கச்சேரி: திவ்யா மோஹன்
செப்டம்பர் 1, 2012 அன்று சான் ஹோசேவில், சோபனா சுஜித்குமார் நடத்தும் எஸ்.ஆர். ஃபைன் ஆர்ட்ஸில் திவ்யா மோஹனின் கச்சேரி நடைபெற்றது. பிரபல வித்வான் நெய்வேலி சந்தானகோபாலனின் சிஷ்யை ஆவார் திவ்யா. பாடகர் சிரேயஸ் நாராயணன் தலைமை தாங்கினார்.

கச்சேரியைக் 'குண்டலி-குமாரி-குடிலி' என்ற ஸ்லோகத்துடன் துவங்கினார். ஸ்ரீராக-ஆதி தாள வர்ணத்தை பதமான காலப்ரமாணத்தில் ஆரம்பித்து, அடுத்து பங்காளா ராகத்தில் 'கிரிராஜ சுதா' கீர்த்தனையை விறுவிறுப்பாகப் பாடினார். அடுத்துப் பாடிய வராளி ஆலாபனை கனமான சங்கதிகளைக் கொண்டிருந்தது. மிஸ்ரசாபுவில் 'மாமவ மீனாக்ஷி', கேதாரகௌளையில் 'பராகேல', ரீதிகௌளையில், 'த்வைதமு சுகமா' ஆகியவற்றை அழகாகப் பாடினார். அடுத்து வந்த ராகம்-தானம்-பல்லவியை அனாயாசமாகப் பாடி பாராட்டுப் பெற்றார். பின்பு வந்த திருப்புகழும், தில்லானாவும் கச்சேரிக்கு நிறைவான முடிவாக அமைந்தன.

குமாரி ஸ்ருதி சாரதி (வயலின்), விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்), கணேஷ் ராமநாராயணன் (கஞ்சிரா) ஆகியோர் இணக்கமாகப் பக்கம் வாசித்தனர். இவர்களும் பாடகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாட்டு அறிந்து வாசிப்பவர்கள்தான் 'அவர்கள்பாட்டுக்கு' வாசிக்காமல், பாட்டுக்குச் சரியாக வாசிக்க முடியும்.

திவ்யாவின் பயமற்ற அடக்கமும், அனுபவித்துப் பாடியதும் வெகு அழகு. பாடல் எந்த மொழியானாலும் அவருடைய குருவைப் போலவே சரியான உச்சரிப்புடன் பாடினார்.

சுபப்ரியா ஸ்ரீவத்சன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com