இரா. நடராசன்
அடிப்படையில் ஒரு கவிஞராக அறிமுகமாகி எழுத்தாளராக, சிந்தனாவாதியாகப் பரிணமித்தவர் இரா.நடராசன். இன்று மேடைதோறும், போராட்டந்தோறும் முழங்கும் "நீ புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறாய்" என்ற கவிதை வரிக்குச் சொந்தக்காரர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில், டிசம்பர் 8, 1964ல் நடராசன் பிறந்தார். தந்தை அரசு ஊழியர். அதனால் நடராசனின் பள்ளிப்பருவமும் பல ஊர்களில் கழிந்தது. சமூகத்தின் பல அடுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தந்தை நல்ல வாசகர். நடராசனுக்கும் பள்ளிப்பருவத்திலேயே அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. வளர வளர வாசிப்பு விரிவடைந்தது. குறிப்பாக பாரதியின் கவிதைகளும், காத்திரமான சொற்களும் நடராசனின் படைப்பாற்றலைத் தூண்டின. சிறுசிறு கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1976ல் இவருடைய கவிதை ஆனந்த விகடனில் வெளியானது. 16 வயதில் கிராம நலப்பணித் திட்ட முகாம் மூலம் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. அது அவருக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. தொடர்ந்து பயின்று ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1986ல் அறிவியல் மற்றும் மொழியியல் ஆசிரியராகத் தமது பணியைத் துவங்கினார். ஓய்வு நேரத்தில் கவிதைகளை எழுதத் துவங்கினார். அவை பிரபல வார இதழ்களில் வெளியாகின. கவிஞர் பெஞ்சமின் மொலாயிஸ் அரசியல் படுகொலை செய்யப்பட்டது கண்டு வருந்தி இவர் எழுதிய

"உன்னை தூக்கிலிட்டுவிட்டு
அவர்கள்தான் வரலாற்றின் பக்கமெங்கும்
மாண்டுபோய் கிடக்கிறார்கள்
கருப்புப்புயலே
நீ புதைக்கப்பட வில்லையடா
விதைக்கப்பட்டிருக்கிறாய்"

என்னும் கவிதை நடராசனை நாடறியச் செய்தது. இக்கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து வெளியானது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகிப் பரவலான கவனம் பெறத் துவங்கின. இவரது முதல் கவிதைத் தொகுதி 'கருவறை முதல் கல்லறை வரை' 1982ல் வெளியானது. 1990ல் 'கறுப்பு யுத்தம்' என்ற கவிதைத் தொகுதியை எழுத்தாளர் சுஜாதா வெளியிட்டார். கவிஞர் இன்குலாப் முன்னுரை எழுதியிருந்தார். 'நெல்சன் மாண்டேலா', 'பெஞ்சமின் மொலாயாஸ்' போன்ற கறுப்பினச் சாதனையாளர்களின் சரித்திரத்தை நடராசன் அதில் எழுதியிருந்தார். தொடர்ந்து கதைகள் எழுத ஆர்வம் பிறந்தது. 1991ல் முதல் சிறுகதை 'இரவாகி' கணையாழியில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் கதைகள் வெளியாகத் துவங்கின. 1994ல் 'மிச்சமிருப்பவன்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி, தமிழ்ச் சிறுகதை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமான கதை சொல்லும் போக்குகளிலிருந்து மாறுபட்டு ரத்தமும் சதையுமான மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை, சமூக அவலங்களை உள்ளடக்கியதாக அச்சிறுகதைகள் அமைந்திருந்தன. தொடர்ந்து 'மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து', 'ரோஸ் மற்றும்-நெடுங்கதைகள்' போன்ற கதைத் தொகுதிகள் நடராசனை ஒரு புரட்சிகர எழுத்தாளராக அடையாளம் காட்டின. 'மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து' சிறுகதை பின்னர் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது.

1996ல் சென்னையில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதல்வராகப் பொறுப்பேற்ற நடராசன், 1999 முதல் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வராகப் பணியாற்றத் துவங்கினார். சமூக, எழுத்துப் பணிகளையும் தொடர்ந்தார். 1997ல் வெளியான இவரது 'பாலிதீன் பைகள்' நாவல் தமிழ்க் கதையுலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. சாதிய, சமூகக் கொடுமைகளின் விளைவுகளை அவர் அந்நாவலில் பதிவு செய்திருந்தார். தமிழ் நாவல் கட்டமைப்பில் ஒரு புதிய உத்தியை, கதையை, கதை மாந்தர்களே வாசகர்களோடு சேர்ந்து படிக்கும் உத்தியை அந்நாவலில் அவர் கையாண்டிருந்தார். திருப்பூர் கலை இலக்கியப் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு நாவல் போட்டியில் இந்நாவல் பரிசு பெற்றது. 1996ல் வெளியான 'ஆயிஷா' சிறுகதை நடராசன் வாழ்வில் திருப்புமுனை ஆனது. நமது கல்வி முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், அதன் அவலங்களையும், போதாமையையும் சுட்டிக்காட்டியது அக்கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இச்சிறுகதை, ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகிச் சாதனை படைத்தது. குறும்படம், படக்கதை, நாடகம் எனப் பல தளங்களிலும் இந்நாவல் வெளியாகிப் பேசப்பட்டதுடன், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இப்படைப்பின் மூலம் நடராசன், 'ஆயிஷா' நடராசன் ஆனார். தமிழக அரசும், 'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இந்நூலை கட்டாயப் பாடமாக்கியது. இவை தவிரப் பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் 'ஆயிஷா' பாடமாக வைக்கப்பட்டது.

