"இது மட்டும் நெனச்சபடி நடந்துச்சுன்னா நீ மொட்டை போடுவேன்னு வேண்டிக்கிட்டேன்" என்று நம் தலையை அடகு வைக்கும் நண்பர்/உறவினர் கூட்டம் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை விடுமுறைக்கு போகும்போதும் எதெதெல்லாம் செய்யவேண்டும் என்று எவ்வளவு திட்டமிட்டாலும் நமக்குத் தெரியாமல் நம்மைவைத்து யாராவது ஏதாவது திட்டம்போட்டு வைத்திருப்பார்கள். நாசூக்காகக்கூட மறுக்கமுடியாமல் உம்மாச்சி கண்ணைக் குத்திடும் என்ற பயத்தால் திட்டங்களில் சிலவற்றைத் தியாகம் செய்யவேண்டி வரும்! இதற்காகவே மீனம்பாக்கத்திலிருந்து வெளியில் போனதும் யார் கண்ணிலும் படாமல் முக்காடோடுடன்தான் நடமாடுவேன்.
அலுவலக வேலையாய் ஒருவாரம் சென்னை பயணம். அதற்கு இங்கிட்டும் அங்கிட்டும் இருந்த இரண்டு சனி ஞாயிறுகளில் ஸ்ரீரங்கம் போய்ப் பெற்றோரையும் மற்றோரையும் பறக்கும் படை மாதிரி பார்த்துவிட்டு ஓடிவந்து விடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு சனி மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸில் போய் இறங்கினேன். நண்பன் பசுபதி, பிரகாஷ் இருவரையும் ராஜகோபுர முனையில் கூட்டமும் ஈக்களும் மொய்க்கும் கடையில் சந்தித்து காஃபி ஆர்டர் செய்ததில், டவரா டம்ளரில் பாதி நுரைக்குக்கீழே இரண்டு ஸ்பூன் காஃபி வந்தது. தகிக்கும் வெயில். மின் தடை வேறு. எப்படித்தான் இப்படிச் சுடச்சுட குடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என்னை வேற்று கிரகவாசி மாதிரி அவர்கள் பார்த்த பார்வையில் "ஒரு காலத்துல நீயும் இப்படிக் குடிச்சிட்டிருந்தவன்தானப்பா" என்ற கேலி.
பசுபதி பள்ளி காலத்து நண்பன். என்சிசியில் கஞ்சி விடைப்போடு டெல்லிக்குப் போய் ஜனாதிபதியிடம் மெடல் வாங்கினவன். ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கு மொத்த தெருவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து திண்ணைகளில் சத்தமாக மனப்பாடம் செய்ய இவன் வீட்டிலிருந்து புல்லாங்குழல் சத்தம் வரும். அசுர சாதகம் - எதிலும். முசிறி-திருச்சி சாலையில் சைக்கிளில் நான் நாக்குத் தள்ளிக்கொண்டு ஓட்ட, கூடவே பத்து கிலோமீட்டர் அசராது ஓடிவருவான். தபேலா, மோர்சிங், கிடார் சகலமும் வாசிப்பான். என் அம்மாவிடம் பாவயாமி மொத்தத்தையும் ஒரே வாரத்தில் கற்றுக்கொண்டான். இம்மாதிரி அபாரமான ஆசாமிகளுக்கெல்லாம் லேசாக மறைகழண்டிருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.
பசுபதியும் அவனது நண்பர் குழாமும் பக்கத்து மாநிலங்களில் மலை மலையாக ஏறிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டு ஆச்சரியப்படவில்லை - பசுபதியின் சுபாவம் தெரிந்ததால். ஆனால் எத்தனை மலைகளை இதுவரை ஏறியிருக்கிறார்கள் என்று அவன் சொன்னது மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "நாளைக்கு மலை ஏறலாம் வரயா?" என்று கேட்டதும் ஏதோ ஒரு வேகத்தில் சரியென்று சொல்லிவி்ட்டேன். கடைசியாக மலை ஏறிப் பதினைந்து வருடமாயிற்று. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு எரிமேலியிலிருந்து செல்லும் பெரிய பாதை வழியாக மட்டும் சென்றதுண்டு. கரி மலையும், அழுதை மலையும் தந்த வலியில் கண் கலங்கியதுண்டு. மலை ஏறாமல் நின்றாலே பின்னால் வரும் சாமிகள் நம்மைத் தள்ளி ஏற்றிவிட்டுவிடுவார்கள். அவ்வளவு கூட்டம் அம்மும். இரண்டாவது வருடம் சென்றபோது பெரிய பாதையில் எங்கள் குழுவிலிருந்து பிரிந்து இரண்டு நாட்கள் நான் தொலைந்து போனது தனிக்கதை - இன்னொரு நாள் சொல்கிறேன்.
