பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக செப்டம்பர் மாதத்திலிருந்து முனைவர் பிளேக் வென்ட்வர்த் பதவியேற்கிறார். இளைஞர். தமிழையும், தமிழ் நாட்டையும் மிகவும் நேசிப்பவர். தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணித்திருக்கும் இவர் "திருநெல்வேலி அல்வா இல்லாமல் வாழ முடியுமா?" என்று நகைச்சுவையுடன் இனிமையாகப் பேசிப் பழகுபவர். அவரைத் தென்றலுக்காகச் சந்தித்ததில் சில முக்கியப் பகுதிகள்....
கேள்வி: உங்களுக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? பதில்: சிகாகோ பல்கலைக் கழகத்தில் நான் சமிஸ்கிருதம் படித்தேன். அப்போது எனக்கு தமிழைப் பற்றி அறிமுகம் கிடையாது. என் ஆராய்ச்சியை வழிநடத்திய பேராசிரியர் "இந்தியாவை அறியப் புத்தகப் படிப்பு போதாது. அங்கே வாழ்ந்து அனுபவம் பெற வேண்டும். அதற்கு சமிஸ்கிருதம் தவிர வேறு என்ன கற்கப் போகிறாய்?" என்று கேட்டார். என் நெருங்கிய நண்பர் ரிச்சர்ட் வெய்ஸ் (Richard Weiss) தற்போது நியூசிலாந்தில் கற்பிக்கிறார். "தமிழ் மிக அழகான மொழி. தென்னிந்தியா மிகச்சிறந்த இடங்களில் ஒன்று. தமிழ் கற்கலாமே" என்றார். நான் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேரா. நார்மன் கட்லரிடம் (Norman Cutler) இரண்டு ஆண்டுகள் தமிழ் கற்றேன். அவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் அழகான தமிழுக்கு என்னை அறிமுகப் படுத்தினார்.
பின்னர் மதுரைக்குச் சென்றேன். அங்கு சிறந்த தமிழாசிரியர்களிடம் தமிழ் கற்றேன். எனக்கு மதுரை மிகவும் பிடித்துவிட்டது. அப்போது துவங்கிய தமிழ் ஆர்வம் இன்னும் தொடர்கிறது. தமிழும், சமிஸ்கிருதமும் எவ்வாறு ஒரே காலகட்டத்தில் வளர்ந்தன என்பது பற்றி அறிய எனக்கு ஆர்வம் அதிகம். இடைக்காலத் தமிழ் இலக்கியம் பற்றி மேற்கத்திய நாடுகளில் பலருக்கும் தெரியாது. நான் யேலில் பணிபுரிந்த போது கீழ்நிலை பட்டப் படிப்பு மாணவர்கள் தமிழில் மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்ததுண்டு. தமிழில் இருக்கும் பொக்கிஷங்களை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள இருக்கும் வாய்ப்புகளை எண்ணினால் எனக்கு மிக உற்சாகமாக இருக்கிறது.
கே: நீங்கள் முனைவர் பட்டம் பெற என்ன ஆராய்ச்சி செய்தீர்கள்? ப: என்னுடைய ஆராய்ச்சி உலா பிரபந்தம் பற்றியது, முக்கியமாக உல்லாச ஒட்டக்கூத்தனார் மற்றும் 17ஆம் நூற்றாண்டுக் கவிஞர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியது. உலாப் பிரபந்தம் நாயன்மார், சேரமான் பெருமாள் காலத்தில் துவங்கி, 17ஆம் நூற்றாண்டில் எப்படி வளர்ந்தது என்பது பற்றி ஆராய்ந்தேன். சமஸ்கிருதத்தில் முக்கியமாகக் காளிதாசர் காலத்திற்கு முந்தைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்தேன்.
சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதைப் பென்குயின் இந்தியா வெளியிட இருக்கிறது. தொன்மையான இலக்கியங்கள், தற்கால புதினங்கள் இரண்டிலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆவல்.
