பானுமதி
சகலகலாவல்லி, அஷ்டாவதானி என்று பல்வேறு தரப்பினராலும் போற்றப்பட்ட பழம்பெரும் நடிகை பி. பானுமதி டிசம்பர் 24, 2005 அன்று காலமானார். அவருக்கு வயது 80. இவரது ஒரே மகன் பரணி சென்னை சாலிக்கிராமத்தில் 'பரணி ஹாஸ்பிடல்' என்ற மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோலுக்கு அருகில் உள்ள தோட்டவரம் என்கிற கிராமத்தில் 1925-ம் ஆண்டு பொம்மராஜூ வெங்கடசுப்பையாவின் மகளாகப் பிறந்தார். தந்தை கர்நாடக சங்கீதப் பிரியர் மட்டுமல்லாமல் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

பானுமதி ஒரு பிறவிக் கலைஞர் என்றே சொல்லலாம். தந்தையிடம் இவர் சிறு வயதிலேயே இசை கற்க ஆரம்பித்தார். தெலுங்கு திரைப்பட உலகின் முக்கியத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சி. புல்லையாவின் தூண்டுதல் மூலம் பானுமதி தனது 13 வது வயதில் தெலுங்குத் திரைப்படத்தில் கதாநாயகியாக நுழைந்தார்.

'வரவிக்ரயம்' என்கிற பெயரில் உருவான அந்தப் படம், வரதட்சி¨ணைக் கொடுமை களை பற்றி விளக்கும் படமாகும். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தெலுங்கில் அன்றைய முன்னணி கதாநாயகர்களான என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களைத் தந்த பானுமதி முதன் முதலாகத் தமிழில் நடித்து வெளிவந்தது 'ராஜமுக்தி' (1948) ஆகும். இவரது வெடுக்கான பேச்சு, துடிப்பான நடிப்பு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர் களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனோடு மலைக்கள்ளன், ராஜா தேசிங்கு, நாடோடி மன்னன், அலிபாபாவும் 40 திருடர்களும் என்று பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இவர் நடித்த ரங்கோன் ராதா, அம்பிகாபதி, மக்களைப் பெற்ற மகராசி போன்ற படங்களும் பெருத்த வெற்றியைப் பெற்றன.

ஏவி.எம் நிறுவனத்தாரின் தயாரிப்பில் உருவான 'அன்னை' பானுமதியின் குணச்சித்திர நடிப்பிற்கு ஒரு சான்று. படத்தில் பானுமதி தன் சொந்தக் குரலில் பாடி நடித்த 'பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று' பாடல் தெவிட்டாத தேனமுது.

பானுமதி அநேகமாகத் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருக்கிறார். சில ஹிந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

குடும்பப் பெண்கள் சினிமாவில் நடிப்பதற் குத் தயக்கம் காட்டிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில் பானுமதியின் வரவும், அவர் ஏற்ற கதாபாத்திரங்களும் பல குடும்பப் பெண்களுக்கு சினிமா பற்றிய தயக்கத்தை நீக்கியது என்றே கூறலாம்.

இதற்கிடையில் 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இவருக்கும், பல்வேறு தெலுங்கு, தமிழ் படங்களின் தயாரிப்பாளரும், இயக்குநருமாக விளங்கிய பி.எஸ். ராம கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்தது மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும், ஸ்டூடியோவை யும் உருவாக்கினார்.

இவர்களின் 'பரணி ஸ்டூடியோஸ்' 195ந்ல் 'சண்டி ராணி' படத்தை உருவாக்கியது. இப்படத்தில் பானுமதி இரண்டு வேடங் களில் நடித்தது மட்டுமல்லாமல் படத்தின் கதை, வசனம், இயக்கத்தையும் கவனித்துக் கொண்டார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இது வெளியாகி மிகப் பெரிய வெற்றியையும் விருதுகளையும் ஈட்டித் தந்தது. பானுமதி நாயகியாக நடித்து 1950-ல் ஜெமினி தயாரிப்பில் உருவான 'நிஷான்' (Nishaan) என்கிற ஹிந்திப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதுவே பானுமதியின் முதல் ஹிந்திப் படம்.

1956-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவானபோது மாநிலத்தின் முதல் விருதைப் பெற்றவர் பானுமதி ராமகிருஷ்ணா.

நிறையச் சிறுகதைகளை எழுதிய அனுபவமும் பானுமதிக்கு உண்டு. இவரின் 'அத்தகாரி கதலு' (Attagari Kathalu) சிறந்த சிறுகதைக் கான ஆந்திர பிரதேச சாகித்ய அகாதெமியின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது பெரும்பாலான சிறுகதைகள் குருசாடா அப்பாராவ் மற்றும் முனிமாணிக்கம் நரசிம்மராவ் போன்றவர் களின் பாரம்பரியத்தை அடிப்படையை கொண்டு எழுதப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் நகைச்சுவைக் கதைகள் எழுதும் ஒரே பெண் எழுத்தாளர் என்கிற பெருமை யும் பெற்றவர் பானுமதி.

சுமார் 16 பாடங்களுக்கு மேல் இயக்கிய பானுமதி அப்படங்களுக்கான கதை, வசனம், இசை போன்றவற்றையும் தானே கவனித்துக் கொண்டார். தமிழில் இவர் தயாரிப்பில் உருவான 'இப்படியும் ஒரு பெண்' சிறந்த இசைப் படமாக உலக பெண்கள் ஆண்டான 1975ல் தேர்ந் தெடுக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக 'பக்த துருவ மார்க் கண்டேயா' என்கிற படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் தயாரித்த பானுமதி அப்படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை நடிக்க வைத்து சாதனை புரிந்தார்.

1970களில் இவர் தயாரிப்பில் வெளியான 'பத்துமாத பந்தம்' திரைப்படத்தில் முதன் முதலாக பானுமதி பாப் பாடல் ஒன்றை இயற்றிப் பாடியதுண்டு. அந்தப் பாடல் அக்காலக்கட்டத்தில் தமிழகம் எங்கும் பிரபலமானது.

திரைப்பட உலகில் நான்கு தலைமுறை களைக் கண்ட பானுமதி, ஆர்.கே. செல்வமணியின் 'செம்பருத்தி' படத்தில் பிரசாந்தின் பாட்டியாக நடித்தார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பானுமதி தட்டிச்சென்றார். 1969-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு 'கலைமாமணி' விருது அளித்தது. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வெங்கடேஸ்வரா
பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை அளித்தது. சென்னை இசைக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முதல்வராக பணியாற்றிய பெருமையும் பானுமதிக்கு உண்டு.

பானுமதி பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். சென்னை சாலிகிராமத்தில் 'டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன்' பள்ளி ஒன்றை நிறுவி அப்பள்ளியின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கி வந்தார். லலித கலா அகாதமியின் உறுப்பினராகத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் இருந்தவர். ஆந்திர சாகித்ய அகாதமியின் உறுப்பினராகப் பத்தாண்டுகள்
பணியாற்றியிருக்கிறார்.

பானுமதி போன்ற பல்திறன் கொண்டோரைக் காண்பது அரிது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com