அழகியபெரியவன்
தலித் இலக்கியத்தின் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்திற்குரியவர் அழகியபெரியவன். எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், மேடைப் பேச்சாளர், சமூகப் போராளி. இயற்பெயர் அரவிந்தன். வேலூரை அடுத்த பேரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் சின்னதுரை-கிரேஸ் கமலம். ஆம்பூரில் பாட்டி வீட்டில் தங்கிப் பள்ளியில் படித்தார் அழகியபெரியவன். மாமாவின் புத்தகங்களும், சக மாணவர்கள் அறிமுகம் செய்த காமிக்ஸ்களும், நூலகங்களும் வாசிப்பார்வத்தைத் தூண்டின. பள்ளிப்படிப்புக்குப் பின் வேலூர் ஊரிசு கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்தார். கல்லூரி ஆண்டு மலரில் முதல் கட்டுரை பிரசுரமானது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டு இறுதியில், கல்லூரி முத்தமிழ் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசு இவரை ஊக்குவித்ததுடன் பல திறப்புகளை ஏற்படுத்தியது. தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். தனது சமூகமும், தன்னைப் போன்றவர்களுக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்களும் இவரைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்கின. ஒரு தொண்டு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றியபோது பல கிராமங்களுக்கும் சென்று தங்கிப் பணிபுரிய நேர்ந்தது. அந்த அனுபவங்கள் இவரது மனதை வாட்டின. தலித்துகளின் வாழ்க்கைப் பிரச்சனைகள் இவரது சிந்தனையைத் தூண்டின. அவை வலுவான படைப்புகளாக வெளிப்படத் துவங்கின. அதுவரை யாரும் எழுதியிராத வட தமிழக மக்களின் வாழ்க்கை அவலங்களை எழுத்தில் பதிய ஆரம்பித்தார்.

முதல் சிறுகதை மாவட்ட அளவில் வெளிவந்த ஒரு பத்திரிகையிலும், முதல் கவிதை 'அரும்பு' இதழிலும் வெளியானது. கவிதை, சிறுகதை, நாவல் என பல தளங்களிலும் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். தலித் மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் 'மழை', 'சுமை', 'தனம் அறிவது' போன்ற இவரது கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 1997ல் "கணையாழி' நடத்திய குறுநாவல் போட்டியில் 'தீட்டு' என்னும் இவரது குறுநாவல் பரிசு பெற்றது. அது இவருக்கு இலக்கிய உலகில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. பாலியல் தொழிலாளி ஒருவரைப் பற்றிய அச்சிறுகதை, பாலியல் தொழிலாளர்கள் உருவாக்கத்தின் சமூகக் காரணிகளை வெளிச்சமிட்டதுடன் அவர்களின் வாழ்க்கையை நெருக்கமாக அறிமுகப்படுத்தியது. இக்கதை இலக்கிய உலகின் பரவலான கவனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது. அடுத்து வெளியான 'தகப்பன் கொடி' நாவல், தலித் மக்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், எப்போதும் கூலிக்காகக் கையேந்துபவர்களாகவும் ஆக்கிய சக மனிதர்களின் துரோகத்தையும், அரசின் புறக்கணிப்பையும் சுட்டிக் காட்டியது. இது தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றதுடன், 'தலித் முரசு' கலை இலக்கிய விருதையும், 'பொ.மா. சுப்பிரமணியம் அறக்கட்டளை' விருதையும் பெற்றுத் தந்தது. சில பல்கலைக்கழகங்களில் இந்நாவல் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. 'இந்தியா டுடே' இதழின் நம்பிக்கைக்குரிய எதிர்கால ஆளுமைகள் பட்டியலில் அழகியபெரியவனின் பெயர் இடம்பெற்றதுடன், 'சிகரம் 15' என்னும் இந்தியா டுடேவின் கௌரவமிக்க விருதும் இவருக்குக் கிடைத்தது.

