காலம் கடந்த விவேகம்!
அன்புள்ள சிநேகிதியே

எனக்கு ரொம்ப நாளாக இந்தப் பகுதிக்கு எழுத ஆசை. ஆனால் பிரச்சனை என்று எதுவும் இல்லை. போன 'தென்ற'லில் அன்பை நிறையக் கொடுங்கள் என்று எழுதியிருந்தீர்கள். அதைப் படித்தவுடன் எனக்கு என்னுடைய மாமியார் ஞாபகம் வந்தது. அவரைப்பற்றி எழுதுகிறேன். உங்கள் பகுதியில் போடுவீர்களா என்று தெரியாது. ஒரு முயற்சிதான்.

என் மாமியார் போய் 5 வருஷங்களுக்கு மேல் ஆகிறது. அவர் இருந்தபோது I feel I took her for granted. யோசித்துப் பார்க்கிறேன். ஒரு தடவைகூட அவர் என்னைக் கடுமையாக விமர்சித்ததில்லை. நான் ஒரே பெண். அப்பா அம்மாவுக்கு மிகவும் செல்லம். அப்பா நல்ல நிலையில் இருந்தார். கேட்டதெல்லாம் கிடைக்கும். கொஞ்சம் அடங்காப் பிடாரியாகத்தான் இருந்திருக்கிறேன். என் கணவர் வீட்டில் அவர் படிப்பைத் தவிர எந்தச் சொத்தும் கிடையாது. மாமனார் சாதாரண வேலை. மிடில் கிளாஸ். படித்த பையன். ஜாதகம் பொருந்தியிருந்தது. ஆனாலும் என் அப்பா தயங்கினார். என் கணவருக்கு மூன்று தங்கைகள். நான் ரொம்பக் கஷ்டப்படுவேன் என்று யோசித்தார்.

என் கணவர் மிகவும் நன்றாக இருப்பார். எம்.எஸ். படிக்க அமெரிக்கா வர இருந்தார். ஆகவே அடம் பிடித்து அப்பாவைச் சம்மதிக்க வைத்தேன். என் மாமியாரும் சிறிது தயங்கி இருக்கிறார். பணக்காரப் பெண், எப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்வாளோ என்று. ஆனால் என் கணவர் அமெரிக்கா வருவதற்குள் திருமணம் முடித்துவிட வேண்டும். அவருக்கும் ஜாதகப் பிரச்சனை இருந்திருக்கிறது. எப்படியோ எனக்குப் பிடித்தவரை திருமணம் செய்துகொண்டு விட்டேன். என்னையும் உடனே அமெரிக்கா அனுப்ப அப்பா நினைத்தார். ஆனால் முடியவில்லை. என் மாமியார் வீட்டில்தான் இருந்தேன். வேலை ஒன்றும் செய்யத் தெரியாது. சமைக்கத் தெரியாது. தரையில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். டைனிங் டேபிள் போட இடம் இல்லை. இவர் இந்தியாவில் என்னுடன் இருக்கும்வரை அங்கே, இங்கே என்று சுற்றிக் கொண்டிருந்ததில் ஒன்றும் தெரியவில்லை. இவர் இங்கே படிக்க வந்து நான் அவர் மனிதர்களுடன் தங்க வேண்டிய நிலை வந்தபோதுதான் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. ஏதாவது சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டோடு போய் இருந்துவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். (இப்போது நினைக்கும்போது அதற்கு வெட்கப்படுகிறேன்).

ஆனால் என்ன குடும்பம் அது! பாசத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது!! அவருடைய தங்கைகள் என்னிடம் ஆசையாக இருந்ததைக்கூட எனக்குத் திருப்பிக் காட்டத் தெரியவில்லை. 'I deserve it' என்பது போலத்தான் நடந்துகொண்டேன். என் மாமியார் தன் பெண்களுக்கு முதலில் பரிமாறி விட்டு, 'நீயும் நானும் ஒன்றாய்ச் சாப்பிடலாம்' என்று முதலில் சொன்னார். எனக்கு உள்ளுக்குள் கோபம் கோபமாக வந்தது. பொறுத்துக் கொண்டேன். அப்புறம் அவருடன் உட்கார்ந்து சாப்பிடும்போது, தனக்கு மோரை விட்டுக்கொண்டு எனக்குமட்டும் ஒரு கரண்டி தயிர் போடுவார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை சின்ன நாத்தனார் அதைப் பார்த்துவிட்டு, "மன்னிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?" என்று வாதாடியிருக்கிறார். 'இல்லை' என்பதே தெரியாமல் வளர்ந்த எனக்கு, கொஞ்சம், கொஞ்சமாகத்தான் நகை, நட்டு என்பது இல்லை; சாப்பாடுக்குக்கூட பொருளாதார வசதிக்கேற்ப வீட்டுக்கு வீடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு இருப்பார்கள் என்று புரிய ஆரம்பித்தது. நானும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள ஆரம்பித்தேன்.

