பி.ஸ்ரீ. ஆச்சார்யா
எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனத் தொட்டது துலங்க வாழ்ந்தவர் பி.ஸ்ரீ., பி.ஸ்ரீ. ஆச்சார்யா என்றெல்லாம் அழைக்கப்பட்ட பி. ஸ்ரீநிவாச்சாரியார். இவர் ஏப்ரல் 16, 1886ல் தென்திருப்பேரையில் பிச்சு ஐயங்கார், பிச்சம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தாயாரின் ஊரான விட்டலாபுரத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் நெல்லை ஹிந்து ஹைஸ்கூலில் படித்தார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். அப்போது, பாரதியார் தனது கட்டுரைகள் மூலம் சுதந்திர தாகத்தைத் தூண்டிக் கொண்டிருந்தார். பாரதியாரின் 'இந்தியா' இதழைத் தொடர்ந்து வாசித்து வந்த பி.ஸ்ரீ.க்கும் போராட்ட எண்ணம் வலுத்தது. எஃப்.ஏ. படிப்பை நிறுத்திவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாரதியாரை நேரடியாகச் சந்தித்து நட்புக் கொண்டார். வ.உ.சி.யின் நட்பும் கிடைத்தது. தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார்.

இவற்றைக் கண்டு கவலை கொண்ட பெற்றோர் தங்கம்மாள் என்பவரை இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். தமது இல்லத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் சொல்லித் தந்தார். ஓய்வுநேரத்தில் எழுத்து மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். இவரது மாணவர்மூலம் காவல்துறையில் வேலை கிடைத்தது. 1910ல் யோகி ஸ்ரீ அரவிந்தரை உளவு பார்க்கும் பணி பி.ஸ்ரீ.க்குத் தரப்பட்டது. ஆனால் அதற்கு இவர் மனம் ஒப்பவில்லை. அதனால் அப்பணியிலிருந்து விலகி எழுத்துப் பணியில் ஈடுபட்டார். 'கிராம பரிபாலனம்' என்ற இதழைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார். அதில் இவர் எழுதிய 'மாறன்நேர் நம்பி' என்ற சிறுகதை வெளியானது. 'மக்கள் எல்லோரும் சமமே. அவர்களுள் உயர்வு, தாழ்வு இல்லை' என்பதை வலியுறுத்தி அச்சிறுகதையை எழுதியிருந்தார். நட்டமேற்படவே இதழை நிறுத்திவிட்டார். செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, 'குமரன்' பத்திரிகையின் ஆசிரியராக, பல கதை, கட்டுரைகளை எழுதினார். அது இவருக்குப் பரவலான அறிமுகத்தையும், நற்பெயரையும் தந்தது. பல ஊர்களுக்குப் பயணித்து, பயணக் கட்டுரைகளை எழுதத் துவங்கினார். ராஜாஜியின் எழுத்துக்கள் இவருக்கு முன்னோடியாக இருந்தன. பின்னர் பக்தி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். அவற்றோடு தமிழ், தமிழர் பண்பாடு, வீரம், வாழ்க்கை முதலியவை பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார். அவை பின்னர் 'வீரத் தமிழகம்' என்ற பெயரில் நூலானது. பிரபல ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ். வாசன் பி.ஸ்ரீ.யின் நண்பர். அவரும், அப்போதைய விகடன் ஆசிரியர் கல்கியும் பி.ஸ்ரீ.யை விகடனுக்கு எழுத வேண்டினர். 'கிளைவ் முதல் ராஜாஜிவரை' என்ற தொடர்கட்டுரை விகடனில் வெளியானது. பின்னர் அது நூலாகவும் உருவாக்கம் பெற்றது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களிலும், தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களிலும் எழுதத் தொடங்கினார் பி.ஸ்ரீ.

பி.ஸ்ரீ.யின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகக் காரணமாக அமைந்தது அவரது ராமாயணம் பற்றிய தொடர்களும் கம்பன் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும்தான். கம்பனைப் பல ஆண்டுகள் ஆழ்ந்து படித்துத் தொடர் கட்டுரைகளாக எழுதினார். விகடனில் வெளியான 'கம்ப சித்திரங்கள்', 'சித்திர ராமாயணம்' தொடர்கள் இவரைத் தமிழுலகம் அறியச் செய்தது. இவரது கட்டுரையும், கோபுலுவின் ஓவியமும் வாசகர்களை ராமாயண காலத்துக்கே அழைத்துச் சென்றன. தொடரின் அத்தியாயங்களுக்கு பி.ஸ்ரீ. சூட்டியிருந்த “வந்தான்! கண்டான்! வென்றான்!', 'முன் வாசற் பூஞ்சோலை', 'சிறையிருந்த செல்வி' போன்ற தலைப்புகள் வாசகர்களைக் கவர்ந்தன. ஆர்வத்தைத் தூண்டின. பெரும் இலக்கியத்தை வெகுஜன வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்ததில் பி.ஸ்ரீ.க்கு மிக முக்கிய பங்குண்டு. அதுவரை உரையாசிரியர்களால் சொல்லப்படாத நுண்பொருளை ஆராய்ந்து அக்கட்டுரைகளில் கூறியிருந்தார் பி.ஸ்ரீ. அவை அக்காலத் தமிழறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டன.

