நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவங்கிய 'ஜான்சி ராணி பெண்கள் படை'யின் முதல் கேப்டன்; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி என்ற பெருமைகளுக்குரிய லக்ஷ்மி சேகல் (98) ஜூலை 23, 2012 அன்று காலமானார். இவர் அக்டோபர் 24, 1914 அன்று சென்னையில் சுவாமிநாதன் - ஏ.வி. அம்முக்குட்டி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தையார் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்; தாயார் சமூக சேவகி, சுதந்திரப் போராளி. லக்ஷ்மிக்கு இளம் வயதிலிருந்தே சமூக சேவை, தேச விடுதலையில் ஆர்வம். உயர்கல்விக்குப் பின் 1938ல் டாக்டர் பட்டம் பெற்றார். சென்னையின் கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவர் ஆனார். சிறந்த மருத்துவர் என்ற பெயர் பெற்றார். மருத்துவப் பணி தொடர்பாக 1940ல் சிங்கப்பூருக்குப் பயணமான போது அவருக்கு நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் (இந்திய தேசியப் படை) பணியாற்றிய வீரர்களுடன் அறிமுகம் நிகழ்ந்தது. சிலகாலம் சிங்கப்பூரில் வசித்த அவர் அங்கிருந்த இந்தியர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தார். அந்தச் சமயத்தில் சிங்கப்பூருக்கு வந்த நேதாஜியைச் சந்தித்தார். அது லக்ஷ்மியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. பெண்களுக்கென்றே ஒரு தனிப் பிரிவை லக்ஷ்மியைக் கேப்டனாகக் கொண்டு தொடங்கினார் நேதாஜி. கேப்டன் லக்ஷ்மி பிறந்தார். சிங்கப்பூர், பர்மாவில் சிலகாலப் பயிற்சிக்குப் பின் இவர்களது படை, களத்தில் இறங்கியது. மணிப்பூர் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆனால், தொடர்மழையும் உணவு, தளவாடப் பற்றாக்குறைகளும் இவர்களது படை பின்வாங்கக் காரணமாகின. பிரிட்டிஷ் அரசு கேப்டன் லக்ஷ்மி உள்ளிட்ட போராளிகளைக் கைது செய்து ரங்கூனில் வீட்டுச்சிறையில் அடைத்தது. 1946ல் லக்ஷ்மி விடுதலை ஆனார்.
1947ல் தன்னுடன் ஐ.என்.ஏ.வில் கர்னலாகப் பணியாற்றிய ப்ரேம் குமார் சேகலைத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கணவருடன் கான்பூரில் தங்கிய அவர் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்தார். கொல்கத்தாவில் பங்களாதேஷிகள் அகதிகளாக வந்தபோது அவர்களுக்கு மருத்துவ சேவை, உணவு, உடை போன்றவை கிடைக்க உழைத்தார். போபால் விஷவாயுக் கசிவின்போதும் இவர் அங்கு மருத்துவ முகாம்களை அமைத்து உதவினார். ராஜ்ய சபா உறுப்பினராகவும் சில வருடங்கள் பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கியது. 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டார். மரணத்துக்குப் பிறகு இவரது உடல் கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அவரது கண்கள் பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்தப்பட்டு இன்று ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. |