கலைமாமணி வீ.கே.டி.பாலன்
வீ.கே.டி.பாலன் 'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ்நாட்டிலிருந்து 1500க்கும் மேற்பட்ட கலைஞர்களை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்றிருப்பவர். இந்தியாவிலிருந்து மிக அதிகமாக இந்தியக் கலைக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதால் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸின் சாதனைப் பக்கங்களில் இடம் பெற்றவர். 'பண்பாட்டுக் கலை பரப்புநர்' என்ற வகையில் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட அவருடனான சந்திப்பிலிருந்து....

கே: 'மதுரா ட்ராவல்ஸ்' ஆரம்பிப்பதற்கு முன்னான உங்கள் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்...
ப: எனது சொந்த ஊர் திருச்செந்தூர். சாதாரணமான ஏழைக் குடும்பம். குடும்பத் தொழில் சலவைத் தொழில். கழுதைகளுடன்தான் எனது வாழ்க்கையின் ஆரம்பகாலம் நடந்தது. எட்டாம் வகுப்பிற்கு மேல் நான் படிக்கவில்லை. அங்குள்ள வேலையில்லாத பல இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு உருப்படாதவனாக ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். அதையும் சகித்துக் கொண்டு தன் உழைப்பால் என்னை ஆதரித்துக் கொண்டிருந்த என் தந்தையார் திடீரெனக் காலமானார். குடும்பத்தைப் பொறுப்பேற்று நடத்தவோ, என் தாயை ஆதரிக்கவோ யாரும் இல்லை. உலகம் தெரியாமலேயே வளர்ந்துவிட்ட எனக்கும் அந்தச் சக்தி இல்லை. அந்தக் கிராமத்தில் பிழைக்கவும் வழியில்லை. வேறு தொழிலும் தெரியாது. அங்கே வாழப் பிடிக்காமல் வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26ல் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

கே: ஓ! சென்னையில் யார் இருந்தார்கள்?
ப: சென்னையில் யாரையுமே எனக்குத் தெரியாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜன்ஸிகளில் வேலை கேட்டேன். கிடைக்கவில்லை. யாருடைய அறிமுகமாவது இல்லாமல் வேலை கிடைக்காது. புதியவர்கள் எதையாவது திருடிக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். பசியுடன் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், அரவாணிகள், பாலியல் தொழிலாளர்கள், பிக்பாக்கெட்காரர்கள் என விளிம்புநிலை மனிதர்களுடன் நானும் படுத்துக் கொண்டிருப்பேன். அழுக்குச் சட்டை, பேண்ட், மழிக்காத தாடி, தலைமுடி எனக் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி போல இருந்தேன். பைத்தியங்களுக்குப் பசி, தூக்கம் வராது. அந்த உணர்வே அவர்களிடம் மரத்துப் போயிருக்கும். நானும் அப்போது அப்படித்தான் இருந்தேன்.

ஒருநாள் இரவு பசி மயக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தபோது படாரென்று ஒரு அடி விழுந்தது. எழுந்து பார்த்தால் ஒரு போலீஸ்காரர். என்னைப் பார்த்து 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார். நான் 'பாலன்' என்று சொன்னேன். சொன்னவுடனேயே அவர் ஆக்ரோஷத்துடன் தடியால் மீண்டும் அடித்தார். அடித்த அடியில் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. எனக்குக் காரணம் புரியவில்லை. "டேய், உன் பேரக் கேட்டா, என் பேரை ஏண்டா சொல்றே?" என்றார். சட்டையில் பார்த்தால் அவர் பெயர் 'பாலன்' என்று எழுதி இருந்தது. தன் பெயரில் இப்படி ஒரு வீணாய்ப் போனவன் இருக்கிறானே என்ற கோபமோ என்னவோ, மிகக் கடுமையாக அடித்து விட்டார். பிறகு, பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொருவரிடம் "சோத்துக்கே வழியில்லாத நம்மை ஏன்யா பிடிக்கிறாங்க?" என்று கேட்டேன். "அவங்களுக்கு கேஸ் சரியா கிடைக்கலைன்னா இப்படித்தான் பிடிப்பாங்க. கொஞ்ச நாள் ஜெயில்ல போட்டுட்டு அப்புறம் விட்ருவாங்க. இது அடிக்கடி நடக்கறதுதான்" என்றார் அவர். அடுத்து ஜெயிலுக்குப் போகப்போவது நிச்சயமானது. சடாரென்று எடுத்தேன் ஓட்டம். போலீஸ்காரரும் துரத்தினார்.