கம்பன் உலக மகாகவி, அவனுக்கு இணையான ஒரே கவிஞன் ஷேக்ஸ்பியர் என்பது பி.ஸ்ரீ.யின் கருத்து. மேடைதோறும் சென்று கம்பனைப் பற்றி உரையாற்றியிருக்கிறார். சொந்த ஊரான விட்டலாபுரத்தில் தாம் வாழ்ந்த இல்லத்திற்கு, 'கம்பன் நிலையம்' என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். கம்பன் பற்றிய சிந்தனை தமிழகத்தில் பல்கிப் பெருக, மிக முக்கியமான காரணமாக அமைந்தவர் அவர்தான். தினமணி நாளிதழின் பதிப்பாசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். அக்காலத்தில் நல்ல பல நூல்களைத் தினமணி மலிவுப் பதிப்புத் திட்டத்தின் மூலம் வெளியிட்டார். இவர் எழுதி பாரி நிலையம் வெளியிட்ட தமிழ் அகராதி குறிப்பிடத் தகுந்தது. இது பிற அகராதிகளிலிருந்து மாறுபட்டது. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றை அல்லயன்ஸ், கலைமகள் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

இவர் எழுதிய ஒப்பிலக்கிய நூல் வரிசையில் 'பாரதியும் ஷெல்லியும்', 'மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும்', 'ஆண்டாளும் மீராவும்', 'பாரதியும் தாகூரும்', 'வள்ளுவரும் சாக்ரடீசும்', 'நந்தனாரும் திருப்பாணாழ்வாரும்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவை தவிர 'ஆழ்வார்கள் வரலாறு', 'திவ்யப்பிரபந்த சாரம்', 'தசாவதாரக் கதைகள்', 'நாரதர்', 'நவராத்திரி கதைகள்' போன்ற பல பக்தி நூல்களையும் எழுதியிருக்கிறார். இவர் ஆய்வு செய்து எழுதிய பக்திக் கதைகள் பெரிதும் போற்றப்படுபவன. 'தொண்டக்குலமே தொழுக்குலம்' என்ற நூல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுபோல தமிழ்ச் சான்றோர்கள் பற்றி பி.ஸ்ரீ. எழுதிய 'நான் அறிந்த தமிழ் மணிகள்' நூலும் குறிப்பிடத் தகுந்த ஒன்றே. பன்னெடுங்காலம் ஆய்ந்து உருவாக்கிய 'இராமானுஜர்' என்ற நூலுக்கு 1964ல் 'சாகித்ய அகாதமி' விருது கிடைத்தது. இதற்காக மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் இவருக்குப் பாராட்டும், பொன்முடிப்பும் அளிக்கப்பட்டது.

வ.வே.சு. ஐயர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சா., கா.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி., மறைமலையடிகள், ராஜாஜி, கல்கி என இலக்கிய ஜாம்பவான்கள், தமிழறிஞர்கள் பலர் பி.ஸ்ரீயின் நெருக்கமான நண்பர்கள். பி.ஸ்ரீ.யின் கல்லூரித் தோழரான வையாபுரிப் பிள்ளை பி.ஸ்ரீ. மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார். பலவிதங்களிலும் பி.ஸ்ரீ.யை ஊக்குவித்து அவரது பன்முக ஆற்றலை வெளிக் கொணரச் செய்ததில் வையாபுரிப் பிள்ளைக்கு மிக முக்கியப் பங்குண்டு. கம்பன்மீது கொண்ட ஈடுபாட்டால் முதுமைக் காலத்திலும் அயராது கம்பனைப் பற்றி ஆய்ந்து 'நான் ரசித்த கம்பன்' என்ற நூலை இவர் எழுதி முடித்தார். 'கம்ப மேதை', 'ராம திலகம்', 'கம்பராமாயணக் கலங்கரை விளக்கம்' போன்ற பட்டங்கள் இவரது கம்பன் ஈடுபாட்டைப் பறை சாற்றும். அக்டோபர் 28, 1981 அன்று 95ம் வயதில் சொந்த ஊரான விட்டலாபுரத்தில் காலமானார் பி.ஸ்ரீ. புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சுதாங்கன் இவரது பேரன் ஆவார்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com