கே: உங்களுக்கு யேல் பல்கலைக் கழகத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது? ப: யேல் பல்கலையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக இருந்த அறிஞர் சிவராமகிருஷ்ணன் அங்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அங்கிருந்த சில மாணவர்கள் தமிழ் கற்க ஆர்வம் காட்டினார்கள். அவர்களோடு அங்கு பேராசிரியராக இருந்த பார்னி பெய்ட் (Barney Bate) ஆகியோரின் முயற்சியால் தமிழ் கற்பிக்க வாய்ப்பு உருவாயிற்று. நான் அந்த வேலையைச் செய்துகொண்டே, முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். கடினமாகத்தான் இருந்தது. அங்கே நல்ல தமிழ்ச் சமூகமும், தமிழ்க் குடும்பங்களில் இருந்து வந்த மாணவர்களும் இருந்தனர். தமிழ் கற்பிக்கும் ஆர்வம் உண்டாயிற்று.
கே: யேல் பல்கலையில் மேல்நிலைப் பட்டப் படிப்பில் தமிழ் கற்க முடியுமா? ப: யேலில் தமிழை முதன்மையான மொழியாக வைத்து ஆராய்ச்சி செய்வது கடினம். அதை மேற்பார்வையிடத் தகுதியான தமிழ் பேராசிரியர் கிடையாது. நான் சிகாகோ பல்கலை, கொலம்பியா பல்கலை, ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கலைப் பேரா. டேவிட் ஷுல்மேன் (David Shulman) மற்றும் தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் துணையுடன் சில ஆராய்ச்சிகளை வழிநடத்தியிருக்கிறேன்.
கே: பெர்க்கலி தமிழ்த்துறையில் எவ்வகை ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க எண்ணுகிறீர்கள்? ப: பெர்க்கலி மானிடவியல் துறையில் (Anthropology) சக்தி நடராஜ் என்பவர் திருநங்கை அரவாணியர் சமூகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். புதுமையான ஆராய்ச்சி. தமிழ்த் துறைமூலம் அவருக்கு உதவ முயற்சி செய்கிறேன். மாணவர்கள் முன்வந்து உதவி கேட்கும்போது என்னுடைய அறிவை விரிவாக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ்சார்ந்த ஆய்வுகளுக்கு என்னால் உதவ முடியும். தொல் இலக்கியங்களைப் படிப்பதோடு தற்காலப் புதினங்களிலும் ஆராய்ச்சி செய்யச் சில மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சென்ற வருடம் கிரண் கேசவமூர்த்தி, பெருமாள் முருகன் புதினங்களை ஆராய்ந்து பட்டம் பெற்றிருக்கிறார்.
கே: கீழ்நிலைப் பட்டப் படிப்பு மாணவர்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தை எப்படி உருவாக்கலாம்? ப: இது எல்லா அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் எழும் கேள்விதான். கீழ்நிலைப் படிப்பில் தமிழ் கற்க வரும் மாணவர்கள் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம் பெற அல்லது தமிழில் பேசிப்பழகும் அளவிற்கே கற்க விரும்புவார்கள். தமிழ்க் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்ததால் தமிழில் சரளமாகப் பேசத் தெரியாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடினமான இலக்கியங்களை ஆழப் படிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இவர்களுக்குத் தமிழார்வத்தைத் தூண்டும் அறிமுக நிலை வகுப்புகள் மட்டுமே அமைக்க வேண்டும் என்பது என் கருத்து.
அறிமுக நிலை வகுப்பு கார்னெல் பல்கலையில் (Cornell University) கற்பித்திருக்கிறேன். தென்னிந்திய இலக்கியங்கள் பற்றியது. வாரம் ஒருமுறை தமிழ் கற்கும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குப் பிடித்த தமிழ்ப் பாடல்களுக்குச் சொல் பிரித்துப் பொருள் சொல்வேன். தமிழின் தொல் இலக்கியங்களைப் படிக்கும் உந்துதல் அவர்களுக்கு ஏற்பட்டதை உணர முடிந்தது. ஆர்வம் வந்துவிட்டால் விடாமல் தமிழ் கற்கத் தொடருவார்கள்.
