எதிர்பாராமல் நடந்தது....
போனஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ அன்புடன் பாசத்தைப் பொழியும் மாமியார் இன்மா, கண் நிறைந்த கணவர் பெஸிக்ஸ், சகல வசதிகளுடன் வளமான வாழ்வு, இத்தனை இருந்து குழந்தை பெறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.

மூன்று தடவை 'நொவீணா' விரதம் கடுமையாக கடைப்பிடித்தேன். பலனளிக்க வில்லை. மருத்துவ சிகிச்சை மேற் கொண்டதில் ''உடலைப் பொறுத்த மட்டும் எந்தவிதமான குறையும் இல்லை'' என்று டாக்டர் தீர்மானமாகக் கூறினார்.

குழந்தைக்காக ஏங்கும் என்னைப் பார்க்கச் சகிக்காமல் ஒருதடவை, ''பேசாமல் குழந்தை ஒன்றை எடுத்து வளர்த்தால் என்ன'' என்று பெலிக்ஸ் கூறியவுடன், இன்னும் எத்தனை நாட்கள் காத்திருப்பது என்று எண்ணித் தலையசைத்தேன்.

சில காப்பகங்களுக்கு விண்ணப்பித்தோம். தாய்லாந்து காப்பகத்தினர் அளித்த பதில் தேவைக்கேற்றபடி அமைந்தது. குழந்தை பேணி வளர்க்கும் பயிற்சி முடிந்து, தாய்லாந்து காப்பகத்தில் சில மாதங்கள் தங்கி நேர்பரிசீலனைகளில் தேர்ந்து ஒரு வயது ஸோஹியுடன் ஊர் திரும்பினோம்.

மொழுமொழுவென்றிருக்கும் ஸோஹியைப் பெற்றுக் கொண்டவுடன் ஸரவிற்கு உச்சி குளிர்ந்துவிட்டது. சதா அவளுடன் தன்னை இணைத்துக் கொண்டு நேரம் போவது தெரியாமல் விளையாடுவார். நாட்கள் பறந்தன. இரண்டாவது படிக்கும் ஸோஹி படுசுட்டி. வகுப்பில் நடந்தவற்றை விவரிக்கும் போது ஸர வயிறு குலுங்கச் சிரிப்பார். பாசத்துடன் பழகும் இவரைப் பார்த்தால் பொறாமையில் அக்கம்பக்கத்தவர் முகத்தை வெட்டிக்கொள்வர். அவர்களைக் குறைகூறி என்ன பயன்? என் நாத்தனார் நான்சியை நினைத்தால் அப்பப்பா! கடந்து போன நாட்கள் அலைகளாக மோதுகின்றன.

எத்தனை மனக்கொந்தளிப்பு. சுடுசொற் களால் ஏசும் கொடுமை. எத்தனை நையாண்டி செய்வாள் பார்க்கும் போதெல்லாம்! கோணங்கிகள் செய்து முகத்தைத் திருப்பிக் கொள்வது, தோழி களிடம் நக்கல் பண்ணும்போது அனை வரின் 'கொல்' என்ற சிரிப்பு, நாகரீகமாகப் பழகத் தெரியவில்லை என்று குத்திக் காட்டுவது இத்யாதி...

நான்ஸியின் திருமணம் நிச்சயமானவுடன் வருங்காலக் கணவர் சென், உயர்ந்தரக உடைகள் தைக்க வேண்டும், மாலை வைபவங்கள் இன்னிசையுடன் 'ட்ரம்ப ப்ளாஸா'வில் நடத்தினால்தான் அவர் களுக்கு கெளரவம் என்று திட்டவட்டமாக கூறினார். ''ஏகத்திற்குச் செலவாகுமே'' என்று பெலிக்ஸ் கையைப் பிசைந்துகொண்டு நிற்பதைப் பார்க்கப் பொறுக்காமல் உள்ளே அழைத்துக்கொண்டு போய் என் சேமிப்புத் தொகை பத்தாயிரம் டாலர் கட்டைக் கையில் கொடுத்து, தைரியமாகச் செய்யுங் கள் என்றபோது ஸர என்னை ஆரத் தழுவிக் கொண்டார். அலட்சியப் பார்வை யுடன் நகர்ந்தாள் நான்சி. இனிதாகத் திருமணம் நடந்த சில மாதங்களில் 'பேபி ஷவர்'. முன்னைவிட இப்போது பத்து மடங்கு ரகளை செய்து பெற்ற தாய் என்ற மரியாதையில்லாமல் கண்டபடி திட்டுவாள். பிள்ளைதாச்சி என்று தணிந்து போவாள்.

