அக்டோபர் 2012: வாசகர் கடிதம்
ஒரு வருட காலமாக விறுவிறுப்பாக வந்து, ஜூலை இதழில் முற்றுப்பெற்ற 'சில மாற்றங்கள்' தொடர் அருமை. கண்ணனூருக்கும் நியூ ஜெர்சிக்கும் மாறி மாறி கதை சொல்லப்பட்ட விதம், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைப் போல இருந்தது. குறிப்பாக, கண்ணனூரில் நடக்கும் ஃபிளாஷ்-பேக் நிகழ்வுகள், மிக அருமை. கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று எங்களை யோசிக்க வைத்து, ஒரு எதிர்பாராத முடிவைத் தந்து ஆச்சரியப்படுத்திய கதாசிரியர் சந்திரமௌலிக்குப் பாரட்டுக்கள்!

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா

*****


செப்டம்பர் தென்றல் சிறப்பாக இருந்தது. மனுஷ்யபுத்திரன், மகதி நேர்காணல்கள் அருமை. மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர் சுஜாதா பற்றிக் கூறியிருப்பது வியக்கத்தக்கது. நாம் கொடுக்கும் அன்பை மட்டுமே பலமடங்காகத் திரும்பப் பெறமுடியும் என்ற பதிலை டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் பதிலிலிருந்து அறியலாம். வற்றாயிருப்பு சுந்தரின் கொல்லிமலை பயண அனுபவம் ஜோர். அடுத்த தென்றலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

டாக்டர் சே. விஸ்வநாதன்,
ப்ளசண்டன், கலிஃபோர்னியா.

*****


ஆகஸ்ட் மாதத் தென்றல் கண்டேன். ஆடிக்காற்றை விட வேகமான தென்றல் தலையங்கம் பல ஓட்டுப் பொறுக்கிகளை வேரோடு சாய்த்துள்ளது. இந்திய மாகாணத்தின் அஸ்ஸாம் பகுதியில் ஊடுருவியுள்ள, பங்களாதேஷிலிருந்து எல்லை தாண்டி வந்து பிரச்சனைகள் செய்யும் அகதிகளை ராஜ உபசாரம் செய்து வரவேற்பவர்களுக்கு சம்மட்டி அடி தந்துள்ளது தென்றல் தலையங்கம். 2 லட்சம் பேர் அங்கு அகதிகளாக இருப்பது, தீக்கிரை, கலவரம், துப்பாக்கிச் சூடு எனத் தொடர்வது இந்தியாவுக்குப் பெருத்த தலைவலி ஆகும். எல்லை தாண்டி வந்தவர்களை உச்சிமீது தூக்கி வைத்து ஆடுவது தேச விசுவாசச் செயலாகாது என்பதைச் சுட்டிக் காட்டிய தென்றல் 'நடையே' தனிதான்.

அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி Affordable Case சட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்ற கெடுமதியோடு காங்கிரஸ் செயல்படுவது அநாகரிகமானது. மக்கள் நலன் பேண அதிபர் ஒபாமா இருக்கும்போது அதைத் தகர்க்க அரசியல் 'லாபமா' என ஒரு கூட்டம் முயற்சிப்பதைச் சாடியது அற்புதம்.

அதைவிட நான் ரசித்தது, 'தென்றல்' தேசப்பற்றும், தெய்வப் பற்றும் ஒரு சேரக் கொண்டு, 'இந்திய சுதந்திர தினம், ரமலான், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி' நாட்களுக்கு வாழ்த்தியதைக் கண்டு பெரிதினும் பெரிதுவக்கின்றேன்.

தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சாஸ்

*****


செப்டம்பர் இதழில் தமிழ்வாணன் பற்றிய கட்டுரை, அவர் எழுதிய கதையை வெளியிட்டு, 50லிருந்து 80 வயதிருக்கும் வாசகர்களை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். அன்றைய கால கட்டத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற திரைப்பட நடிகர்கள் போலவே, கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்களை ரசிகர்களாகப் பெற்றிருந்தார் தமிழ்வாணன். நான் உள்படப் பல நண்பர்கள் பள்ளிக்கூடம் விட்டதும் போகும் வழியிலுள்ள நூலகத்துக்குச் சென்று புத்தகம் படிக்கும் வழக்கத்தை உருவாக்கியவர் தமிழ்வாணன். என் மூத்த சகோதரர் தமிழ்வாணனிடமிருந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் பெற்றுத் தன் படத்துடன் இணைத்து வீட்டில் மாட்டியிருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே குக்கிராம வாசகரைத் தன் கட்டுரை மூலம் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குஅழைத்துச் சென்றவர் அவர்! நல்ல தமிழ்ச் சொற்களைக் கதைகளில் கையாண்டவர். 'துணிவே துணை' என்ற இரண்டு வார்த்தைகளில் தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அளித்தவர்.

அவரது மைந்தர்கள் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும் கல்கண்டு இதழையும், மணிமேகலைப் பிரசுரத்தையும் சிறப்பாக வளர்த்து வருகிறார்கள்.

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

*****


செப்டம்பர் இதழில் 'தென்றல் பேசுகிறது' - பேசவில்லை - நியாயத்தைத் தென்றலாக வீசியது. உலகெங்கிலும் அரசியல்வாதிகளால் அரசியல்வாதிகளுக்கு அரசியல்வாதிகளே நடத்திக் கொள்ளும் அரசாங்கம்தான் கண்ணில்படுகின்றன, என்ற கருத்து அட்சர லட்சம் பெறும். நாட்டு மறுமலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கும் உதவும் அதிபர் ஒபாமாவின் கொள்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டோம். நாட்டுநலனுக்கே முதலிடம் என்றெண்ணுகின்ற அறிவுபூர்வமான மக்களைக் கொண்ட அமெரிக்க மண்ணை வணங்குகிறேன். இதை வலியுறுத்திய தென்றல் தலையங்கம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய 'தலையாய அங்கம்.'

தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சாஸ்

*****


மனுஷ்யபுத்திரன், "நட்பு, அன்பு இவை தேவைப்படாத காலத்தில் வாழ்கிறோமோ?" என்ற வரி அருமை. இது ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. நான் இடைநிலை ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். நான் தென்றலில் முதலில் படிப்பது ஹரிமொழி. வள்ளுவன் தந்த இன்பத்தை அனுபவித்து குழந்தைகட்குக் கற்றுக் கொடுப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஓரளவுக்குக் குறளை ரசித்து ருசித்து நேசித்து (10 அல்லது 20 பாடல்கள் இருக்கும் ஒரு வகுப்பிற்கு) கற்றுக் கொடுத்ததாக எனக்கு ஞாபகம். ஆனால் ஒன்றே முக்கால் அடிக் கரும்பை இவ்வளவு பிழியப் பிழிய ரசம் எடுக்க முடியுமா என்பதை ஆகஸ்ட், செப்டம்பர் மாதத் தென்றல் இதழ்களில் படித்து மருகி உருகி மாய்ந்து போனேன். ஹரிமொழிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்!

காந்திமதி,
சான்ஹோஸே, கலிஃபோனியா

*****


செப்டம்பர் தென்றல் இதழ் பார்த்தேன். அமெரிக்கத் தமிழர்களின் பண்பாட்டுக் குரலாக ஒலிக்கிறது தென்றல். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்கிற மகாகவியின் கட்டளையைத் திறம்படச் செய்து வருகிறது தென்றல். எழுத்தாளரைப் பற்றிய அறிமுகத்தோடு அவரது படைப்பின் ஒரு பகுதியையும் போட்டிருப்பது நல்ல உத்தி. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்வாணன் இளைஞர்கள், மாணவர்களின் நட்சத்திர எழுத்தாளர். அவரைப் பற்றிய அறிமுகம், அவரது நாவலின் ஒரு பகுதியையும் அருமையாக வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. தேவி அருள் மொழி அண்ணாமலை அவர்களின் குறுங்கவிதைகள் நச்சென நெஞ்சில் பதிகின்றன. மேரி ராஜாவின் முதுமை பற்றிய நீள்கவிதையும் பரவாயில்லை.

கொல்லிமலை பயணக்கட்டுரை அருமையிலும் அருமை. மலையேறி இறங்கிய அனுபவத்தைத் தந்திருக்கிறார் வற்றாயிருப்பு சுந்தர். சிறுகதைப் போட்டிக்கதைகள் இரண்டுமே இரண்டுவிதமான சிறப்புகளைக் கொண்டுள்ளன. அம்புஜவல்லி தேசிகாச்சாரியின் 'என்பும் உரியர் பிறர்க்கு' சிறுகதை மனிதநேயத்தை, அர்ப்பணிப்பு உணர்வை அழகாக எழுத்தில் வடித்திருக்கும் நேர்த்தியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஜி.சுஜாதாவின் 'லேபர் டே' சிறுகதையும் சிறப்பு. அ.முத்துலிங்கம் அவர்கள் ஈழத்தமிழர்களின் தென்மோடிக் கூத்து அரங்கேற்றம் பற்றிய விமர்சனக் கட்டுரை தரமாக இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்களது பண்பாட்டு விழுமியத்தை விடாமல் காப்பது இதன்மூலம் வெளிப்படுகிறது. இவர்களின் மொழிப்பற்றும் கலாசார உணர்வும் உச்சி மேல் வைத்து மெச்சத்தக்கது.

இரு நேர்காணல்கள் பற்றிக் கூறியே ஆக வேண்டும். தமிழின் முக்கிய ஆளுமையாக உயர்ந்து வரும் மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் குறிப்பிடத் தகுந்தது. கவிதை பற்றிய அவரது பார்வை கவனத்திற்குரியது. எளிய, அன்றாடம் மக்களால் புழங்கக் கூடிய சொற்களைக் கொண்டே வாழ்க்கையை, வாழ்வின் மீதான பார்வையை, புரிதலை, அனுபவத்தை வடிப்பதுதான் கவிதை என்பதை அழுத்திச் சொல்வதை நோக்க வேண்டும். நல்ல நல்ல கருத்துக்களை மனுஷ்யபுத்திரனின் அனுபவக் களஞ்சியத்திலிருந்து தோண்டியெடுத்துப் படைத்திருந்தது பாராட்டுக்குரியது. தமிழ்க்கடல் ராய.சொ.வின் ஆளுமை சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. ஹரிகிருஷ்ணனின் குறள் விளக்கம் நெஞ்சிலேயே நிற்கிறது. கற்கக் கற்கப் புதுபுதுக் கருத்துக்களைத் தந்து கொண்டேயிருக்கும் வற்றாத கேணி குறள் என்பது இவரது விளக்கத்தின் வலிமை. மேலும் சாதனையாளர், அர்ப்பணிப்பு மிக்க மக்கள் நலம் பேணுவோர் பற்றிய கட்டுரைகள் என இதழின் எல்லாப் பக்கங்களுமே தரமும் சுவையும் கொண்டு நம் மனதைக் கவர்கின்றன. தமிழ், தமிழர் நலன், பண்பாடு, சமூக அக்கறை கொண்ட தென்றலுக்கு நம் வாழ்த்துக்கள்!

இரவீந்திர பாரதி,
செடார் ராபிட்ஸ், அயோவா

© TamilOnline.com