கலிஃபோர்னியாவின் சாரடோகாவில் வசிப்பவர்கள் மறக்க முடியாத பெயர்: சூசி வேதாந்தம் நாக்பால் (பார்க்க: தென்றல், மார்ச் 2009). வெற்றிகரமான தொழில்முனைவோராக இருந்த அவர், தன் நிறுவனத்தை விற்றபின் சாரடோகா நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் திட்டப்பணிக்குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். சமூகப் பிரக்ஞையோடு உழைத்த அந்தத் தமிழ்ப் பெண்மணியின் உயிரை, அவரது 46வது வயதிலேயே நுரையீரல் புற்றுநோய் பறித்துச் சென்றது.
அவரது சகோதரி ஜெய்ஸ்ரீ உள்ளாலுக்கும் குடும்பத்துக்கும், அப்பகுதி மக்களுக்கும் இது ஒரு பேரிடி. என்றாலும் நுரையீரல் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை இது ஜெய்ஸ்ரீக்கு ஏற்படுத்தியது. அப்படிப் பிறந்ததுதான் 'Stride for Susie and Smita'.
ஆகஸ்ட் 25, 2012 அன்று நிகழ்ந்த இந்த 5 கி.மீ. நடைப்பயணத்தில் 45 இந்தியர்களுக்கு மேல் கலந்துகொண்டு $130,000 நிதி திரட்ட உதவினர். இவர்களோடு சாரடோகா நகர கவுன்சிலர் மேன்னி கெபல்லோ, சாரடோகா உயர்நிலைப் பள்ளித் துணைமுதல்வர் பிரையன் சஃபைன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். உலகப் புகழ் பெற்ற நுரையீரல் புற்றுநோய் நிபுணர் டாக்டர். கணேஷ் கிருஷ்ணா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இதனை ஏற்பாடு செய்த சூசியின் சகோதரி ஜெய்ஸ்ரீ உள்ளால் 'அரிஸ்டா நெட்வர்க்ஸ்' நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவார்.
சில உண்மைகள்: பெண்களில் 16ல் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். ஆண்களுக்கு இன்னும் அதிக சாத்தியக்கூறு உள்ளது. இந்த நோயால் தாக்கப்படும் மூவரில் ஒருவருக்குக் கீழேயே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது. புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் நுரையீரல் புற்றுநோயே முதலிடம் வகிக்கிறது. இந்த நோய் தாக்க, ஒருவர் புகைபிடிப்பவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
இந்த நோய்க்கு ஒரு தீர்வு காண சமுதாயம் பங்களிக்க வேண்டும்.
சந்திரா போடபட்டி, சாரடோகா, கலிஃபோர்னியா |