கிடைத்தது கேமரா
எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று காலாற நடப்பது. அதற்குப் புறப்பட்ட நானும் என் கணவரும் ஆல்பர்ட்சன் அருகில் உள்ள கடையில் காலணிகள் வாங்கிக் கொண்டோம். வெளியில் வந்து அருகிலுள்ள பூங்காவில் இளைப்பாற அமர்ந்தோம். அழகான வெய்யிலைப் பார்த்தவுடன் புகைபடம் எடுக்க ஆசை வந்தது. எப்போதும் கையில் இருக்கும் கேமராவை எடுக்கப் பையைத் திறந்தால்... அதிர்ச்சி! கேமராவைக் காணவில்லை.

நடைபோகும் வழியில் விட்டு விட்டோமோ என்று யோசித்தோம். அந்தச் சமயம் அவ்வழியாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஓர் அமெரிக்கப் பெண்மணி 'ஹேப்பி நியூ இயர் டு போத் ஆப் யூ!' என்று உரக்கச் சிரித்தபடி சொல்லிக் கொண்டு வேகமாகப் போனார். 'ஜனவரி மாதம் முடியும்வரை இங்கே வாழ்த்துவார்கள் போலிருக்கிறது!' என்று நினைத்தபடி மீண்டும் கேமராவைத் தேட ஆரம்பித்தோம். என் கணவரைப் பார்க்கில் இருக்கும் படிச் சொல்லிவிட்டு வேகமாகக் காலணிக் கடைக்குப் போனேன்.

நாங்கள் காலணி வாங்கியபோது இருந்த பணியாளர் மாறி இருந்தார். அதனால் மிகவும் கூச்சத்துடன் கடையிலிருந்த பெண்மணியிடம் "என் கேமராவைக் காணவில்லை. தேடிக் கொள்ளலாமா?" என்று கேட்டேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் "நீங்கள் ஷ¥ டிரையல் செய்தபோது விழுந்துவிட்டது. வெளியில் வந்து 15 நிமிஷம் தேடினேன். இதோ உங்கள் கேமரா!" என்று சொல்லிக் கேமராவைக் கொடுத்தார். எங்களுக்குக் கேமராவைவிட அதில் இதுவரை எடுத்த படங்கள் மிகவும் முக்கியம்.

அந்தக் கடைப் பணியாளரையும், புத்தாண்டு பிறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும் ஆத்மார்த்தமாகப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன சைக்கிள் அமெரிக்கப் பெண்ணையும் மகிழ்ச்சியோடு நினைத்துக் கொள்கிறேன்.

பிரேமா,
சான் ஹொசே

© TamilOnline.com