'பேபி ஷவர்' அன்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ''டயானா! காலையில் ஒரே தலைவலி என்று சொல்லி விட்டு எதற்காகக் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறாய்? உள்ளே போய் ஓய்வு எடுத்துக் கொள்வது தானே!'' என்று விருந்தினர் முன்னே கூறியபோது 'ஏன் இப்படிப் பொய் சொல்கிறாள்?' என்ற திகைத்தேன். நடுவில் வந்து ஸர பதில் கூறுமுன் ''ஆம் அவ சொல்வது சரிதானே.. உனக்கு இன்னுமா குழந்தை பிறக்கவில்லை? என்று நாலுபேர் பேச வேண்டாமே..'' என்று அவள் அத்தை முணுமுணுத்தவுடன் கூடை நெருப்பை மேனியில் கொட்டியதைப் போல் உணர்ந்தேன். பெலிக்ஸ் ஓடிவந்து இழுத்துக் கொண்டு உள்ளே போயிராவிடில் அங்கேயே மயங்கிச் சாய்ந்திருப்பேன்.

அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் உடற் கூறுகளில் இயற்கையாக நடப்பவை தாமதமாகும். மனதைக் கட்டுப்படுத்தி உணர்ச்சி வசப்படாமலிருக்க முயன்று பாருங்கள் என்று டாக்டர் அறிவுரை கூறியும் மனதைத் தேற்றும் மார்க்கம் அறியாது விசும்பினேன் பெலிக்ஸின் மடியில் சாய்ந்தபடி. அவரும் "டயானா, அமைதியாக இரு. அனைத்தும் உன் கையில்தான் இருக்கிறது. கண்டிப்பாக உனக்குக் குழந்தை பிறக்கும்'' என்று ஆறுதல் அளிப்பார்.

காலையில் ஒரே அமளி. நான்சிக்கு வலி ஆரம்பித்துவிட்டது. என் கார் மக்கர் பண்ணியதால் பக்கத்து வீட்டு ஜெனிபர் உதவியுடன கைத்தாங்கலாக மருத்துவ மனையில் சேர்த்தேன். மூன்று மணிநேர அவஸ்தைக்குப் பின் அறுவை சிகிச்சையில் தாய் வேறு, சேய் வேறு ஆனாலும் பிராணவாயு போதாமல் சிசு இறந்துவிட்டது.

சோகத்துடன் விம்மியபடி இருந்த மகளைத் தடவியவாறு, "மனதைத் தேற்றிக்கொள். கர்த்தர் அருளால் விரைவில் மற்றொரு குழந்தை பிறக்கும்'' என்று கூறிமுடிக்குமுன், ''தொடாதே என்னை... நீங்க பொருமி வயிற்றெரிச்சல் பட்டதால்தான் என் குழந்தை இறந்துவிட்டது'' என்று அலறினாள்.

அவ்வளவுதான். இதுவரை அடக்கி வைத்த கோபம் மடைவெள்ளம் திறந்தாற் போல் என் அத்தை ''போதும் நிறுத்து. டயானா முனைந்திராவிடில் இந்த உன்னுடைய துர்குணத்திற்கு திருமணம் நடந்திராது. எத்தனை தடவை கடுஞ் சொற்களால் குத்திக் குதறியிருக்கிறாய்! பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்ப தால்தானே மேலும் புண்படுத்துகிறாய். இன்றிலிருந்து டயானாதான் என் மகள். எனக்கு எல்லாமே அவள்தான். உடல் நடுங்க கத்தினாள். சப்தநாடிகளும் ஒடுங்கி முதன்முறையாக என்னை இறுகக் கட்டிக் கொண்டாள் நான்சி.

மறுமுறை கர்ப்பம் தரித்தபோது எல்லோ ருடனும் இனிமையாகப் பழகியதைவிட, ஸோஹியிடம் விளையாடுவதைப் பார்க்க மனது மகிழ்ச்சியானது. ஸரவிடம் மரியாதை கலந்த பயத்துடன் நடந்து கொண்டதைக் கவனித்த பெலிக்ஸ் புன்னகையுடன் என்னை நோக்கியபோது பெருமையால் பூரித்துவிட்டேன். இருண்டு போயிருந்த மனம் லேசாகிச் சந்தோஷத்தால் உடம்பு பெருத்துவிட்டது. பெலிக்ஸ் வேறு கிண்டல் பண்ணி "நேரத்துக்கு 'ஒர்க் அவுட்' பண்ணு.. இல்லாட்டி மெஷின் உடஞ்சுடப் போகுது" என்று சிரித்தார்.

நான்சிக்கு சுப்பிரசவமாகி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானாள். இது உண்மையில் நடந்தது. இதைவிட ஆச்சர்யப்படும் செய்தி என்ன தெரியுமா? என் உடல் பருமனை பரிசோதித்த டாக்டர் "உன் வயிற்றில் நான்கு மாத குழந்தை இருக்கிறது. குடும்பத்தின்மேல் அக்கறை காட்டி கவனம் செலுத்திய அளவில் உன் குறையை அறவே மறந்து விட்டாய். இயற்கையாக உடலில் ஏற்படும் விந்தைகளை அதனால் உனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் 'நான் ஒரு தாய்' என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்" என்றதுதான்.

இவ்வருடம் மே 1-ம் தேதி ஜாக் ·பெலிக்ஸ் பிறந்து 'தாய்' என்ற உன்னத பதவியை அளித்தான். இவையெல்லாம் உண்மையில் நடந்தவை.

துலஸா

© TamilOnline.com