செப்டம்பர் 8, 2012 அன்று பாலோ ஆல்டோவிலுள்ள (கலிஃபோர்னியா) கபர்லி அரங்கில் ஸ்ருதிஸ்வரலயா இசைப் பள்ளியின் ஆதரவில் செல்வி. மானஸா சுரேஷின் கச்சேரி நடைபெற்றது. அருள்மிகு சிவமுருகன் ஆலய விரிவாக்கப் பணிக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சாவேரி ராக 'சரஸூடா' என்ற வர்ணத்துடன் நிகழ்ச்சியைத் துவக்கினார் மானஸா. தொடர்ந்து ஹம்ஸத்வனியில் 'வாரணமுகவா', கௌரி மனோஹரியில் 'குருலேக' ஆகியவற்றுக்குப் பின் கல்யாணியில் 'ஹிமாத்ரி ஸுதே' என்ற பாடலை ராக ஆலாபனை, நிரவல், ஸ்வரத்துடன் பாடியது மிக அருமை. ஸஹானாவில் பாபநாசம் சிவனின் 'சித்தம் இரங்காததேனய்யா' உருக்கமாக இருந்தது. 'ஸ்ரீஸுப்ரஹ்மண்யோ மாம் ரக்ஷது' என்ற முத்துசாமி தீட்சிதரின் தோடி ராகக் கீர்த்தனைக்குப் பிறகு நாட்டைக் குறிஞ்சியில் ராகம் தானம் பல்லவி பாடினார். பெஹாக் ராகத்தில் 'முருகனின் மறுபெயர் அழகு' என்ற பாடல் அனைவரையும் மயங்க வைத்தது.
யூ.சி. டேவிஸ் கல்லூரி மாணவியான மானஸா, தன் தாயும், ஸ்ருதிஸ்வரலயா இசைப்பள்ளி இயக்குனருமான அனுராதா சுரேஷை முதல் குருவாகக் கொண்டவர். டி.வி. கோபாலகிருஷ்ணன், தேவிநேய்த்தியர், சௌம்யா, கே.என். சசிகிரண், கிரணாவலி வித்யாசங்கர், நாகை ஸ்ரீராம் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்களிடம் கற்றுள்ளார். தற்பொழுது பத்மபூஷண் பி.எஸ். நாராயணசாமி அவர்களிடம் இசையும், ஸ்ரீகாந்த் சாரியிடம் வீணையும் கற்று வருகிறார்.
விக்னேஷ் வெங்கட்ராமன் (மிருதங்கம்), யூ.என். நிரஞ்சன் (வயலின்) ஆகியோரின் தனி ஆவர்த்தனம் வெகு அழகு. இறுதியாக, சிந்துபைரவி ராகத்தில் புரந்தரதாஸரின் 'வெங்கடாசல நிலையம்' என்ற பாடலைப் பாடி, மங்களத்துடன் கச்சேரியை நிறைவு செய்தார்.
அலமேலு கிருஷ்ணன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |