சரணேஷ் பிரேம்பாபு
சான் ரமோனின் (கலிஃபோர்னியா) டோயெர்டி வேல்லி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் சரணேஷ் பிரேம்பாபு பன்னாட்டுக் கணிதப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் தைப்பேயில் (தைவான்) நடந்த இந்தப் போட்டிக்கு அமெரிக்கக் குழுவுடன் சென்றார். ஜே.எல்.எஸ். நடுநிலைப் பள்ளியில் 8வது கிரேடு படிக்கும் மாயா சங்கர் இதே போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிகுடாப் பகுதியின் மேத்எட்ஜ் (mathedge) மாணவர்கள் தைவான் அகில உலகக் கணிதப் போட்டியில் (Taiwan International Mathematica Competition, TAIMC) தனிப்போட்டிகளில் 8 விருதுகளையும், குழுப்போட்டிகளில் 2 விருதுகளையும் வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, யூ.எஸ்.ஏ., ஜப்பான், ரஷ்யா, உள்ளிட்ட 28 நாடுகளில் இருந்து 588 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டிகள் ஜூலை 23 முதல் 28ம் தேதிவரை நடைபெற்றன.

ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குத் தொடக்கநிலைப் போட்டி (Elementary Mathematica International Competition, EMIC) மற்றும் ஜூனியர் ஹை மாணவர்களுக்கு உயர்நிலைப் போட்டி (Invitational World Youth Mathematics intercity Competition, IWYMIC) என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

உயர்நிலை தனிப்பிரிவு போட்டிகளில் (IWYMIC) சரணேஷ் தானிகா பிரேம்பாபு வெள்ளிப்பதக்கமும், மாயா சங்கர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். திவ்யா பாடே(Divya Bade), ஜோனதன் சாங் ஸேங், டோனி யுடோங் ஸாவோ ஆகியோர் தகுதிப் பரிசுகளை (merit award) வென்றனர். ஜஸ்டின் ஜோயி சான், ஆண்டோனி என்-ஹோங் லாவ், யூடோங் ஸாவோ, ஜோஷ்வா சான் ஆகியோர் அடங்கிய USA B team மூன்றாம் இடத்தைப்பிடித்தது.

தொடக்கநிலைப் போட்டிகளில் (EMIC) ஷோப்னவோ பிஸ்வாஸ், மைக்கேல் க்வான், அனிகா காமத் ஆகியோர் தகுதிப் பரிசுகளை வென்றனர். ஜிம்மி லின், ஜெஃப்ரீ சென்யென் லியு, மைக்கேல் க்வான், ஷோப்னவோ பிஸ்வாஸ் ஆகியோரைக் கொண்ட USA A team மூன்றாம் இடத்தைப் பிடித்தது. டைலர் யான் ஸூ, க்ரேஸ் ஜியாங், ஆண்டோனி லீ ஆகியோர் தொடக்கநிலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

"கணித அறிவோடுகூட, காரண காரியச் சிந்தனை, தர்க்கரீதியான சிந்தனை ஆகியவை இந்தப் போட்டிகளில் மிக அவசியம். தவிர, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. எனவே இவற்றில் பங்குகொள்வது எனக்கு மிகச் சுவையாக இருந்தது. நான் ரஷிய மொழி கற்று வருகிறேன். அங்கு வந்த ரஷிய மாணவர்களுடன் அவர்கள் மொழியில் பேசவும் சுவாரசியமாக இருந்தது" என்கிறார் சரணேஷ். இவர் 'நேஷனல் சயன்ஸ் பௌல்' போட்டியில் வென்றவர், ஜூனியர் மேத் ஒலிம்பியடில் தகுதி பெற்றவர் என்பவையும் இங்கு கவனிக்கத் தக்கது.

தகவல்: பிரேம்பாபு

© TamilOnline.com