"எந்த மலை பசு?"
"ஒனக்குப் பழக்கம் இல்லைங்கறதால எதாவது குட்டி மலையா பார்த்துக் கூட்டிட்டுப் போறேன். திருச்சியைச் சுத்தி நெறய இருக்கு. குளித்தலை தாண்டி திருஈங்கோய் கூட போலாம்".
எங்கள் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் நிகழும். மேற்கண்ட இரண்டு வாக்கிய சம்பாஷணையை மட்டும் கேட்பவர்களுக்கு என்ன தோன்றும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன்.
"குட்டி மலையெல்லாம் வேணாம். கொஞ்சம் மீடியம் சைஸா கூட்டிட்டுப் போப்பா" என்றேன்.
கொல்லிமலை ஏறுவதென்று முடிவாயிற்று. பெயரைக் கேட்டதுமே சிலிர்ப்பாக இருந்தது.
"காலைல மூணு மணிக்குக் கிளம்பிரலாம். வாடகைக் கார் எடுத்துட்டு வந்து பிக்கப் பண்ணிக்கறேன். நாமக்கல் தாண்டி ராசிபுரம் ரூட்ல போவணும். அஞ்சு அல்லது ஆறு மணிக்குப் போய்ச் சேந்துட்டோம்னா வெயிலேர்றதுக்கு முன்னாடி மலையேற ஆரம்பிச்சுரலாம்" என்று சொல்லிவிட்டு மலையேற்ற முன்னேற்பாடுகளையும் சொன்னான். "நான் புளியோதரை கொண்டு வந்துர்றேன். மூணு லிட்டர் தண்ணி பாட்டில் மட்டும் எடுத்துக்க" என்றான். குறிப்பாக "பச்சக் கலர் டிரெஸ் போட்டுக்கோ. சென்ட் அடிக்காதே" என்றான். எதற்குப் பச்சைக் கலர் என்று புரியாமல் தலையாட்டிவைத்தேன்.
உரையாடல் முடிந்து உச்சந்தலையில் அக்னி இறங்க வீட்டுக்குத் திரும்பியாகிவிட்டது. இரண்டு மணிக்கு எழுந்தால்தான் மூன்றுக்குக் கிளம்பமுடியும். அலாரம் வைத்து எழுந்து கைவசம் எதேச்சையாக எடுத்துப் போயிருந்த camouflage கால்சராயையும் ஸ்னீக்கர்ஸையும், டீஷர்ட்டையும் அணிந்து முதுகுப்பையுடன் தயாராக இருந்தேன். மூன்று மணிக்கு வண்டி வராமல் அரைமணி கழித்து ஃபோன் வந்தது. "தில்லை நகர்லருந்து நானும் ஸ்ரீநிவாஸனும் கௌம்பிக்கிட்டே இருக்கோம். வெளில வந்து வெயிட் பண்ணு. பத்து நிமிஷத்துல வந்துடுவோம்" எனச் சொல்ல அரவமின்றி யாரையும் எழுப்பாமல் வெளியேறி தெருவில் நின்றபோது எதிராக்கிரமிப்புக் குடிசையிலிருந்து ஒரு நாய் மட்டும் வாலாட்டிக்கொண்டு வந்து ஐந்து நிமிடத்திற்கு ஒருதரம் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அடையும் பூச்சிகளைத் தாண்டி மஞ்சள் விளக்குகளின் ஒளி வடிய தெரு அமைதியாக இருந்தது. மூன்றரை மணிவாக்கில் டாக்ஸி தெருவில் நுழைந்து என்னை நோக்கி வர பசுவும் ஸ்ரீநிவாஸனும் கைகாட்ட, பின்னிருக்கையில் ஏறினேன். ஓட்டுனர் சலாம் வைக்க, பசு "நீ ஆஃபிஸர். லேட்டானதால கோவமா இருக்கேன்னு சொல்லிருக்கேன். அப்படியே மெயின்டெய்ன் பண்ணு" என்று காதில் கிசுகிசுத்தான். எனக்கு ஏனோ இந்தியன் படத்தில் செந்திலை கவுண்டமணி "குட்மார்னிங் ஆஃபிஸர் ஸார்" என்று சதிக் கூழைக்கும்பிடு போடும் காட்சி நினைவுக்கு வந்தது.
"ஏம்பா லேட்டு?"
"நாங்க டயத்துக்கு எழுந்து ரெடியாயிட்டு டாக்ஸிக்கு வெயிட் பண்ணோம். மூணு மணிக்கு அண்ணன் சைக்கிள்ல மெதுவா போயிக்கிட்ருக்காரு. அலாரம் வச்சுட்டு மறந்து தூங்கிட்டாராம். ஓனர் வீட்டுக்குப் போய் வண்டி எடுத்துவர லேட்" என்று கிசுகிசுத்தான். இக்காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் அவசரமாகப் போக டாக்ஸி எல்லாம் சொல்லிவிட்டு வெகுஅதிகாலையில் ஆளரவமற்ற தெருவில் முனையில் வண்டி வருகிறதா என்று காத்துக் கொண்டிருக்கையில் ஓட்டுனர் சைக்கிளில் எதிர் திசையில் போய்க்கொண்டிருந்தால்!
கம்பரசம்பேட்டையைத் தாண்டி சாலையோரக்கடையில் நிறுத்தித் தேனீர் விழுங்கிவிட்டுத் தொடர்ந்தோம். இடதுபுறம் வரும் Ramp எடுத்து குறுக்குப் பாலத்தில் இணைந்து நாமக்கல் சாலையைப் பிடிக்கவேண்டும். ரேம்ப்பைக் காணவில்லை. ஏதோ சாலைப்பணி நடந்துகொண்டிருந்ததால் அதை அடைத்து கம்பி போட்டிருந்தார்கள். ஒருவழியாகப் பயணத்தைத் தொடர்ந்து நாமக்கல் அடைந்து ராசிபுரம் சாலையைப் பிடித்து குக்கிராமங்கள் சிலவற்றைக் கடந்து சாலையோரத்து பலாப்பழக் குவியலைத் தாண்டி வலதுபுறம் சென்ற வழியில் நிறுத்தினோம், அடுத்த தேனீருக்காக. தார்ப்பாய் போட்ட சாலையோரக் கசாப்புக் கடையில் ஆட்டிறைச்சி மும்முரமாக விற்றுக்கொண்டிருக்க, சற்றுத் தள்ளி சாலையருகே சாக்குவிரித்து அதில் ஈக்கள் மொய்க்க வைத்திருந்த ஆட்டின் தலை என்னையே பார்த்தது. அப்போதுதான் வெட்டிய இன்னொரு ஆட்டை ஒரு சிறுவன் லாகவமாகத் தோலுரித்துக்கொண்டிருந்தான். "நாலு காலுதாண்ணே இருக்கு. எல்லாரும் லெக் பீஸ் கேட்டா இது என்ன ரயில்பூச்சியா?"
தூரத்தில் வானம் மோடம் போட்டு லேசாக நீலம் பாவியிருந்த மேகப்பரவலின் முடிவில் சாம்பல் நீலத்தில் அந்த மலைத் தொடர் தெரிந்தது. வண்டியின் ஜன்னல்களூடாக வந்த குறிஞ்சிக் காற்று நகரத்தின் புழுக்கத்திலிருந்து உடலையும் ஆன்மாவையும் விடுவித்தது. ஒளி, ஒலி, காற்று மாசு எதுவுமற்ற அந்தப் பிரதேசத்தை விட்டுவிட்டு மனிதர்கள் ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக நாகரிகம் என்ற பெயரில் நகரங்களில் குவிந்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.
பசுபதி சொல்லிக் கொண்டிருந்தான். மலையேறக் கிட்டத்தட்ட 17 வழிகள் இருக்கின்றனவாம். அவன் குழு பத்து வழிகளில் ஏற்கெனவே ஏறியிருக்கிறது. "இன்னிக்கு நம்ம பழனியப்பர் கோவில் ரூட்ல ஏறலாம் என்று சொல்லி முடிக்கவும் மரங்களுக்குப் பின் ஒளிந்திருந்த அந்தக் கோவில் வந்தேவிட்டது. அந்த இடத்தின் மகா அமைதியில் காதுகள் அடைத்துக்கொண்டது போன்ற பிரமை. இருபது படிகள் தாண்டிக் கொடிமரம் தெரிந்தது. யாரோ ஒரு பெண்மணி படிகளைக் கழுவி விட்டுக்கொண்டிருக்க நுனிக்காலில் ஏறி, கொடிமரம் தாண்டிச் சுற்றி வந்தால் சன்னிதி மூடியிருந்தது. அந்தக் கோவிலை முழுவதுமாகப் புகைப்படம் எடுக்கமுடியாதபடி ஒரு கோணத்தில் ஒரு மினி மலைமுகடு மாதிரி கொல்லிமலைத் தொடரின் அடிவாரத்தில் கோழியின் கால்களுக்கிடையே ஒளிந்திருக்கும் குஞ்சுபோன்று இருந்தது. 'Yet another Murugan temple?' என்ற என் மனக்கேள்வியைப் பசு படித்திருக்கவேண்டும்.
