ரா.கி.ரங்கராஜன்
'எழுத்துலகப் பிதாமகர்', 'பத்திரிகையுலக பீஷ்மர்' என்றெல்லாம் வாசகர்களால் போற்றப்பட்ட மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் (85) ஆகஸ்ட் 18, 2012 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்த ராயம்பேட்டை என்னும் சிற்றூரில் பிறந்தவர் ரங்கராஜன். தன் சுய முயற்சியால் எழுத்துலகில் முன்னுக்கு வந்தவர். 1946ல் சக்தி. வை. கோவிந்தன் நடத்தி வந்த 'கால பைரவன்' இதழில் வேலைக்குச் சேர்ந்தார். சிலகாலம் பெ. தூரன் நடத்திவந்த 'காலச்சக்கரம்' இதழில் உதவியாசிரியர் பணியாற்றினார். பின்னர் 'குமுதம்' நடத்திய 'ஜிங்லி' சிறுவர் இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றினார். அது நின்றுவிடவே குமுதத்திலேயே துணையாசிரியர் ஆனார். அதன் தலைமை உதவி ஆசிரியராக உயர்ந்தார். எஸ்.ஏ.பி., ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் என்ற மூவர் கூட்டணி தமிழ்ப் பத்திரிகையுலகின் பல புதுமைகளுக்கு வித்திட்டது. ரங்கராஜன், பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்தார். சுஜாதா, ராஜேஷ்குமார் என அக்கால இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்தார். பத்துக்கும் மேற்பட்ட புனைபெயர்களில், காதல், சமூகம், திகில், வரலாறு, நகைச்சுவை என்ற வகைமைகளில், கதை, சிறுகதை, தொடர் நாவல், கட்டுரை என எழுதிக் குவித்தார்.

'லைட்ஸ் ஆன் வினோத்' என்ற பெயரில் இவர் எழுதிய சினிமாத் தகவல்கள் மிகச் சுவாரஸ்யமானவை. மொழிபெயர்ப்புத் துறையில் இவரது சாதனை குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற பாப்பியோன் நாவலை 'பட்டாம்பூச்சி' என்றும், இன்விசிபிள் மேனை 'கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்' என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். 'காதல் மேல் ஆணை' (டேனியல் ஸ்டீல்), 'லாரா' (சிட்னி ஷெல்டன்), 'ஜெனிஃபர்' போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. சிட்னி ஷெல்டன் தமிழகத்தில் பரவலாகத் தெரியக் காரணம் ரா.கி. ரங்கராஜன்தான் என்று சொல்லலாம். திரையுலகிலும் இவர் முத்திரை பதித்தார். இவரது கதை 'சுமைதாங்கி' என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. கமல்ஹாசன் நடித்த 'மகாநதி' படத்தில் இவரது பங்களிப்பு உண்டு. அண்ணாநகர் டைம்ஸில் 'நாலு மூலை' என்ற தலைப்பில் தனக்கேயுரிய கிண்டலான சமூகப் பார்வையுடன் கட்டுரைகள் எழுதி வந்தார். எழுத்துலக முன்னோடிக்குத் தென்றலின் அஞ்சலிகள்.

© TamilOnline.com