மயிற்பீலி
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்...
முத்த அரிசிகள் கொண்டு
நான் வளர்க்கும்
மன்னிப்பு மயிலிறகு ஒன்று
உனக்காய் உறங்கிக் கிடக்கிறது!

*****


நாள்... கிழமை..

கட்ட மறந்த மின்சாரச் சீட்டு
கடி போட்ட மேலாளர்
கார் இடித்த ஆட்டோ
கலர் மாறிய பிடித்த சேலை
கடுப்படித்த அறுவை நண்பன்
கனமாய் நெஞ்சில்
அக்கிழமை குறிக்கும் முன்
“என்னாச்சுடா” என்று நீ கேட்ட பொழுதில்
எல்லாம் சுகமாயிற்று!

*****


ஞாபகம்

உன் வாசனைத் திரவியத்தை
வழியெங்கும் கொட்டிச் சென்றாயா...
நீ ஊர் சென்றும்
மணக்கும் உன் ஞாபகங்கள்!

தேவி அருள்மொழி அண்ணாமலை,
சிகாகோ

© TamilOnline.com