'தீட்டு', 'நெரிக்கட்டு', 'கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'அழகிய பெரியவன் கதைகள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. 'பூவரசம் பீப்பி', 'பிச்சை', 'மண்மொழி, 'வீச்சம்', 'இறகு பிய்த்தல்', 'தண்ணிக் கட்டு நாள்', 'வாதை' போன்ற சிறுகதைகள் மிக முக்கியமானவை. வேறு யாராலும் எழுதப்பட முடியாத அளவிற்கு அனுபவ ஞானமும், மண்ணின் மணமும் கொண்டவை. இவரது சிறுகதை குறும்படமாகவும் வெளியாயுள்ளது. 'சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்' என்ற சிறுகதைக்கு 2012ம் ஆண்டிற்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது கிடைத்தது. இவரது குறுநாவல்கள் தொகுக்கப்பட்டு, 'திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. தலித்துகளின் சமூகப் பிரச்சனைகள், போராட்டங்கள், உள்சாதி முரண்பாடுகள், வலிகள், பெண்களின் நிலை போன்றவை இவருடைய படைப்பாக்கக் களங்களாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் அவலக் குரலையும், சமூகத்தின் மீதான அவர்களது தார்மீகக் கோபத்தையும், புறக்கணிப்பையும், இயலாமையையும், இவரது படைப்புகள் மிகத் தீவிரமாகச் சுட்டிக் காட்டுகின்றன. 'மீள்கோணம்' ('தலித் முரசு' இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு), 'நீ நிகழ்ந்தபோது' (கவிதைத் தொகுப்பு), 'உனக்கும் எனக்குமான சொல்' (தமிழக அரசின் பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு), 'அரூப நஞ்சு' (கவிதைத் தொகுப்பு) உள்ளிட்ட படைப்புகள் இவரது தனித்துவத்தை அடையாளம் காட்டுகின்றன.

"ஊர் ஏரியில்
நீர் ஆடியில்
முகம் திருத்தும்
கருவேல மரங்கள்
கடும் கோடைகளில்
கண்ணாடி உடைகையில்
தலைவெட்டிக் கொள்கின்றன"

"ஆயுள்வரை
எத்தனை காப்பாற்ற முடிகிறது
ஆற்றில் கண்டெடுத்த கூழாங்கல்
தோழன் பரிசளித்த புத்தகம்
தாத்தாவிடமிருந்து வந்த கைக்கெடிகாரம்
இப்படித் தொலைத்தவை எத்தனையோ
அப்படி இழந்ததுதான்
அவள் எழுதவாங்கி
திருப்பித் தந்த போது
மஞ்சள் பூசிக்கொண்டு வந்த என் பேனா"

போன்ற அழகிய பெரியவனின் கவிதைகள் மொழியழகுக்காகவும், நடைச் சிறப்புக்காகவும் பாராட்டப் படுவன. தமது கவிதைகளுக்காகச் சிற்பி இலக்கியப் பரிசையும் பெற்றிருக்கிறார்.

தலித் எழுத்துக்கள் பற்றி அழகியபெரியவன், "தலித் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கிறது. அதிகம் வசவுச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். இந்த வார்த்தைகளை வேண்டுமென்றோ, சுவாரஸ்யத்திற்காகவோ யாரும் பயன்படுத்துவதில்லை. கதையில் வரும் தலித் கதாபாத்திரங்களின் கோபம், ஆத்திரம் வெளிப்பட வேண்டுமானால் இவ்வகை உக்கிரமான வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்" என்கிறார். தலித் இலக்கியம் பற்றி, "சாதியையும் அதன் கொடுமைகளையும் விமர்சித்து எழுதப்படும் தலித்தியப் படைப்புகள் முகச் சுளிப்புக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. அவைமீது திறந்த மனதுடனான, விரிவான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் எழுதுவது, உயர்ந்த அம்சங்களைப் பற்றி எழுதுவதுதான் இலக்கியம் என்ற மனோபாவம் தொடர்வதே இதற்குக் காரணம். 'சாதிய ஆதிக்க மரபுகளை எழுதுவதுதான் இலக்கியம்; எதிர் மரபுகளை எழுத்தில் கொண்டு வருவது இலக்கியமாகாது. அவை வெறும் குப்பைகள்' என்ற மரபு வழிப்பட்ட ஆதிக்கச் சிந்தனை, தமிழ் இலக்கிய உலகில் இன்றும் நிறைந்திருக்கிறது. இதன் காரணமாக, தலித் படைப்புகள் மறைமுகமான ஒதுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன," என்று கூறுவது சிந்திக்கத்தக்கது.

எழுத்து, சமூகம் என இரண்டு தளங்களிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவரும் அழகியபெரியவன், தற்போது அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மனைவி தெபோராள், குழந்தைகள் யாழினி, ஓவியனுடன் பேரணாம்பேட்டில் வசித்து வருகிறார். ராஜ்கௌதமன், பாமா, இமையம், ஜே.பி. சாணக்யா போன்ற, தலித் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் வரிசையில் அழகியபெரியவன் மிக முக்கிய இடம் பெறுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com