நியூ ஜெர்சியில் வசிக்கும் ராமசாமி வாரியங்காவல், நாராயணசாமி வாரியங்காவல் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தமது கிராமமான வாரியங்காவலில் பிளஸ் 2 வகுப்பில் தமிழிலும், அறிவியலிலும் முதலாவதாக வரும் மாணவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் பரிசு கொடுக்கத் தீர்மானித்தார்கள். இந்தப் பரிசு 'வி.என். ராமசாமி நினைவுப் பரிசு' என்று அழைக்கப்படும்.
யார் அவர்? 1913ம் ஆண்டு ஏழு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தவர் ராமசாமி. தந்தை நாராயணசாமி அரியலூர் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்தின் போஸ்ட்மாஸ்டர். சொற்ப வருமானம். மகன் ராமசாமியோ படிப்பில் படுசுட்டி, ஆனால் மிகவும் சாது. உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்குப் பின்னால் அண்ணாமலை பல்கலையில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். அப்போது அப்பல்கலையின் துணைவேந்தராக இருந்தவர் 'Silver Toungued Orator' என்று பெயர் வாங்கிய பேரறிஞர் ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி. ராமசாமியின் மேதைமை அவரது கண்களுக்குத் தப்பவில்லை.
இன்டர்மீடியட் கல்வியில் முதலாவதாகத் தேறிய அதே சமயத்தில் அவரது தந்தை இறந்துபோனார். கல்வியை நிறுத்த எண்ணினார் ராமசாமி. குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு இவரது இளம் தோள்களில்! ஆனால், வாரியங்காவல் கிராமத்து மக்கள் சேர்ந்து அவரைப் படிக்க வைக்கத் தீர்மானித்தனர். அவர்களின் ஆதரவோடு அவர் அதே பல்கலையில் இயற்பியல் ஆனர்ஸ் பட்ட வகுப்பில் சேர்ந்தார். சிதம்பரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கி, தினமும் தானே வடித்த சோற்றில் மோர் கலந்து உண்டு படித்தார்.
தமிழில் அவர் கொண்ட ஆர்வத்தைத் தணிக்கும் வாய்ப்பு அவர் அடுத்து ஆசிரியர் பட்டத்துக்குப் படித்தபோது கிடைத்தது. நூலகத்திலிருந்த எல்லாத் தமிழ் நூல்களையும் படித்துத் தீர்த்தார். தனது பேராசிரியர் விஸ்வநாதனுடன் இணைந்து அவர் தமிழில் எழுதிய இயற்பியல் நூலுக்கு அந்தப் பல்கலையின் ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்தது. சிறிது காலம் மின்வாரியத்தில் பணிபுரிந்தபின் கிண்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
ஆனால், தனக்குத் தேவை வந்தபோது தயங்காமல் ஆதரித்த சமுதாயத்துக்கு நன்றிக்கடனைச் செலுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லித் தந்தார் ராமசாமி. அவரது நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாடும் விதமாகத்தான் நியூ ஜெர்சியிலுள்ள அவரது பேரப் பிள்ளைகள் முன் கூறிய பரிசுகளை அறிவித்தார்கள். அதற்கென ஓர் அறக்கட்டளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் மூத்த பத்திரிகையாளர் சுப்பு ஓர் உறுப்பினர். இந்த ஆண்டு தமிழ், அறிவியல் இரண்டிலுமே முதலிடத்தை வென்று 20,000 ரூபாய் பரிசு பெறுபவர் மாணவி பர்க்கத் நிஷா. வாரியங்காவல் சகோதரர்களின் பணி சிறக்கட்டும். |