என் பெரிய நாத்தனார் கல்யாணம் முடிந்து மற்ற இரண்டு பேர்களும் வேலைக்குப் போக, வீட்டிலும் வசதி பெருகிக்கொண்டிருந்தது. நான் குழந்தைபோல டி.வி. பார்த்துக்கொண்டு, நினைத்தால் அம்மா வீட்டுக்குப் போவது என்று பொறுப்பில்லாமல்தான் இருந்தேன் என்று நினைக்கிறேன். But, something interesting I want to share. எனக்கே தெரியாமல் நான் வீட்டு வேலைகளும் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. சமையலில் இருந்து, துணி மடித்து இஸ்திரி செய்வதிலிருந்து எல்லோரும் ஒன்றாகச் செய்வோம். அதுவும் ஒரே பெண்ணாக இருந்ததால் இந்த கலகலப்புக் குடும்பம் எனக்குப் பிடித்துப் போயிருந்தது. அந்தக் கொதிக்கும் வெயிலில் மொட்டை மாடியில் வடாம் போட்டு உலர்த்தியிருக்கிறோம். என் அம்மாவே அதிசயப்பட்டுப் போய்விட்டாள். அதுவும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யார் என்னை எந்தக் குறை சொன்னாலும் என் மாமியார் என்னை விட்டுக்கொடுத்துப் பேசியதில்லை. 'அவரவருக்குக் குடும்பம், குழந்தை என்றால் பொறுப்பு தானாக வருகிறது. அமெரிக்கா போய்விட்டால் எடுபிடிக்குக் கூட ஆளில்லையாம். இந்தக் குழந்தை என்ன செய்யப் போகிறதோ' என்றுதான் சொல்வார். எனக்கு என் மாமியாரிடம் பயமும் இல்லை. மரியாதையும் இல்லை. ஆசையாக இருந்தால் கட்டிக் கொள்வேன்; கோபம் வந்தால் கத்துவேன்.

எனக்கு ஏதாவது அட்வைஸ் செய்ய வேண்டும் என்றால் மிகவும் இங்கிதமாக எடுத்துச் சொல்வார். என்னையறியாமலேயே நான் நிறைய அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். பொருளாதார வசதியில்லாமல் பல வருடம் இருந்ததால் மிகவும் சிக்கனமாகக் குடும்பம் நடத்துவார். ஆனால் கருமி இல்லை. வேலைக்காரர்களுக்கு தன்னால் முடிந்ததையெல்லாம் கொடுப்பார். ஒருமுறை நான் மிகவும் ஆசையாக பாதாம் அல்வா பண்ணியிருந்தேன். விருந்தினர் நிறைய வரவே எல்லாம் தீர்ந்து போய்விட்டது. அவருக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்திருந்தேன். அதை அவர் கரண்டியில் எடுக்கும்போது வேலைக்காரியின் குழந்தை வந்து நின்றது. உடனே அப்படியே அதன் வாயில் அடைத்து விட்டார். எனக்குக் கோபமாக வந்தது. உடனே என்னைப் பார்த்து 'நெஞ்சு மட்டும் தாம்மா ருசி' என்னைவிட அந்தக் குழந்தைக்குத் தானே ஸ்வீட்டின் ருசி தெரியும்' என்றார். இன்றும் நினைத்துக் கொள்கிறேன். அவர் வாழ்க்கையில் அவ்வப்போது உதிர்த்த வார்த்தைகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

அதுவும் சமீப வருடங்களில் என் குடும்பத்தில் ஒவ்வொருவராக மறைந்து போய்க் கொண்டிருக்கின்றனர். முதலில் என் அம்மா, அப்புறம் அப்பா, மாமனார், மாமியார். என்னைத் தன் குழந்தையாக, பெண்ணாக, தோழியாக நடத்திய அந்த மனித தெய்வத்தை ரொம்ப ரொம்ப நினைக்கிறேன். கணவனின் அம்மாவை 'அம்மா' என்று கூப்பிட வேண்டும் என்று உறவினர்கள் சொன்னார்கள். நான் 'என் அம்மாதான் எனக்கு அம்மா. Aunty என்றுதான் கூப்பிடுவேன்' என்று அப்படித்தான் கடைசிவரை கூப்பிட்டேன். 'அம்மா' என்று கூப்பிடவில்லையே என்ற குறை இப்போது இருக்கிறது. மானசீகமாக இப்போதெல்லாம் அவரை 'அம்மா' என்று கூப்பிடுகிறேன். அந்த வயதின் immaturity போய், காலம் கடந்து விவேகம் வந்திருக்கிறது. எனக்கு 55 வயது ஆகிறது. 2 பிள்ளைகள். என்னுடைய ஆசையெல்லாம் என்னுடைய மாமியார்போல், வரப்போகும் மருமகள்களிடம் (எந்தக் குலமோ, எந்த மொழியோ) அரவணைத்து, அன்போடு இருக்க வேண்டும் என்பதுதான். அவரைப்போல இருக்க முடியுமா என்பது தெரியாது. காலம் கடந்து அவருடைய அருமையை உணர்கிறேனா என்றும் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கும்....

...............

அன்புள்ள சிநேகிதியே:

எனக்கு பதில் எழுதும் சிரமத்தைக் குறைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. நீங்கள் உங்கள் மாமியாரைப் பற்றி விவரித்ததை நான் என் மனதில் உருவகித்து அந்த அருமையான மனிதரை ஆசையாக நேசிக்கிறேன்.

நீங்கள் எழுதிய விதத்தைப் பார்க்கும்போது நீங்களும் வெளிப்படையான, கபடு சூதில்லாத நல்ல குணம் உள்ளவர்போலத் தெரிகிறது. இல்லாவிட்டால் பண்பட்ட உறவின் மகிமையை அப்போதோ பின்னாலோ உணர முடியாது. புண்பட்ட, புரையோடிய நினைவுகளைப் பின்னால் தள்ளி, புன்னகையே வாழ்வாக அமைத்துக் கொண்ட சில அருமை மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன். நினைத்தாலே மனதில் மத்தாப்புப் பூக்கும். அப்படித்தான் உங்களுக்கும் இருக்கும். நல்ல மருமகள்கள் வரட்டும்.

வாழ்த்துக்கள்
டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com