லாஸ்யா: 'விம்சதி'
ஆகஸ்ட் 4, 2012 அன்று, சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த 'லாஸ்யா' நடன நிறுவனத்தின் 20ம் ஆண்டு விழா 'லாஸ்ய விம்சதி' என்னும் பெயரில் சாரடோகா உயர்நிலைப் பள்ளியிலுள்ள மெகாஃபீ கலையரங்கில் நடந்தது. நாட்டிய மணி வித்யா சுப்ரமணியத்தால் 1991ம் ஆண்டில் 'லாஸ்யா' ஆரம்பிக்கப்பட்டது. இந்த இருபதாண்டுகளில் நல்ல பல நிகழ்ச்சிகளை நடத்தியதுடன் 49 மாணவர்களை அரங்கேற்றமும் செய்துள்ளது லாஸ்யா. 'லாஸ்யா'வின் கலை நிகழ்ச்சிகள் பல இடங்களில், குறிப்பாக 'San Francisco Ethnic Festival' மற்றும் 'Sterngrove Festival' ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன.

நாட்டியக் கலைஞர் என்பதோடு சிறந்த நடன அமைப்பாளர், நடிகர் எனப் பலவேறு திறமைகள் கொண்டவர் வித்யா. இந்த இருபதாம் ஆண்டு விழாவில் இதுவரை 'லாஸ்யா' நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பல்வேறு படைப்புகளின் தொகுப்பு நடனங்கள் இடம்பெற்றன. நிகழ்ச்சி வித்யாவின் 'ஓஜஸ்' என்னும் தனி நடனத்துடன் துவங்கியது. இந்தியாவில் முன்பு நிலவிய சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்த பெண் கவிஞர்களின் பக்தியையும், கவித்துவத்தையும் சிறப்பிப்பதாக 'ஓஜஸ்' அமைந்திருந்தது. காஷ்மீரக் கவிஞர் லல்லாவின் ஆன்மீக தாகம், 12ம் நூற்றாண்டின் கர்நாடக பக்தை அக்கமாதேவியின் பெருமை, 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீராபாயின் கவித்துவம் ஆகியவற்றைப் பிரதிபலித்தது. தொடர்ந்து காளிதாஸரின் சாகுந்தலத்திலிருந்தும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலிருந்தும் சில காட்சிகள் அரங்கேறிப் பார்வையாளர்களை நெகிழ வைத்தன. கலைமாமணி வழுவூர் ராஜரத்தினம் எழுதி இசை மற்றும் நடன அமைப்பு செய்த 'ஜதிலய சாரம்' என்னும் நடனம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. தொடர்ந்தது ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் விறுவிறுப்பான 'காளிங்க நர்த்தன' தில்லானா.

'பரதத்தில் பாரதி' (2003) மகாகவியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் 'ஓம் சக்தி ஓம்', 'மழை', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' போன்றவற்றைக் கொண்டு அமைந்திருந்தது. அவை மீண்டும் அரங்கேறிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின. சிற்பக் கலைக்கும், நடனக் கலைக்கும் உள்ள தொடர்பைப் பிரதிபலித்த Living Sculptures (2005) நிகழ்ச்சியை குருவும், சிஷ்யைகளும் மீண்டும் அரங்கேற்றினர். 'லாஸ்யா'வின் 15ம் ஆண்டு நிறைவு விழாவில் 'பஞ்சாதச நாட்டிய ஸமாரோஹத்தில் இடம்பெற்ற தியாகராஜ சுவாமிகளின் 'சாதிஞ்சனே' என்னும் பஞ்சரத்ன கிருதி நடனத்தை இளம் கலைஞர்கள் ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), குஹன் வெங்கட்ராமன் (வீணை) ஆகியோரது பக்கம் நிகழ்ச்சிக்கு வலுச்சேர்த்தது. நடனங்களுக்கு 'லாஸ்யா' மாணவர்களான மாதவி செருவு, சேதனா சிதம்பரா, விவேக் ரமணன் ஆகியோர் சிறப்பாக நட்டுவாங்கம் செய்தனர். 'லாஸ்யா' என்ற பெயருக்கேற்ப 'நளினம்' நிறைந்த நடனங்களை வழங்கி மாணவர்கள் பெருமை சேர்த்தனர். குரு வித்யா ஆசிரியையாக மட்டுமல்லாமல் தம் மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். மொத்தத்தில் 'லாஸ்ய விம்சதி' இருபது வருடப் பயணத்தை நெஞ்சைத் தொடும்படி நினைவு கூர்ந்தது.

ஆங்கில மூலம்: ஜனனி
தமிழ் வடிவம்: அருணா கிருஷ்ணன்

© TamilOnline.com