அரங்கேற்றம்: சஞ்சனா-சிதாரா
செப்டம்பர் 1, 2012 அன்று, மிச்சிகனின் ஹென்றி ஃபோர்டு II ஹைஸ்கூலில் சஞ்சனா முரளி, சிதாரா முரளி சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. சுத்தானந்த பாரதியின் நடன பூஜைப் பாடலிற்கு முதலில் பதம் பிடித்த சகோதரிகள், அடுத்து நிருத்த வந்தனம் செய்தனர். கல்யாணி ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரத்திற்கு மிக நன்றாக ஆடிப் பாராட்டுப் பெற்றனர். மகாகவி பாரதியாரின் 'வீரத் திருவிழிப் பார்வையிலே' பாடலுக்குப் பாந்தமாக ஆடினார் சஞ்சனா. இதேபோல ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் 'நின்றந்த மயிலிறகு' பாடலுக்கு சிதாரா அழகாக அபிநயம் பிடித்தார். இதில் 10 ஆடல்களில் ஆறுக்கு மேல் தமிழ்ப் பாடல்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

குரு தேவிகா ராகவன் 'கலாரசனா' நடனப் பள்ளியை பத்தாண்டுகளுக்கு மேல் மிச்சிகனில் நடத்தி வருகிறார். வழுவூர்ப் பாணியில் பரதநாட்டியம் பயில்விக்கும் இவர், முழுநேரப் பள்ளி ஆசிரியரும் ஆவார். நட்டுவாங்கம் நடன இயக்கத்தை தேவிகா செய்ய, வி.கே. ராமனின் 'ஸ்ரீ கிருஷ்ண வாத்திய விருந்தம்' குழுவினர் வாத்தியங்களில் துணை போயினர். கே.எஸ். பாலகிருஷ்ணன் (வாய்ப்பாடு), மேலக்காவேரி தியாகராஜன் (வயலின்), வி.கே.ராமன் (புல்லாங்குழல்), பி.வி. கணேஷ் ராவ் (மிருதங்கம்) ஆகியோரின் பக்கவாத்தியம் மிகச் சிறப்பு.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com