அகோரப் பசி! பவானி இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தாள். என்ன ஆனாலும் சரி, இன்று சாப்பிடக்கூடாது என்பதில் வெகு தீர்மானமாக இருந்தாள்.
விளையாடிக் கொண்டிருந்த முரளி, வீட்டுக்குள் நுழைந்தான். விளையாடிக் களைத்துப் போய் அவனுக்கும் ஏகப்பசி. அம்மாவைக் கேட்டால், கோவிச்சுப்பாளோ என்ற தயக்கம் வர, மெதுவாக உள்ளே நுழைந்தான். அழுது கொண்டே தங்கைப் பாப்பாவைத் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்த அம்மாவைத் தொட்டான். சட்டென்று முரளியைக் கட்டிக் கொண்டாள் பவானி.
"வாடா முரளிக் கண்ணா, கை கால் எல்லாம் புழுதி பாரு. போய் அலம்பிண்டு வா. சாப்பிடலாம்."
சாப்பிடக் கூப்பிட்டதும், முரளிக்கு உற்சாகம் பொத்துக் கொண்டது. டைனிங் டேபிளில் தட்டைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவன், "நீயும் வாம்மா. ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்றான். அது அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கை மாதிரி. தினமும் பவானி சாப்பிடும்போது, முரளி தன் கையால் ஒரு கவளம் அம்மாவுக்குத் தரணும் என்று. பவானி மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்.
"இல்ல முரளி. இன்னிக்கு அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு. நீ சமத்தா சாப்பிட்டுட்டுத் தூங்கு."
நிறைய பருப்புப் போட்டு, மணக்க நெய் விட்டு, ஒரு சின்னச்சிமிட்டா பெப்பர் கலந்து, இளஞ்சூடா ஒரு கரண்டி ரசம் விட்டுக் குழையப் பிசைந்து அம்மா தரும் அந்த உணவு, முரளிக்கு ரொம்பவும் பிடிக்கும். போன தடவை லீவுக்குச் சித்தி வீட்டுக்குப் போயிருந்தபோது, 'பருப்பு' என்று மஞ்சள் திரவமாக ஒன்றை சாதத்தில் போட்டபோது, அப்போதே வீட்டுக்கு ஓடி வரமாட்டோமா என்றிருந்தது.
"அம்மா! நான் தினம்போல் ஒரு வாய் தரேன், சாப்பிடும்மா."
"இல்லடா கண்ணா. சொன்னாக் கேட்கணும். பாப்பா அழறது பார், சீக்கிரம் சாப்பிடு முரளி!"
திரும்பவும் வயிறு கடமுடா என்றது. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் வேறு மூக்கைத் துளைத்தது. கூட்டு, பொரியல், ரசம் என்று மடமடவெனப் பண்ணி ஒருபுறம் நகர்த்தி வைத்தவளின் கண்களில் பட்டது, அந்தப் பல்லி. பவானிக்குச் சுத்தமாய்ப் பல்லியைப் பிடிக்காது. மிகவும் அருவருப்பாள். ஆனாலும், இந்தச் சமையல்கட்டுப் பல்லியிடம் அவளுக்கு ஒருவித வாஞ்சை ஏற்பட்டது என்னவோ நிஜம்! காலையில் அவள் காப்பி போடும்போதே வந்துவிடும். பிறகு, காய் நறுக்கிச் சமையல் செய்து முடிக்கும் வரையில் அவளுக்குக் காவல் இருப்பது போல் அங்கேயே இருக்கும். பவானி கிச்சனை விட்டுப் போய்விட்டால், அதுவும் எங்கானும் மறைந்து விடும். திரும்பவும் மறுநாள் காலைதான்!
இன்றைக்கு என்னவோ அது, சிரமத்துடன் நகர்வதுபோல் பட்டது பவானிக்கு. 'என்னைப் போல் இதுக்கும் பசியோ? பூச்சி ஏதும் அகப்படலையோ' என்று விசனப்பட்டவள், சாம்பார் இன்னும் சற்றுக் கொதிக்கட்டும் என்று ஹால் பக்கம் போனாள். சாப்பிட்ட அயர்வில் சோபாவிலேயே உறங்கிவிட்ட முரளியின் அருகே அமர்ந்து கொண்டாள். அச்சில் வார்த்தாற் போல் ராகவனைப் போலவே இருந்த முரளியை மெதுவாகத் தூக்கி அவனது படுக்கையில் போட்டுவிட்டு வந்தாள்.
ராகவனின் நினைவு வந்ததும், எழும்பிய பசி அடங்கிப் போனது. என்ன ஒரு பேச்சுப் பேசிவிட்டான்... அதுவும் வளரும் குழந்தையை வைத்துக் கொண்டு! அன்று நடந்த நிகழ்ச்சி அவளை ஆட்கொண்டது.
