பச்சைப்பட்டு விரித்தாற்போல் யாருமில்லாப் புல்வெளி கண்களைக் கொள்ளை கொள்ள நடுவே கயல் துள்ளும் வெளியாக ஊரோரக் குளம்!
அன்றாடம் குளக்கரையில் ஓட்டப்பயிற்சி மாலை ஆறுமணிக்கு – அங்கே ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க வலத்திலிருந்து இடமாய்ப் போவாள் காகேசன் மங்கையவள்! மூன்றாவதாய்ச் செல்லும் எனது ஓட்டத்தின் பாதையினூடாய் எதிராய்க் கடக்கையில் மட்டும் அவள் சிந்தும் குறுஞ்சிரிப்பு ஒன்றே அவளுக்கும் நமக்குமான உறவு!
கோடை வெம்மையால் தடைபட்ட ஓட்டத்தை மீட்டெடுக்க இன்றைக்கு ஊரோரக் குளக்கரைக்குச் சென்றேன். காகேசக் குறுஞ்சிரிப்பைக் காணாமல் ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையைக் கேட்க, அவள் காட்டிய அவளோ வாய்ப்புற்றின் வதைப்பில் படுக்கையில் இருந்தாள்!
விரிந்த கண்கள் பேச வாஞ்சையாய் அவளது இடக்கை நம் வலக்கையைப் பற்றிக் கொண்டது! ஓரிரு கணங்கள் மெளனத்தினூடே கடக்க விடைபெறும் தருணத்தில் தட்டுத்தடுமாறி எழுந்து புத்தகமொன்றைக் கொடுத்து முடிந்தும் முடியாமல் உதிர்த்தாள் குறுஞ்சிரிப்பொன்று – அது அவளுடைய கடைசியானதாகவும் இருக்கலாம்! வீடு வந்ததும்தான் பார்த்தேன் புத்தகத்தின் தலைப்பு Gandhi: His Life and Message for the World
பதிவர் பழமைபேசி |