"இவரு வித்தியாசமான ஆளு. ஆண்டாள் மாதிரி கொண்டை. முறுக்கிய மீசை. வேலுக்குப் பதிலா வஜ்ராயுதம். பிச்சுவா கத்தி ஒண்ணு. இன்னொரு கைல சேவல். கால்ல செப்பல் வேற. இங்க வள்ளியோட வந்து ஹனிமூன் கொண்டாடினதா கதை. வேட்டை வேற ஆடியிருக்காரு!"
அந்தப் பெண்மணி வந்து "இந்தக் கோவில் ரொம்ப பிரசித்தம். இங்க வந்து தங்குனவங்களுக்கு மறுபிறவியே கிடையாதாம்" என்றார். நல்லவேளை. நான் போன ஜென்மத்தில் இந்தக் கோவிலுக்குப் போகவில்லை. போயிருந்தால் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்திருக்க முடியாது.
இங்கு மீசை முருகனைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் அர்ச்சகர் குளிக்கப் போயிருந்ததால், காலதாமதம் செய்யாமல் திரும்ப வந்து பார்த்துக்கொள்ள முடிவுசெய்து டிரைவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டோம். கோவிலின் பின்னால் புதர்களின் நடுவே கற்களும் பாறைகளும் நிரம்பிய அந்த காட்டாற்று வெள்ளப் பாதையில் நீர் அடித்துத் துவைத்து எறிந்திருந்த பாறைக்குவியலில் கால் வைத்து ஏறத் தொடங்கினோம். சிறிது தூரம் சென்றதும் சற்றே தட்டையான பாறைப்பிரதேசம் வந்தது - சிறு நதியின் அளவுக்கு அகலம். கோடைக்காலமானதால் பூனை குளிக்கும் அளவிற்கே தண்ணீர் ஓடியது.
பசு "இருக்கறதுலயே தூரம் கம்மியான ரூட்டு இது - ஆயிரம் மீட்டர் உயரத்துல உச்சி. போய்ச் சேர மூணி மணி நேரம் ஆகும்" என்றான். பாறைகளில் கவனமாகக் கால்வைத்து அவர்களைத் தொடர்ந்தேன். அரைமணி நேரத்திலேயே வியர்வை தொப்பலாக நனைத்தது. உயரம் செல்லச் செல்ல காற்றின் வேகம், அடர்த்தி, தட்பவெப்பம் என்று எல்லாமே மாறுவதை உணர முடிந்தது. நல்லவேளை தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்தாலும் காலையிலிருந்து மாலைவரை இருக்கை தேய்த்துக் கொண்டிருக்காமல், ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்து வந்ததில் கால்கள் தொய்வடையாமல் ஒத்துழைத்தன. தொடர்ந்து ஏறினேன். ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைமேல் கால்வைத்து ஒவ்வொரு அடியாக நடக்க ஏராளமான பூச்சிகள், வண்டுகள், ஊர்வன, சிறு பறவைகள் என்று இதுவரை கண்டிராத உயிரினங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டே தொடர்ந்தேன். பாதையின் அமைப்பு ஊகிக்கவே முடியாமல் சட்சட்டென மாறியது. மலையிலிருந்து மழைநீர் காட்டாறாக இறங்கும் வழியல்லவா?
ஒரு பாறையிலிருந்து அடுத்ததற்குக் கால்வைத்துத் தாண்டும்போது இரண்டு பாறைகளுக்கும் இடைப்பட்ட தரைப்பகுதியில் ஒரு வெள்ளை நூல் துண்டு கிடந்தது. இரண்டு அல்லது மூன்று அங்குல நீளம்தான் இருக்கும். யாராவது சட்டையிலிருந்து பிய்த்துப் போட்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே அடுத்த அடி வைக்க முயற்சிக்கையில் அந்த நூல் சட்டென்று அசைந்தது. ஸ்பிரிங் போலச் சுருண்டது, நெளிந்தது!
தொடரும்...
வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன் காணொளி: பசுபதி |