சிகாகோ தமிழ்ச் சங்கம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை நாடகமாகச் சிகாகோவில் 2013 ஏப்ரல் மாதம் மேடையேற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கலிஃபோர்னியாவின் அபிராமி ஃபைன் ஆர்ட்ஸ் குழுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நாடகத்தின் 35க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, கல்கி விவரித்த உருவ ஒற்றுமையும், தூய தமிழ் பேசும் ஆற்றலும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர் 8ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. நாடகத்தின் இயக்குனர் பாகீரதி, சங்க முன்னாள் தலைவர் டோனிசூசை, சந்திரகுமார் ஆகியோர் தேர்வுக்குழுவில் இருந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் ஏற்க விரும்பும் கதாபாத்திரத்தை நடித்துக் காட்டினர். வந்தியத்தேவனாக நடிக்கவே போட்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாகப் பெரிய பழுவேட்டரையராக நடிக்கத்தான் அடிதடி! அறவாழி, சோமு, மணிகண்டன், ஷோபனா ஆகியோர் நிகழ்வுக்கு உதவினர். நாடகத்தின் ஒலி, ஒளி, மேடை நிர்வாகம், உடை, ஒப்பனை ஆகியவற்றில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் cts-ps@yahoogroups.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.
மணிகண்டன், ரோமியோவில், இல்லினாய் |