கே: ஆ... அவர் கையில் மாட்டினீர்களா?
ப: இல்லை. அவரால் என்னைப் பிடிக்க முடியவில்லை. எனது ஓட்டம் மவுண்ட் ரோடில் ஓரிடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்ஃபாரத்தில் சிலர் படுத்துக் கொண்டிருந்தனர். பேண்ட், சட்டை, கோட் எல்லாம் போட்டுப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். நானும் பாதுகாப்புக்காக அவர்கள் அருகிலேயே படுத்துக் கொண்டேன். அசதியில் தூங்கியும் விட்டேன். விடியற்காலை நேரம். ஒருவர் என்னை எழுப்பினார். "தம்பி. இந்த இடத்தை எனக்குத் தர்றியா?" என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "இடத்தைத் தருவதா, எப்படி?" என்று மனதுக்குள் நினைத்தவாறே தயக்கத்துடன் "எவ்வளவு?" என்றேன். "ரெண்டு ரூபாய்" என்றார் என்ன இடம் இது என்று நிமிர்ந்து பார்த்தேன். 'அமெரிக்கத் துணைத் தூதரகம்' என்ற போர்டு இருந்தது. அந்த இரண்டு ரூபாய்தான் சென்னையில் எனது முதல் வருமானம். இதையே ஒரு தொழிலாகச் செய்தால் என்ன என்று தோன்றியது. ரெண்டு ரூபாய் நான்கானது, நான்கு, எட்டானது, பத்தானது. இப்படித்தான் ஆரம்பித்தது என் வாழ்க்கை.

கே: அதன் பின்...
ப: அந்தத் தொழிலில் வருமானம் போதுமானதாக இல்லை. இன்னொரு பேண்ட், சர்ட் வாங்கக்கூட முடியவில்லை. பகலில் வள்ளுவர் கோட்டம். இரவில் அமெரிக்கத் தூதரக வாசல் எனக் கொஞ்சநாள் ஓடியது. நண்பன் ஒருவன் மூலம் சைதாப்பேட்டையில் ஒரு வீட்டுத் திண்ணையில் தங்க இடம் கிடைத்தது. பின்னர் சைதாப்பேட்டை, சேஷாசல முதலி தெருவிலிருக்கும் மெட்ராஸ் பில்டிங்கில் ஒரு பழைய ஸ்டோரில் ஐம்பது ரூபாய் வாடகைக்கு ஒரு ரூமில் பூரான்கள், தேள்கள், பல்லிகள் இவற்றோடு தங்க ஆரம்பித்தேன். வரிசையில் நிற்பவர்களிடமிருந்தும், ட்ராவல் ஏஜெண்டுகளிடமிருந்தும் பயண டிக்கெட்டை எங்கே வாங்குவது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு அறிமுகமானதுதான் அசோக் டிராவல்ஸ். அது விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களின் நிறுவனம். அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த சந்திரா அம்மையார் எனக்கு இந்தத் தொழிலின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாதவர் அவர். ட்ராவல் ஏஜென்ஸிக்கான எல்லாவற்றையும் கற்றுத் தந்ததோடு அவர்களுக்கு ஏஜெண்டாகப் பணியாற்றும் வாய்ப்பையும் தந்தார். வரிசையில் நிற்பவர்களிடம் பயணச் சீட்டை வாங்க அசோக் டிராவல்ஸுக்கு அழைத்துச் செல்வேன். எனக்குக் கிடைத்த கமிஷனில் சிறிதை நான் எடுத்துக் கொண்டு மீதியை வாடிக்கையாளருக்கே கொடுத்துவிடுவேன். இதனால் என்னிடம் பலர் வர ஆரம்பித்தார்கள். மாதம் 300, 400 ரூபாய் வருமானம் வர ஆரம்பித்தது. சைதாப்பேட்டையில் அதே லாட்ஜில் 150 ரூபாய்க்கு தனி அறை எடுத்தேன். வளர்ச்சி பெற்றேன். 1986 ஜனவரி 17ல் சென்னை, மண்ணடியில் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம், 1500 ரூபாய் வாடகையுடன் 'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன். சவால்கள் பலவற்றைக் கடந்து இன்றைக்கு 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

கே: 'மதுரா ட்ராவல்ஸ்' நிறுவனம் எந்தவிதத்தில் மாறுபடுகிறது?
ப: இது IATA Approved Travel Agency. எல்லா விமான நிறுவனங்களின் டிக்கெட்டுக்கும் ஸ்டாக்கிஸ்ட்டுகள். எல்லா கன்சலேட்டுகளும் எங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். நாங்கள் Travel Agents Association of India (TAAI) உறுப்பினரும் கூட. உலக நாடுகளில் இருக்கும் வெஸ்டர்ன் யூனியனின் 90,000 கிளைகளில் நீங்கள் எங்கு பணம் செலுத்தினாலும் ஏழே நிமிடங்களில் அதை எங்கள் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள வசதி இருக்கிறது. தமிழகத்திலேயே IATA Approved Travel Agencyயில் வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் சேவை வழங்குவது எங்கள் நிறுவனம் மட்டும்தான். இன்று எழும்பூரில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறோம்.

