வீணை: நந்தகுமார் மோகன்
ஆகஸ்ட் 18, 2012 அன்று நந்தகுமார் மோகனின் வீணைக் கச்சேரி ஆன்டோவர் (மாசசூசெட்ஸ்) சின்மயா மிஷன் கலையரங்கத்தில் நடந்தது. குரு துர்கா கிருஷ்ணனிடம் 7 ஆண்டுகளாக வீணை பயின்று வருகிறார் நந்தகுமார். காம்போதி ராகத்தில் 'சரஸிஜநாப' வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்து.

நாட்டையில் மகாகணபதிம், கௌளையில் தூதுகூ கல, கல்யாணியில் ஈச பாஹிமாம் ஆகிய சாகித்யங்களை அழகாக வாசித்தார். தியாகராஜரின் சாருகேசி ஆடமோடிகலடே கிருதிக்குச் செய்த ராக சஞ்சாரம் அற்புதம். பெ.தூரனின் 'தாயே திரிபுரசுந்தரி', சியாமா சாஸ்திரியின் பைரவி ராக 'காமாட்சி', பூச்சி ஐயங்காரின் 'ரகுநாத நன்னு' (ஸ்வர ரஞ்சனி) பாடல்கள் அற்புதம். ராகம், தானம், பல்லவி கச்சேரியின் முத்தாய்ப்பு. 'ஜெய ஜகதீச ஹரே'யை திடீரென மீட்டித் தன் தாயாரைப் பரவசத்தில் ஆழ்த்தினார். புரந்தரதாசரின் வெங்கடாசல நிலையம் வெகு அழகு. பிறகு ராகமாலிகை, லால்குடி அவர்களின் தில்லானா ஆகியவற்றுடன் கச்சேரி நிறைவு பெற்றது.

சங்கீத வித்வான் துர்கா கிருஷ்ணன், சாகுந்தலம், இராமாயணம் தசாவதாரம் ஆகியவற்றை வீணை இசையில் அமைத்துப் பலமுறை மேடையேற்றி உள்ளார். MITHAS (MIT Heritage of the Arts of South Asia), Learnquest Academy மற்றும் KHMC குழுக்களில் நிர்வாக உறுப்பினராக இருக்கிறார். பாஸ்டன் சின்மயா மிஷனின் கலாசார இயக்குனரும் இவரே. நந்தகுமாரின் அத்தையான இவரே அவரது குருவும் ஆவார்.

டாக்டர். ப்ரவீண் சீதாராம் மிருதங்கம் வாசித்தார். பாஸ்டன் கல்லூரியில் பயிலவிருக்கிறார் நந்தகுமார் மோகன்.

சரஸ்வதி தியாகராஜன்,
பாஸ்டன்

© TamilOnline.com