பெர்க்கலி மாணவர்கள் நான்கு வருடங்களுக்குள் பட்டப் படிப்பை முடிக்க முயல்கிறார்கள். பொறியியல், கணினி, மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற வருபவர்கள் தமது துறைக்குத் தேவையான வகுப்புகளில் சேர்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். தமிழில் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அவர்கள் படிக்கும் துறையில் படிப்பு பாதிக்காத வகையிலும் தமிழ் அறிமுக நிலை வகுப்புகளை அமைப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
கே: பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் பதவியை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்? ப: மிகப் பெரிய பொறுப்பு. தமிழ்க் கல்வியை அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பரப்பியதில் ஜார்ஜுக்குப் பெரும் பங்கு உண்டு. அதைத் தனி நபராகச் சாதித்திருக்கிறார். அவரது கடின உழைப்பும் தமிழ் கற்பிப்பதில் இருந்த ஆர்வமும்தான் பெர்க்கலியில் தமிழ் அறக்கட்டளை உருவாக முக்கியக் காரணமாக இருந்தன. வளைகுடாப் பகுதித் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து அவரும், அவர் மனைவி கௌசல்யாவும் உழைத்தார்கள். தான் உருவாக்கிய வாய்ப்பு தனக்குப் பிறகு வரும் பேராசிரியர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஜார்ஜ் நிறுவிய உயர்தரத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கியப் பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது. இப்படி வேறெங்கும் கிடையாது. மேற்கத்திய பல்கலைகளில் தமிழைப் பரப்பும் தொலைநோக்கோடு ஜார்ஜ் செயல்பட்டதைத் தொடர வேண்டியது எனது கடமை.
ஜார்ஜைப்போல் இங்கிருக்கும் தமிழ் சமூகத்துடன் ஆழ்ந்த நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். கனெக்டிகட்டில் நல்ல தமிழ் சமூகம் இருந்தாலும், தமிழர்கள் எண்ணிக்கை குறைவு. உலகத்திலேயே மிகப் பெரிய தென்னாசிய சமூகம் வளைகுடாப் பகுதியில் இருக்கிறது. அவர்களுக்குப் பயனுள்ள வகையில் ஜார்ஜ் செயல்பட்டதுபோல் நானும் செயல்பட விரும்புகிறேன்.
கே: பெர்க்கலியில் செயல்படுத்தப் புதிய திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? ப: தமிழ்க் கல்வி தமது வாழ்க்கையை மேம்படுத்தியிருப்பதாகப் பல மாணவர்கள் என்னிடம் சொன்னதுண்டு. அத்தகைய வாய்ப்பை தமிழைப் பற்றி அறியாதவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். நன்கறியப்பட்ட கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற பெருங்காப்பியங்கள் கூட ஆங்கிலத்தில் வரவில்லை. கீழ்நிலை பட்டவகுப்புகளில் இக்காப்பியங்களை அறிமுகம் செய்வது கடினம்.
பெர்க்கலியில் மற்ற துறைப் பேராசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் துறை ஆராய்ச்சிகளுக்குத் தமிழ் எவ்வாறு உதவும் என்ற விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும். அந்தத் துறை மாணவர்களை சந்தித்துப் பேசி அவர்களைத் தமிழ் உலகத்திற்கு அழைத்து வரவேண்டும். சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களிலிருந்து தமிழ்ப் பின்னணியுள்ள மாணவர்கள் பலர் பெர்க்கலியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழில் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அந்த முயற்சிகளை கட்டாயம் செய்வேன்.