கே: சுற்றுலா வளர்ச்சிக்காக நீங்கள் செய்து வரும் சேவைகள் குறித்து...
ப: உலகநாடுகள் பலவற்றிற்கும், உள்நாட்டின் மிக முக்கியமான பல இடங்களுக்கும் நாங்கள் சுற்றுலாச் சேவை வழங்குகிறோம். விவரங்களை maduratravel.com என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம். சுற்றுலாவுக்கு மிகவும் முக்கியமானது சுற்றுலா பற்றிய நூல்களை உருவாக்குவது. அந்த வகையில் இன்று சுற்றுலா பற்றிய நூல்களிலேயே முதலிடம் வகிப்பது நாங்கள் உருவாக்கியிருக்கும் Madura Welcome. 700க்கும் மேற்பட்ட பக்கங்களில், உயர்தரத் தாளில் அந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறோம். அதன் துணை கொண்டு, பிறர் உதவியில்லாமல் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் சுற்றி வர முடியும். அந்தந்தப் பகுதியில் உள்ள விளம்பரதாரர்கள் மூலம் நீங்கள் நல்ல சேவையைப் பெற முடியும். அதை மிகக் குறைந்த பட்ச விலையில் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். உலகளாவிய பயணிகள் அதனை madurawelcome.com என்ற தளத்தில் இலவசமாகப் பார்த்துத் தகவல் அறிந்து கொள்ளலாம்.

கே: நீங்கள் ஒரு தொழிலாளி ஆக இருந்து முதலாளி ஆனவர். உங்கள் தொழிலாளர்களுக்கு குறித்துச் சொல்லுங்கள்...
ப: IATA அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்வதில் 'இப்படித்தான்' என்று ஒரு வரைமுறை இருக்கிறது. மிகவும் இளைஞர்களாக, பார்க்க அழகானவர்களாக, உயர் வர்க்கக் குடும்பப் பின்புலம் கொண்டவர்களாக, மிக அழகாக எழுதத் தெரிந்தவர்களாக, நுனி நாக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களாக, பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பல வரையறைகள் உள்ளது. இப்படித்தான் IATA அனுமதி பெற்ற பல நிறுவனங்களில் எம்.டி.க்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் ஒருவன்தான் இந்தத் துறையில் ஆங்கிலம் பேசத் தெரியாதவனாக, கோட்-சூட் போடாமல் வேட்டி, சட்டை, துண்டு உடுத்துபவனாக, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவனாக, உயர் குடும்பப் பின்னணி இல்லாதவனாக இருக்கின்றவன். எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாத நானே எம்.டி. பொறுப்புக்கு வர முடிந்திருக்கும் போது, என் ஊழியர்களாலும் ஏன் வர முடியாது என்று நினைத்தேன். ஆகவே தமிழைத் தவிர பிற மொழி அறியாத, பின் தங்கிய, மிகவும் ஏழைக் குடும்பப் பின்னணி கொண்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் எனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பளிக்கிறேன். அவர்கள் இங்கு வந்த பிறகு அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. என் ஊழியர்களைப் போல திறன்மிக்க, விசுவாசமான, அன்புமிக்க, பொறுப்பான ஊழியர்களை வேறு எந்த IATA அனுமதி பெற்ற நிறுவனத்திலும் நீங்கள் காண முடியாது. என்னை "உழைப்பால் உயர்ந்தவர்" என்று மேடையில் அறிமுகப்படுத்துவார்கள். "உண்மைதான். நான் என்னுடைய ஊழியர்களின் உழைப்பால் உயர்ந்தவன். அதை சொல்லாவிட்டால் நன்றி மறந்தவன் ஆவேன்" என்று நான் பதில் சொல்வேன்.

(பாலன் அன்னை தெரசாவைச் சந்தித்தது ஒரு நெகிழ வைக்கும் அனுபவம். ஒரு ட்ராவல் ஏஜண்டிடம் மிகச் சிறிய வேலையில் இருந்த பாலனை அவர் செய்த அசகாய தீரச் செயல் ஒன்று முன்னணிக்குக் கொண்டுவந்தது. அது சினிமாவைவிடச் சுவையான சம்பவம். இவை தவிர அவருடைய திரைப்படம் மற்றும் சின்னத்திரை அனுபவம் போன்ற பல சுவையான விஷயங்களை அடுத்த இதழில் பார்க்கலாம்.)