ராகவனுக்கு நல்ல குணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சும் முன்கோபம்! கல்யாணம் ஆன புதிதில் பவானியைத் தாங்கு தாங்கென்று தாங்கியவன்தான். பழுத்த தக்காளியைப் போல் பளபளவென்று இருப்பாள் பவானி. மூங்கில் மூங்கிலாகக் கை கால்களும், நெகுநெகுவென்ற வாளிப்பான உடம்புமாக இருந்தாள். மூன்று வேளையும் நன்றாகச் சாதம் போட்டுச் சாப்பிட்டு விடுவாள். நொறுக்குத் தீனி கூடாது. பவானியின் அம்மாவும், கற்சட்டிப்பழையது போட்டும், படல்படலாக நெய் தோசை வார்த்துப் போட்டும் பெண்ணை கும்மென்று வளர்த்திருந்தாள்.
சாப்பாட்டில் இயல்பாகவே ஈடுபாடு இருந்ததால், சமைப்பதில் பவானிக்கு ஆர்வம் அதிகம். ஒவ்வொரு நாளும், ஒருவிதம் எனச் சமைத்துப் போட்டு அசத்தினாள். மோர்க்குழம்பென்றால் உசிலி இருக்கும். பூண்டு ரசமென்றால், பருப்புத் துவையல், வற்றல் குழம்பென்றால் மிளகூட்டல். அத்தோடு டாங்க்கர் மாப் பச்சடி, சாம்பார் என்றால் கறியும், பொரித்த அப்பளமும். இவை தவிர, மோர்க்கூழ், அடை-அவியல், டோக்ளா, காஞ்சிபுரம் இட்லி, அதற்கு ஒரு கொத்சு என்று ஒரு மினி 'சரவண பவன்' மாதிரித்தான் எல்லா அய்ட்டங்களும் இருக்கும்.
'என்னப்பா! தொந்தியும் தொப்பையுமா, பணக்கார ஜமீந்தார் மாதிரி இருக்கே' என்று கேட்பவர்களிடம், பவானியின் பக்கம் பெருமையாகக் கை காட்டுவான் ராகவன்!
வீட்டு வேலையாகட்டும், வெளிவேலையாகட்டும், அவனுக்குச் சிரமம் தராமல் மாங்குமாங்கென்று செய்வாள் பவானி. இந்தச் சமையலில் காட்டும் தீவிரம், மற்ற விஷயங்களிலும் இருக்கலாமே என்று ராகவனுக்குத்தான் சற்றுக் குறையாகப் படும். இன்னும் சற்று நாகரீகமாக உடுத்திக் கொள்ளலாம், இன்னும் சற்று விபரம் தெரிந்து நடக்கலாம். தொட்டதற்கெல்லாம் மறதி வேறு! எது கேட்டாலும், தலையைச் சொரிந்து கொண்டு ஒரு ரெண்டுங் கெட்டான் பதில் வேறு. இதெல்லாம் தான், ராகவனுக்கு அவள்மீது எரிச்சலை ஏற்படுத்தும்.
அன்றும் இப்படித்தான். ராகவன் வீட்டில் இல்லாத போது, அவனைத் தேடி வந்த நண்பரின் தொலைபேசி எண்ணை எங்கோ குறித்து வைத்திருந்தாள். இன்று அது ராகவனுக்குத் தேவையாய் இருந்தது. ஆனால், அதை எங்கே எழுதி வைத்தாள் என்பது தெரியவில்லை
"ஏய் ...பவானி, எங்கே உன் என்சைக்ளோபீடியா? அந்த நம்பர் எங்கே எழுதி வச்சே?" அவனது பொறுமை எல்லையைக் கடந்து கொண்டிருந்தது. கத்தலில் மிரண்டு போனவள், அந்த நோட்டை எடுத்துப் பார்த்தாள். எண்ணைப் பிசுக்குடன் ஓரமெல்லாம் நைந்து, சிவப்பு, பச்சை, நீலம் என்று கைக்கு அகப்பட்ட பேனாக்களில் எழுதப்பட்டு, கந்தல் துணி மாதிரியான ஒரு நோட்டு. ஆனால் அது உள்ளடக்கி இருந்ததோ, உலக மஹா விஷயங்கள். ஒரு பக்கம் ரெசிப்பிகளும், இன்னொரு பக்கம் முகவரிகளும், தொலைபேசி எண்களுமாக....பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்தாள் பவானி, ஊஹூம்... அங்கு இல்லை. இதில்தானே எதுவானாலும் எழுதி வச்சுப்பேன்! அன்றைக்கு அந்த நண்பர் வந்திருந்தபோது, முரளிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இதில்தானே எழுதினதா ஞாபகம்... ஆனா நம்பரைக் காணோமே. சமயத்தில் தினசரிக் காலண்டரில் கூட எழுதி வைப்பதுண்டு. அதையும் திருப்பித் திருப்பிப் பார்த்தாயிற்று. அகப்படத்தான் காணோம்!
