ஆகஸ்ட் 4, 2012 அன்று சிகாகோவின் எல்ஜின் சமுதாயக் கல்லூரி (Elgin Community College) கலையரங்கில் பதஞ்சலி அறக்கட்டளை நிறுவனர் வித்யா பாபுவின் மாணவி குமாரி அனிதா வெங்கடஸ்வாமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. கணேச பஞ்சரத்னத்தில் தொடங்கி, ஆனந்த பைரவியில் அருணகிரியாரின் 'ஏறுமயில் ஏறி' முருகன் பவனி வந்த அழகு மனதைத் தொட்டது. வர்ணத்தில் அனிதாவின் ஆளுமை நன்கு தெரிந்தது. காவடிச் சிந்தில் 'வள்ளிக் கணவன் பேரை' பாடலும் தில்லானாவும் அசர வைத்தன. மீராவின் 'ஹரிதுமஹரோ'வில், முதலையின் வாயில் சிக்கிக் கதறிய கஜராஜனைக் காப்பாறற ஹரி வந்தபோதும், பிரஹலாதனை ரட்சிக்கத் தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மனாய் வந்தபோதும், திரௌபதியைத் துகிலுரித்த போது அவளது மானம் காத்தபோதும், அனிதா தன் அபிநயத்தில் அத்தனை கதாபாத்திரங்களாகவும் மாறியது அற்புதம். கண்ணனின் லீலைகளில் மனம் உருகி, நாம சங்கீர்த்தனத்தில் லயித்து மீராவாகவே மாறி, மேடை முழுதும் அனிதாவே வியாபித்தபோது அரங்கிலிருந்தவர்கள் கலங்கிய கண்களுடன் எழுந்து நின்று பாராட்டினார்கள். அனிதாவின் குரு வித்யா பாபுவின் வித்தியாசமான நடன உத்திகள் பாராட்டத் தக்கன. வித்யாவின் நட்டுவாங்கத்துக்குத் துணையாக, நித்யஸ்ரீயின் சிஷ்யையான ஜெயஸ்ரீ வெங்கடேஷ் (வாய்ப்பாட்டு), வெங்கடேஷ் பத்மநாபன் (வயலின்), ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் (மிருதங்கம்) ஆகியோரும் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
லக்ஷ்மி ரமணன், எல்ஜின், இல்லினாய் |