அடுத்த இதழில் நிறைவுறும்...

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


பசியின் ருசி
சென்னையில் முதன் முதலில் எனக்குக் கிடைத்த வருமானம் ரெண்டு ரூபாய். பணம் வந்ததும் சோறு சாப்பிட ஆசை வந்தது. நடந்தே வள்ளுவர் கோட்டம் சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டேன். அருகே ஒரு முனியாண்டி விலாஸ் ஹோட்டல் இருந்தது. அங்கே சென்று சாப்பாடு கேட்டேன். 11 மணிக்கு மேல் தான் சாப்பாடு. இப்போ இட்லி, இடியாப்பம்தான் கிடைக்கும் என்றார்கள். எனக்கு அது போதாது. சோற்றின் ருசி கண்டு பல நாட்கள் ஆகி விட்டன. எனக்குச் சோறு ஒரு கனவு. எப்போதடா 11 மணி ஆகும் எனக் காத்திருந்தேன். கடை வாசலில் 'சாப்பாடு தயார்' என்ற போர்டைக் கொண்டு வைத்தார்கள். சாதம், சாம்பார், குழம்பு, ரசம், மோர், அவியல், பொரியல் எனப் பெரிய லிஸ்ட். விலை 2 ரூபாய். 2 ரூபாய் 10 பைசா என்று போட்டிருந்தால் கூட நான் சாப்பிட்டிருக்க முடியாது. உள்ளே சென்று சாப்பிட உட்கார்ந்தேன். என்னை ஒரு பூச்சியைப் போல எல்லோரும் பார்த்தார்கள். காரணம் என் உடை, மழிக்காத தாடி, சிக்கேறிய தலை. பிச்சைக்காரனைப் போல் இருந்தேன். இலையைப் போட்டு சாப்பாட்டைக் கொண்டு வைத்தார்கள். எனக்குச் சப்பென்று ஆனது. காரணம், அது அளவுச் சாப்பாடு. சாதக்கட்டி கொஞ்சம் பெரிய இட்லி மாதிரி இருந்தது. சோற்றை கோபுரம் போலக் குவித்து குழம்பு ஊற்றி ஒரு கட்டு கட்டுவோம் என்று நினைத்திருந்த எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம். சாதத்திற்குத் தான் அளவு எல்லாம். கூட்டு, பொரியல், கீரைக்குக் கிடையாது என்பது புரிந்தது. உடனே பொரியலும், கூட்டும், கறியுமாக வாங்கி ஒரு கட்டுக் கட்ட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் என்னுடைய டெக்னிக்கைப் புரிந்து கொண்ட சப்ளையர் எல்லாவற்றையும் உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டார். மீண்டும் கேட்டால் கிடைக்காது என்பது தெரிந்தவுடன்தான் சாதத்தைப் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தேன். அன்றைக்கு நான் சாப்பிட்ட சாப்பாட்டின் ருசி, இன்றைக்கு வாரத்துக்கு ஐந்து நாள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுகிற போதும், விமான நிறுவனங்கள், கன்சலேட்டுகள் அளிக்கும் விருந்துகளில் கலந்து கொள்கிறபோதும் எனக்குக் கிடைக்கவில்லை. அன்றைக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி அது மாதிரி உணவை நான் உண்டதே இல்லை. ஏனென்றால் அது உணவின் ருசி அல்ல; பசியின் ருசி.

வீ.கே.டி. பாலன்

*****


சாமியே சரணம் ஏசப்பா...
எனக்குத் திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்து விட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம். மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள் போலப் பழகிக் கொண்டிருந்தோம்.

1991ஆம் ஆண்டு நான் 10வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று... கிறிஸ்துமஸ் நாள். வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்திறங்கும்.

அவ்வருடம் நான் விரதமிருந்த வேளையிலும் அச்சிறுவனை நோக்கி விளையாட்டாக, "இன்னைக்கு எங்க வீட்டுக்கு சிக்கன் பிரியாணியா... மட்டனா?" என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், " நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸுக்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்திடுவீங்க... நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ண வேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க"

"சாமியே சரணம் அய்யப்பா!" என்று கோஷமிட வேண்டிய என் இதயம், " சாமியே சரணம் ஏசப்பா!" என்று கோஷமிட்டது.

வீ.கே.டி. பாலன் எழுதிய 'சொல்லத் துடிக்குது மனசு' நூலில் இருந்து

© TamilOnline.com