அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6 அன்று நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் தென்றல் நவம்பர் இதழ் உங்கள் கையில் வந்து சேருமா என்பதைக் கூறமுடியாது. ஆனால், நீங்கள் உங்கள் கையிலிருக்கும் 'வாக்கு' என்னும் பெருஞ்சக்தியை இந்த நாட்டுக்காக, இதன் நன்மைக்காகப் பிரயோகிக்கும் கடமையில் தவறிவிடாதீர்கள். வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவே முக்கியம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது. உலகமே மோசமான பொருளாதாரச் சுழலில் சிக்கித் தத்தளிக்கும் நேரத்தில் பதவியேற்ற ஒபாமா, 'மாற்றலாம், நம்புங்கள் முடியும்' என்ற மந்திரத்தை உச்சரித்தபடிப் பிரவேசித்தார். அவரைச் செயலிழக்கச் செய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் எதிர்க்கட்சி செய்தது, செய்கிறது என்பதைப் பார்த்துத்தான் வருகிறோம். ஏழைகளுக்கும் மருத்துவக் காப்பீடு என்பதில் தொடங்கி, பெரும்பணக்காரரிடமிருந்து செல்வத்தின் சிறுபகுதியை வரியாகப் பெற்று, அதை ஏனையவருக்குப் பயன்படச் செய்வது என்பது உட்படப் பலவற்றையும் இரும்பையொத்த உறுதியோடு நடப்புக்குக் கொண்டுவர அவர் படும்பாடு சொல்லி மாளாது. முந்தைய தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிற்க அவரோடு போட்டியிட்ட ஹிலாரியின் கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளின்டனே ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கைகள் நன்மை பயப்பவை என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் வந்து ஒரே நாட்டின் மக்களாக இணைந்து செழிக்கும், செழிக்க வைக்கும் அதிசயச் சூழல் அமெரிக்காவேயன்றி வேறெங்கும் காண்பது அரிது. அந்தச் செழிப்பும், சமவாய்ப்பும், சுதந்திரமும், சகோதரத்துவமும் சற்றும் தளர்வுறாமல் தொடரவேண்டுமென்றால் அதிபராக ஒபாமா மீண்டும் வரவேண்டும். ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, ஒபாமாவின் செயல்பாடுகளை எளிதாக்க வேண்டும். கலிஃபோர்னியாவின் ஃப்ரீமான்ட் பகுதியில் வசிப்போருக்கு இரட்டைச் சந்தோஷம் பெறவும் ஓர் வாய்ப்பு உள்ளது. அங்கு மேயர் பதவிக்குப் போட்டியிடும் திருமதி. அனு நடராஜன் அவர்களுக்கு வோட்டளித்து, முதல் ஆசிய அமெரிக்கர், முதல் இந்திய அமெரிக்கர், அதிலும் பெண் என்கிற சிறப்புகளோடு அவரைப் பதவியில் அமர வைக்கலாம். இவை நம் கடமை.
*****
"தென்றலில் நான் முதலில் படிக்கும் பகுதி 'அன்புள்ள சிநேகிதியே'தான்" என்று பலர் எமக்குக் கடிதம் எழுதுவதுண்டு. தனிநபர் குடும்பச் சிக்கலுக்கு வழிகூறும் பத்தியைச் சாவித்துவாரத்தின் வழியே தனியறையில் நடக்கும் விரசங்களைப் பார்க்கும் அனுபவமாக மாற்றிவிடும் பத்திரிகைகள் உண்டு. மானுடத் துயரம், குழப்பம், பார்வைக் கோளாறு என்று கதம்பமான, அதே நேரத்தில் சிக்கவிழ்க்கக் கடினமான முடிச்சுகளை வாசகர்கள் எமக்கு எழுதுவதும் உண்மை; அதே நேரத்தில் இரண்டு நாடுகளின் கலாசாரங்களில் உறுதியாகக் கால்பதித்து நின்று, வில்லன்-ஹீரோ என்று வண்ணமடிக்காமல், மனிதநேயத்தை அடித்தளமாகக் கொண்டு, அனுதாபத்துடனும், அறிவார்ந்த நேர்மையுடனும் விடைகள் தருவது தென்றலின் முதல் இதழிலிருந்தே இந்தப் பத்தியை எழுதிவரும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனின் தனிச்சிறப்பு. 'அன்பை யாசகமாகக் கேட்காதீர்கள், கொடுங்கள்' என்ற தலைப்பில் சென்ற இதழில் அவர் எழுதியிருந்த விடை பல உள்ளங்களையும் தொட்டது. நேரிலும், ஃபோனிலும் பலர் அதைப் பாராட்டிக் கூறினர். இந்த இதழின் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் வெளியாகியிருக்கும் கடிதமும் அந்த விடையின் எதிரொலியே. ஆனால், மானுடத்தின் வெளித்தெரியாத ஒரு சிகரத்தைத் தொட்டுக் காண்பிப்பது. படியுங்கள். மனித இனத்தின் மீது, உங்கள் மீதே உங்களுக்கு, மரியாதை பிறக்கும். அந்த மரியாதை உங்களை ஓர் அன்புச் சுரங்கமாக மாற்றும் சாத்தியக்கூறும் உண்டு.
*****
சித்திரங்கள் பேசுமா? பேசும், அவை மாருதி வரைந்தவையாக இருந்தால். தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த பத்திரிகை ஓவியர்களில் ஒருவரான மாருதியின் நேர்காணல் படிக்கத் தெவிட்டாதது. தமிழ்ச் சமூகத்தின் ஆதரவோடு பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பீடம் அமையக் காரணமாக இருந்த பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களை அடுத்து தமிழ்த் துறையில் பொறுப்பேற்றிருக்கும் பேரா. பிளேக் வென்ட்வர்த் இளைஞர். தமிழ் மொழி, கலாசாரம், இலக்கியம் இவற்றின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். அவருடைய நேர்காணல் நல்ல விருந்து. சாதனையாளர்கள், கவிதை, சிறுகதைகள், துணுக்குகள் என்கிற பல்சுவைக் களஞ்சியம் மீண்டும் உருப்பெற்றுள்ளது. இனி இது உங்கள் குழந்தை.
வாசகர்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள்!
அக்டோபர் 2012 |