கே: ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை எப்படிச் சந்திப்பீர்கள்? ப: இப்போது ஒரு முழுநேரப் பேராசிரியரும், ஒரு பகுதிநேர ஆசிரியரும் உள்ளனர். பகுதிநேர ஆசிரியர் எத்தனை வகுப்புகள் எடுக்கிறார் என்பதைப் பொறுத்தது அவரது சம்பளம். மாணவர்களின் தேவைக்கேற்ப வகுப்புகள் எடுத்தால் அவருக்கும் அதிகச் சம்பளம் கிடைக்குமே. இரண்டு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம். தற்போதிருக்கும் நிதி நிலையில் வேறு வழியில்லை. மாணவர்களுக்கு ஏற்றபடி நமது நேரத்தை மாற்றி அமைத்துக்கொண்டு உதவ வேண்டும். அதை நான் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
கே: வருடாந்திரத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவீர்களா? ப: நிச்சயமாக. தமிழ் மாநாடு முக்கியமானது. அமெரிக்காவில் இருக்கும் தமிழாராய்ச்சி மாணவர்கள் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பு மிகக் குறைவு. அதைத் தமிழ் மாநாடு அளிக்கிறது. இந்த மாநாடுகளிலிருந்து பல சிறந்த ஆராய்ச்சிக் கருக்கள் உருவாயிருக்கின்றன. பெர்க்கலி தமிழ்த்துறையில் அது முக்கியப் பங்காயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கே: தமிழ் நாட்டிலிருந்து ஆய்வு மாணவர்களை இங்கு அழைப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ப: நான் யேல் பல்கலையில் பணி செய்தபோது அமெரிக்க அரசாங்கம் வழங்கும் ஃபுல்பிரைட் உதவித்தொகைக்கு (Fulbright Scholarship) ஏற்பாடு செய்தால் அதன் மூலம் தமிழாராய்ச்சி மாணவர்களை, தமிழ் கற்பிக்க விரும்பும் பேராசிரியர்களை வரவழைப்பது எளிதாக இருக்கும் என்று உணர்ந்தேன். இந்த உதவித்தொகை தேசிய அளவில் எல்லாச் செலவுகளையும் ஏற்கிறது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றினால் அங்கிருந்து வரும் மாணவர்கள் இங்குள்ள மாணவர்களுடன் எளிதில் பழகி, கருத்துப் பரிமாறலாம். மதிய உணவோடு தமிழைப் பரிமாறிக் கொள்ளுதல், இரவில் தமிழ்ப் படங்கள் திரையிடுதல் போன்ற கேளிக்கையான விதத்தில் இங்குள்ள மாணவர்கள் தமிழ் கற்க வாய்ப்பு ஏற்படும். இது தமிழ் நாட்டுக்கும், பெர்க்கலிக்கும் நல்ல பாலமாக அமையும். நான் பெர்க்கலிக்குப் புதியவன். வரும் காலத்தில் இந்தத் திட்டத்தை அமலாக்குவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
கே: தற்போது என்ன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள்? ப: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தென்னாசியாவின் பழம்பெரும் நூல்களைச் சேமிக்கும் திட்டத்தை (Murthy Classical Library of India) நிரந்தர அறக்கட்டளையாக நிறுவியிருக்கிறார். அதன்மூலம் கம்பராமாயணத்தை மொழிபெயர்க்கும் வேலை நடந்து வருகிறது. அதற்கு நான் தலைவராகச் செயல்பட்டு வருகிறேன். அந்தப் பதிப்பில் இடதுபுறம் கம்பராமாயணப் பாடல் வரிகளும், வலதுபுறம் ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கும். அத்தோடு மாணவர்களுக்குத் தேவையான கலைச் சொற்களும், இலக்கணக் குறிப்புகளும் இடம்பெறும். இதை ஏழு புத்தகங்களாக மலிவு விலையில் வெளியிட இருக்கிறார்கள்.
கலிஃபோர்னியா டேவிஸ் பல்கலைப் பேராசிரியர் அர்ச்சனா வெங்கடேஸ்வரன் சுந்தரகாண்டத்தை மொழிபெயர்க்கிறார். நான் பாலகாண்டம்.
என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியை ஒட்டி 12ம் நூற்றாண்டுச் சோழர் காலத்தைப் பற்றி மேலும் ஆராய ஆவல். முக்கியமாக நம்பியாண்டார் நம்பி பற்றி. அவர் தேவாரத்தைத் திரட்டியவர் என்பதைவிட அவரது இலக்கியப் படைப்புகளை ஆராய வேண்டும். அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் படைப்புகளை ஒட்டி இலக்கிய வரலாறு தயாரிப்பது எனது அடுத்த திட்டம். அவர் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கில ஆராய்ச்சி நூல்கள் அதிகமில்லை. சோழர் காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களைப் பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதற்குப் பின் உருவான இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. அதைப் பற்றி கற்க ஆர்வம் உள்ளது.
