அரங்கேற்றம்: சங்கீதா குமார்
ஆகஸ்ட் 19, 2012 அன்று சங்கீதா குமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஹூஸ்டன் நகரின் பெர்ரி நிகழ்கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி புஷ்பாஞ்சலியுடன் கணேச ஸ்துதி, திருப்புகழோடு தொடங்கியது. அடுத்ததாக வந்த ராகமாலிகா ஜதிஸ்வரத்தில் அவருடைய அடவுகளும் ஜதிகளும் பாராட்டுக்குரியவையாக இருந்தன. நிகழ்ச்சியின் நடுநாயகமாக, தஞ்சை நால்வர் இயற்றிய கடுமையான தாளகதியுடன் கூடிய ஜதி அபிநயம் அடங்கிய 'ஸகியே இந்த வேளை' என்கிற வர்ணம் சங்கீதாவின் திறமையை எடுத்துக் காட்டியது. பலவிதமான காலப்ரமாணத்தில் அமைந்த ஜதிகள் கொண்ட இதனை 35நிமிடம் தொடர்ந்து அற்புதமாக ஆடி ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். தொடர்ந்து கேதாரகௌளையில் அமைந்த தேவி ஸ்துதிக்கு தேவியின் சக்திகளைச் சிறப்பாக அபிநயித்தார்.

கமாஸ் ராகத்தில் 'இடது பதம் தூக்கி' என்ற பதத்துக்கு நடராஜப் பெருமானைக் கண்முன்னே கொண்டுவந்தார் என்றால் மிகையாகாது. நிகழ்ச்சியின் சிகரமாக காபி ராகத்தில் அமைந்த 'சின்ன சின்ன பாதம் வைத்து' என்ற கீர்த்தனையில, கிருஷ்ணனின் பால லீலைகளை நல்ல முகபாவத்தடன் சித்திரித்தது பிரமாதம். பின்னர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகல ராகத் தில்லானாவை மிக நேர்த்தியாக ஆடி, தொடர்ந்து வந்த ஜுகல்பந்தியில் அனாயாசமாக மிருதங்கத்துடன் ஜதியில் இணைந்து ஆடி கரகோஷத்தைப் பெற்றார். மத்யமாவதி ராகத்தில் அமைந்த மங்களம் காதுக்கும் கண்ணுக்கும் இதம்.

சங்கீதாவுக்கு 3 வயதில் பாலே நடனம் கற்க ஏற்பட்ட ஆசை 7 வயதில் பரத நாட்டியத்தில் ஈடுபாடாக மாறியது. பாரீஸில் அவரது பெற்றோர், சுஜாதாவும் துர்கேச குமாரும் அவருக்கு பரத நாட்டியம் பயில குரு அடையார் லக்ஷ்மணன் சிஷ்யரான குரு அருள்மோகனிடம் ஏற்பாடு செய்தனர். அவரிடம் 3 வருடம் பரதம் பயின்ற பிறகு, அமெரிக்கா திரும்பியதும் அடையார் லக்ஷ்மணனின் பிரதம சிஷ்யரான குரு பத்மினி சாரியிடம் பரத நாட்டியத்தை மேலும் பயின்று அரங்கேறியுள்ளார்.

குரு பத்மினி சாரி சங்கீதாவைப் பாராட்டிப் பேசினார். பாரிஸில் சங்கீதாவுக்கு முதலில் நாட்டியம் சொல்லிக்கொடுத்த அருள்மோகன் சங்கீதாவுக்குப் பொன்னாடை போர்த்தினார். புத்தகம் ஸ்ரீ ரமா (வாய்ப்பாட்டு), கே.எஸ். ஜயராமன் (புல்லாங்குழல்), மகேஷ் அய்யர் (வயலின்), ஜனார்தன ராவ் (மிருதங்கம்), பார்கவா ஹலாம்பி (கடம்), குரு பத்மினி சாரி (நட்டுவாங்கம்) ஆகியவை நாட்டியத்துக்குச் சோபை அளித்தன. சந்தீப் குமார் (சங்கீதாவின் சகோதரர்), ரோஷணி மூர்த்தீ (சகோதரி) இருவரும் அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தனர்.

ப்ரியா சுப்ரமணியன்,
ஹூஸ்டன், டெக்சாஸ்

© TamilOnline.com