அரங்கேற்றம்: ஷ்ருதி ரவிசங்கர்
செப்டம்பர் 1, 2012 அன்று ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ் நடனப் பள்ளியைச் சேந்த ஷ்ருதி ரவிசங்கரின் நடன அரங்கேற்றம் மிச்சிகனிலுள்ள குரோவ்ஸ் ஹை ஸ்கூலில் நடந்தது. இது இந்த நடனப் பள்ளியின் 90வது அரங்கேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கணபதி, கார்த்திகேயன், நடராஜர் என மூன்று கவுத்துவங்களுக்கும் ஆடினார். அலாரிப்பு, ஜதிஸ்வரத்தைத் தொடர்ந்து வர்ணத்திற்குக் கையாளப்பட்ட பாடல் 'சகியே இந்த வேளையில்'. பள்ளியின் பிரதான பாடகர்களில் ஒருவரான கோபால் வெங்கட்ராமன் இயற்றிய 'நவராத்திரி போற்றும்', 'ஆனந்த நடமிடும் ராஜனே' என்ற பாடல்களுக்கு அழகாகப் பதம் பிடித்தார். 'கூவி அழைத்தால்..' பாடலில் அபிநயத்தில் மௌனம் சாதித்த வண்ணம் கூவினார் ஷ்ருதி. பிறகு தில்லானாவில் ஸ்ருதி சுத்த நிருத்யம், அதாவது, வெறும் நட்டுவாங்கத்துக்கு நாட்டியம் ஆடி மகிழ்வித்தார். குறத்தி நடனம், மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

குரு சுதா சந்திரசேகர் (நட்டுவாங்கம்), கோபால் வெங்கட்ராமன், செல்வி. வித்யா சந்திரசேகர் (வாய்ப்பாட்டு), இந்திரேஷ் மக்தல் (மிருதங்கம்), பிரபா தயாளன் (வீணை), குமாரி அக்ஷயா ராஜ்குமார் (வயலின்), ஸ்ரீராகம் சர்மா (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கவாத்தியம் மிகவும் உறுதுணை. குரு சுதா சந்திரசேகர் அவர்கள் 6000 முறை நடனமாடிப் பல விருதுகள் பெற்றவர். மிச்சிகனில் பல வருடங்களாகப் பரதக்கலையைப் பயிற்றி வருகிறார். இவருடையது தஞ்சை பாணி. மிகத் தொன்மையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய கலா மந்திரின் மூத்த மாணவி இவர். சிஷ்யை ஷ்ருதி பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com