அரங்கேற்றம்: மேகனா சுப்ரமணியன்
ஆகஸ்ட் 11, 2012 அன்று சந்தியா ஆத்மகூரி அவர்களின் 'நாட்டிய தர்மி ஃபவுண்டேஷன் ஃபார் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ்' மாணவியான மேகனா சுப்ரமணியனின் நடன அரங்கேற்றம் சீஹோல்ம் பள்ளியின் வேகனர் ஆடிடோரியத்தில் நடந்தது. தோடய மங்களம் வழுவூர் சம்பிரதாயப்படி 'ஞான சபேசா'வில் துவங்கியது. தொடர்ந்தது 'மைசூர் ஜதி' எனப்படும் 'பூர்வரங்க விதி' பாடல்; ஸ்வாதித் திருநாளின் 'பஞ்ச ராக ஜதிஸ்வரம்' சிறப்பு. ஆஷா சுப்ரமணியன் இயற்றிய ஐயப்பன் கவுத்துவம் மேகனாவின் திறமையைக் காட்டியது. வர்ணத்திற்கு ஸ்வாதித் திருநாளின் 'பாவயாமி ரகுராமம்' கிருதியை எடுத்துக் கொண்டு அநாயசமாக ஆடி, நவரசத்தையும் காண்பித்தார் மேகனா. தொடர்ந்து அம்புஜம் கிருஷ்ணா, மிச்சிகனின் அம்புஜா வெங்கடேசன் பதங்களுக்கு நேர்த்தியாக ஆடினார் மேகனா. சி. முனுசாமி முதலியாரின் நடராஜ பதத்திற்கு விருத்தமும், கே.என். தண்டபாணிப் பிள்ளையின் தில்லானாவுக்கும் பிறகு இறுதியாகத் திருப்புகழ் தொடர்ந்தன. நாட்டிய தர்மிப் பள்ளியின் பிரத்தியேக பாணியில் 'மங்கள்' ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் மேகனா.

மேகனாவின் (தந்தைவழி) பாட்டி ருக்மிணி தம் பேத்திக்குச் சான்றிதழ் வழங்கினார். நாட்டிய தர்மிப் பள்ளியை நடத்தி வரும் சந்தியா ஆத்மகூரி பரத நாட்டியம், குச்சுப்புடி நடனங்களில் வல்லுநர். குமாரி. பத்மா, கலைமாமணி சுவாமிமலை ராஜரத்தினம் பிள்ளை, கலாக்ஷேத்ரா பாலா, வேம்பட்டி சின்ன சத்யம் ஆகியோரிடம் பயின்றவர். மேகனாவின் தாய்வழிப் பாட்டி ஜானகி ஜெயராம் அகில இந்திய வானொலி, திருச்சி மற்றும் கோழிக்கோடில் ஏ-கிரேட் ஆர்டிஸ்ட் ஆவார். செம்மங்குடி, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரிடம் இசை பயின்றவர். மேகனாவின் தாய் ஆஷா சுப்ரமணியன் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மோகினி ஆட்டம் பயின்றவர். இங்குள்ள 'கலாக்ஷேத்ரா டெம்பிள் ஆஃப் ஆர்ட்ஸ்' பள்ளியில் இருவரும் ஆசான்கள்.

ரஞ்சனி ராஜாராமன் தொகுத்து வழங்கினார். ஆஷா சுப்ரமணியன், ஜானகி ஜெயராமன் ஆகியோர் வாய்ப்பாட்டுப் பாடினர். குரு சந்தியா (நட்டுவாங்கம்), ஜெயசீலன் (மிருதங்கம்), ஜெய சங்கர் பாலன் (வயலின்), அனிருத் ஸ்ரீதர் (புல்லாங்குழல்)ஆகியோர் வலுவாகத் துணை போயினர். மேகனா இந்தக் கல்வியாண்டில் கல்லூரிக்குச் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சுந்தர்,
மிச்சிகன்

© TamilOnline.com