எனது நெடுங்காலத் திட்டம் விசிஷ்டத்வைத வேதாந்தம் கற்கவேண்டும் என்பது. நான் குமாரசம்பவம், ரகுவம்சம் மற்றும் ராமானுஜரைப் படித்து வருகிறேன். தென்கலை, வடகலைப் பிரிவுகள் பற்றியும் அது தமிழ் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அறிய ஆவல்.
கே: உங்கள் இந்தியப் பயண அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ப: நான் சென்னையிலும், மதுரையிலும் பல நாட்கள் செலவழித்திருந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். என்னுடைய மனைவி மாயாவின் குடும்பம் தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழகம் எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் மையமாகிவிட்டது. வருங்காலத்தில் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கு செலவழிக்க இருக்கிறேன். எனக்குப் பிறக்கும் குழந்தைகளும் தமிழகத்தில் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். என் மனைவி மாயா பன்னிரண்டு வயதில் தமிழ் நாட்டில் இருந்து அமெரிக்கா வந்தார். தமிழ்க் கலாசாரம் அவரிடமும் ஆழ்ந்து ஊன்றியிருக்கிறது. இறுதிக்காலத்தில் கடையம் சென்று அமைதியாக வாழ்வது எனது குறிக்கோள்.
கே: உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள். ப: ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கு அருகில்தான் நான் வளர்ந்தேன். என் தந்தை அமெரிக்கப் புவியியல் அளக்கைத் (U.S. Geological Suvey) துறையில் மென்லோ பார்க்கில் வேலை செய்தார். பெர்க்கலி வாய்ப்பு என்னை மீண்டும் விரிகுடாப் பகுதிக்கு அழைத்து வந்திருக்கிறது. என் சகோதரி சான் ஃபிரான்சிஸ்கோவில் வசிக்கிறார். நாங்கள் இப்போது ஒன்று சேர்ந்துவிட்டோம்.
60களில் ஜவஹர்லால் நேரு இறந்தபோது என் அம்மா இந்தியாவில் இருந்தார். அதற்குப் பிறகு எனக்கு தமிழிலும், இந்தியாவிலும் ஆர்வம் வந்த பிறகுதான் மீண்டும் இந்தியா சென்றார்கள். நான் இந்தியாவில் இருந்தபோது என் குடும்பம் அங்கு வந்து என்னைச் சந்தித்துப் பல நாட்கள் என்னுடன் தங்கினார்கள். என் தந்தை புவியியல் பற்றி சென்னை IITயில் உரையாற்றினார். என் அம்மாவுக்குத் தமிழ்நாடு மிகவும் பிடித்துவிட்டது.
என் மனைவி மாயாவின் குடும்பத்தினர் கனெக்டிகட்டில் உள்ள பிரிஸ்டலில் வசிக்கிறார்கள். அவளது தந்தை வீரவநல்லூர் கோபாலன் அங்குள்ள தமிழ் சங்கத்திலும், ராகா கழகத்திலும் ஆர்வத்தோடு தொண்டாற்றுகிறார்.
கே: தென்றல் வாசகர்களுடன் என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? ப: தென்றல் வாசகர்கள் சற்றும் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம். பெர்க்கலியில் பேராசிரியராகப் பதவி கிடைத்ததை எண்ணி பெருமைப் படுகிறேன். வளைகுடாப் பகுதி தமிழ்ச் சமூகத்துடன் பழகி நட்புக்கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்.
சந்திப்பு: சிவா சேஷப்பன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
*****
பேரா பிளேக் வென்ட்வர்த்துடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பார்க்கவும்: http://sseas.berkeley.edu/people/faculty/blake-wentworth
அவரது கல்வி, அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவருக்குக் கிடைத்த விருதுகள் பற்றிய விவரங்களைக் காண: sseas.berkeley.edu என்ற சுட்டியில் காணலாம்.
பேரா. பிளேக்கின் 'அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருக்கழுக்குன்ற உலா' பற்றிய உரையைக் காணொளியாக பார்க்க:
|