ராகவனின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது. ஆபீஸ் கிளம்பும் சமயம் இப்படித் தேடும் படலமென்றால்! "சனியனே! உன்னால எதுவும் ஒழுங்காப் பண்ண முடியாது. எதுக்கும் துப்பு கிடையாது. எப்பப் பாரு, உன் கவலை எல்லாம் சமையலும், சாப்பாடும்தான்! மத்த எதுலயும் கொஞ்சம்கூட கவனம் கிடையாது. நன்னாத் தின்னு போ! வேளை தவறாமக் கொட்டிக்கோ! நெய்யும் பருப்பும் தயிருமா விட்டுச் சாப்பிட்டு உடம்பை நன்னா வளத்துக்கோ. மூளையை மட்டும் வளத்துக்காதே. எது கேட்டாலும் ஒரு முழிப்பு, ஒரு தடவல். சரியான அசடு போ. பகாசுரி மாதிரி வேளை தவறாம முழுங்கு போ. உடம்புல அவ்வளவு மதர்ப்பு! அதான் ஒரு சின்ன வேலைல கூட கவனம் இருக்கறது இல்ல..போ...போ...போய்க் கொட்டிக்கோ," காட்டுக் கத்தலாய்க் கத்தியவன் தண்ணீர்கூடக் குடிக்காமல் போயே போய்விட்டான்.
அவன் போன அரை மணியில், "அம்மா! இந்தக் கணக்கில் ஒரு டவுட்மா...சொல்லித் தரியா?" என்றபடி வந்த முரளியின் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தபோதுதான் அவளுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. உட்புற அட்டையில் அந்த நம்பர்! சே! தனது ஆற்றாமையைக் கண்டு அவளுக்கே தன்மீது கோபம் வந்தது. 'நான் ஏன் இப்படி மெய்மறந்து போறேன்? ராகவன் சொன்னாப்பலச் சாப்பிட்டுச் சாப்பிட்டு உடம்பைத்தான் வளர்த்திருக்கேனா? இன்றிலிருந்து சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளணும். முதல்கட்ட நடவடிக்கையாக இன்றைக்குப் பட்டினி’ என்ற முடிவுக்கும் வந்தாள்.
சாம்பார் கொதித்து விட்டது. அடுப்பை அணைத்தாள். அந்தப் பல்லி போய்விட்டது போலும். சாம்பாரின் வாசனை அவளைப் பாடாய்ப் படுத்திற்று. வயிற்றில் ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மருத்துவப் பரிசோதனையில் அவளுக்குச் சர்க்கரையும், உயர் ரத்த அழுத்தமும் இருப்பது தெரியவந்து, தினமும் வேளை தவறாமல் மருந்து சாப்பிடும்படி டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஒரு கவளமாவது சாப்பிட்டால் ராகவன் வரும்போது, சற்றுத் தெம்பாகப் பரிமாறலாமே என்று தோன்றியது. 'சே! எனக்கும் தன்மானம் இருப்பதைக் காட்டிக் கொள்ளணும்' என்று பாழும் மனது ஒரேயடியாக உணர்ச்சி வசப்பட்டது. கோஸ் பொரியலும். கத்தரிக்காய் பயறு போட்ட கூட்டும், தக்காளி ரசமும் வெங்காய சாம்பாரும்.... கண்களை இருட்டிக் கொண்டு வந்தது பவானிக்கு. மணி இரவு ஒன்பது அடித்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது சுய பச்சாதாபத்தை அதிகரித்தது. எப்பொழுதும் எட்டு, எட்டரைக்கெல்லாம் வருபவன், அன்று இன்னமும் வராதது அவனது கோபம் இன்னமும் குறையவில்லை என்பதை உணர்த்துவதாய் இருந்தது. இன்னும் சற்றுப் பொறுத்துக் கொள்ளலாமென்று தோன்றிய எண்ணமும், சாப்பிடவே கூடாது என்ற பிரசவ வைராக்கியமும் வீழ்ச்சி அடைந்தன.
தட்டை எடுத்து வைத்துக் கொண்டு, இரண்டு கரண்டி சாதம் போட்டுக் கொண்டாள். சுடச்சுடச் சாம்பாரை வார்த்துக் கொண்டு, ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுப் பிசைந்தவளுக்கு ஏனோ அம்மாவின் நினைவு வந்தது. "சீக்கிரம் வா பவானி! சூடு ஒரு ருசி. செகப்பு ஒரு அழகும்பா. சூடு ஆறுவதற்குள்ள வந்து சாப்பிடு" என்பாள் அம்மா.
அன்று முழுதும் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டதோ என்னவோ, இரண்டே நிமிடத்தில் தட்டைக் காலி செய்துவிட்டு எழுந்தவளுக்குக் கண்ணை இருட்டியது. எழுந்த வேகத்தில் டங்கென்று உத்தரத்தில் தலை இடித்துத் திரும்பவும் அதே வேகத்தில் கீழே விழுந்தாள்.
பாவம்... சிநேகத்துடன் தினமும் அவளுக்கு ஹலோ சொல்லும் பல்லி, தவறிப்போய் சாம்பாரில் விழுந்ததோ, அதனால் ஏற்பட்ட ஒவ்வாமையோ அல்லது சர்க்கரையின் அளவும், குறைந்த ரத்த அழுத்தமும் ஏற்படுத்திய பாதிப்போ, அல்லது உத்தரத்தில் தலை இடித்ததாலோ.... பவானி சமாதியாகிப் போனது தெரியாமல், அல்வாவும், மல்லிகைப்பூவுமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் ராகவன்!
பானுரவி, சிங்கப்பூர் |