லையென்றால் சொல்ல வேண்டியது தானே" என்று பொறிந்து தள்ளினார். என்னைப் பேசவே விடவில்லை. என் பக்கம் நியாயத்தையும் கேட்கவே இல்லை. நான் வெறுப்படைந்து ஃபோனை வைத்து விட்டேன். இன்னும் 2, 3 கடுமையான வார்த்தைகளையும் சொன்னார்.

நான் அவற்றை நினைத்து அழுதேன். இனிமேல் அவருடைய உறவும் வேண்டாம் என்று தீர்மானம் செய்தேன். அவருடைய இரண்டு பையன்களும் நல்லவர்கள். இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்குப் போன வாரம் ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் அம்மாவின் நடத்தைக்கு வருத்தப்பட்டார்கள். அப்புறம் அவர்கள் என் நாத்தனாரிடம் பேசி எல்லாவற்றையும் விளக்கிச் சத்தம் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது. நேற்றைக்கு திடீரென்று உருகி ஒரு Phone call - voice message. ஒன்றுமே நடக்காதது போல என் நாத்தனார் "அவன் எப்படியிருக்கான். நன்னா பார்த்துக்கோ. ஒரே கவலையாயிருக்கு" என்பது போல வார்த்தைகள்! எனக்கு அவரைப் புரிந்தது, ஆனாலும், மனத்தில் விரக்தி வந்துவிட்டது. மறுபடியும் ஒரு அரைமணி நேரம் முன்பு ஃபோன் செய்தார். எனக்கும் அவரைப் போல திரும்பிக் கத்த வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம். அவர் வயதில் பெரியவர், வாழ்க்கையில் அடிபட்டவர் - கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஃபோனை எடுக்கவில்லை. என் கணவரைக் கூப்பிட்டுச் சொன்னேன். "ஏதோ வயதானவள். பேசி விட்டாள் கோபத்தில். ஏதேனும் அவள் க்ளப்பில் பதவிக்கு அவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கலாம். இவ்வளவு நாளும் இப்படியேதான் இருந்திருக்கிறாள். நீதான் அட்ஜஸ்ட் செய்து போயிருக்கிறாயே, Just Leave it" என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார். எனக்கு இன்னும் கோபம்தான் வந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முக்கிய உறவு. மொத்தமாக அறுத்துவிட முடியாது என்று தெரிகிறது. ஆத்திரத்தில் அள்ளி வீசிவிட்டார் வார்த்தைகளை, ஏமாற்றத்தால். ஆனால் எனக்கு அவர் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியவில்லை. நீங்கள் என் நிலையில் இருந்தால் என்ன செய்வீர்கள்? அதை மட்டும் சுருக்கமாகச் சொல்லி விடுங்கள்.

இப்படிக்கு
....................

அன்புள்ள சிநேகிதியே


எனக்கும் கோபம் வரும். எனக்கும் உங்களுக்குத் தோன்றிய அத்தனை உணர்ச்சிகளும் இருக்கும். ஒரு எண்ணம் தோன்றும். ஒரு முக்கியக் கிளையை முழுதாக வெட்டும்போது மற்ற இணைக் கிளைகளும் அறுந்து போகுமே? அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனோபலம் இருக்கிறதா? இல்லை, அந்த மனோபலம் தேவைதானா என்று யோசிப்பேன். வெட்டுவது சுலபம். ஆனால், வேண்டுமென்றால் திரும்ப எப்படி ஒட்டுவது என்று யோசிப்பேன். அவர் சொன்ன வார்த்தைகளைத் திருப்பித் திருப்பி மன சி.டி.யில் ஓட விடுவேன். முதலில் அது உரத்து ஒலிக்கும். அப்புறம் அதன் வீரியம் குறைவது போலத் தெரியும். என் மனதைச் சமாதானம் செய்யப் பார்ப்பேன். After all வார்த்தைகள் தானே. ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் தெரிய வருவதால் நாம் அவமானமோ சந்தோஷமோ படுகிறோம். தெரியாவிட்டால்? பாருங்களேன், "You have Thimir" என்று தமிழ் தெரியாதவர்களிடம் புன்னகையோடு சொன்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். கை குலுக்குவார்கள். This is only one time episode. மற்றபடி "She was not that bad" என்று நினைப்பேன். மறுபடியும் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன். யோசிப்பேன். After all they are audio waves. காற்றோடு வந்த வார்த்தைகள்; காற்றோடு பறந்து போகட்டுமே. There ends the matter.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com