இச்சிறுகதைக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து குழந்தைகள் உலகின்மீது தனது கவனத்தைச் செலுத்தினார் நடராசன். ஏற்கனவே பள்ளி ஆசிரியராக இருந்த அனுபவம், பல்வேறு ஊர்களில், கிராமப்புறத்தில் வளர்ந்த சூழல்கள் மற்றும் அனுபவங்கள், பள்ளி முதல்வராகக் கல்வித்துறை மீது இருக்கும் விமர்சனங்கள் எனத் தமது பரந்துபட்ட அனுபவங்களைக் கொண்டு குழந்தைகளுக்காக நிறைய எழுத ஆரம்பித்தார். 'ரோஸ்' என்னும் இவரது நாவல், பள்ளிகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வதைகளை, வன்முறைகளை, அவலங்களைப் பேசுகிறது. 'நாகா' (சுனாமியையும், சாரணர் அமைப்பின் முக்கியத்துவத்தையும் கூறுவது), 'மலர் அல்ஜீப்ரா' (கணிதத்தை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் கதை வழியே சொல்லும் நூல்), 'ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்' (குழந்தைத் தொழிலாளியான சிறுவன் ஒருவன் செஸ் சாம்பியனாய் மாறுவது பற்றிய கதை), 'நீ எறும்புகளை நேசிக்கிறாயா' (உலகச் சிறுகதைகள்), 'ஒரு படை வீரரின் மகன்' (பன்மொழிச் சிறுகதைகள்) போன்றவை பல பதிப்புகள் கண்டன. வெறும் பிரச்சனைகளைப் பேசுவதோடு நில்லாமல் தீர்வையும் முன்வைக்கின்றன நடராசனின் படைப்புகள்.

நடராசனின் முயற்சியில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது தமிழின் முதல் பிரெய்ல் மொழி நாவலான 'பூஜ்யமாம் ஆண்டு' என்னும் சிறுவர் நாவல்தான். இது ஓர் அறிவியல் புனைகதை. கண்பார்வையற்ற ஒரு சிறுவன், பேச்சுத்திறன் அற்ற மற்றொரு சிறுவன், காது கேளாத எடி என்னும் சிறுவன் இவர்கள் ஒன்றிணைந்து செய்யும் சாதனைகளையும், அதற்கான அவர்களது முயற்சியையும் சொல்கிறது இந்நாவல். சிங்கப்பூர், மலேசியா என உலகளாவிய நிலையில் வரவேற்கப்பட்ட நூல் இது. படைப்புகள் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார் இரா.நடராசன். பெடரிக் டக்ளஸின் சுயசரிதையை 'கறுப்பு அடிமையின் சுயசரிதை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். 'பயாஃப்ராவை நோக்கி...' (புச்சி யாசெட்டா எழுதிய நைஜீரிய நாவலின் மொழிபெயர்ப்பு), இடையில் ஓடும் நதி (கூ.கி.வா.திவாங்கோ எழுதிய கென்ய நாவல்) போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கன. இவை தவிர பொருளாதாரம், அறிவியல், கணிதம், மேலாண்மை, மருத்துவம், குழந்தை வளர்ப்பு என பல துறைகளில் நூல்கள் எழுதியிருக்கிறார். விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறுகளை, கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார். குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் நோய்கள், மருத்துவ முறைகள், அதற்காக உழைத்த சாதனையாளர்கள் பற்றி நடராசன் எழுதியிருக்கும் 'விஞ்ஞான விக்கரமாதித்தன் கதைகள்' குறிப்பிடத் தகுந்தது. டார்வின், கலிலியோ மற்றும் உலகளாவிய பெண் விஞ்ஞானிகள் பற்றி இவர் எழுதிய நூல்களும் முக்கியமானவை. சிறுவர்களால் வரவேற்கப்படுபவை.

தமிழ் வளர்ச்சித் துறை விருது, இலக்கிய சிந்தனை விருது, லில்லி தெய்வசிகாமணி விருது போன்ற பல விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. இவரது நான்கு சிறுகதைகள் குறும்படங்களாக உருவாகி சர்வதேசத் திரைவிழாக்களில் விருதுகள் பெற்றுள்ளன. இவரது பல நூல்களை மாணவர்கள் எம்.பில். படிப்பிற்காக ஆய்வு செய்துள்ளனர். நல்லாசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினையும் நடராசன் பெற்றிருக்கிறார்.

தமது கல்வி அனுபவத்தைக் கொண்டு, ஆசிரியரும் மாணவர்களும் ஒன்றிணைந்து கற்கும் செயல்முறைக் கல்வியான 'வகுப்பறை ஜனநாயகம்' என்ற கல்விமுறையை உருவாக்கி வெற்றிகரமாக அதனைத் தம் பள்ளியில் செயல்படுத்தி வருகிறார் இரா. நடராசன். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிகழும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். சிறுகதை, நாவல், குழந்தைகள் இலக்கியம், அறிவியல், மொழிபெயர்ப்பு, நாடகம், சமூகம் எனப் பல தளங்களில் 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கும் இவர், தற்போது பாலோ செல்லோ (ஸ்பானிஷ்) எழுதிய 'ரஸவாதி' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். சிறார்களுக்காக 'விஞ்ஞானக் கிறுக்கன்' என்ற நாவலையும் எழுதிக் கொண்டிருக்கிறார். eranatarasan.com என்பது இவரது வலைத்தளம்.

அரவிந்த்

© TamilOnline.com