தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார்
காரைக்குடியில் ஒரு கூட்டம். தலைவர் சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பார்வையாளர்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். காரணம், அது கோடைக்காலம். ஊருக்குப் புதிதாக வந்திருந்த ஒருவர் சொன்னார், "சே, என்ன இருந்தாலும் சென்னை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அங்கே இருப்பது போல கடல் இங்கேயும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்." உடனே மற்றொருவர், "ஏன் இல்லை. இங்கேயும் கடல் இருக்கிறதய்யா.." என்றார் குறுநகையுடன். கேட்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் உடனே, "ஆமாம் ஐயா. இங்கேயும் கடல் இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது ஆர்ப்பரிக்கப் போகிறது, பாருங்கள்" என்றார். இவர் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். தலைவர் பேசி முடித்ததும் ஒருவர் எழுந்தார். வெள்ளுடை. கம்பீரமான தோற்றம். ஒளிவீசும் முகம். நெற்றில் திருநீறு. நடுவே அழகான குங்கும, சந்தனப் பொட்டு. அவையை வணங்கியவர் கம்பீரமாகப் பேச ஆரம்பித்தார். கம்ப ராமாயணம், வில்லிபாரதம் என்று சரமாரியாகப் பாடல்கள்; அவற்றுக்குப் புதுமையான விளக்கங்கள். நடுநடுவில் பெரிய புராணத்திலிருந்தும் ஆழ்வார்கள் பாடல்களிலிருந்தும் மேற்கோள்கள். சபையில் புழுக்கம் தொலைந்து, மலயமாருதம் வீச ஆரம்பித்தது. "சென்னையே தேவலை" என்றவர் "செட்டி நாடு போல வருமா?" என்றார். அங்கே பேசிச் சபையோரைக் குளிர்வித்தவர் 'தமிழ்க்கடல்' ராய. சொக்கலிங்கனார்.

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், சண்டமாருதம் சொ.முருகப்பா, சா.கணேசன் எனத் தமிழுக்குத் தொண்டாற்றிய நகரத்தார் பலர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ராய. சொக்கலிங்கனார். காரைக்குடியை அடுத்த அமராவதி புதூரில் அக்டோபர் 30, 1898ல் ராயப்ப செட்டியார்-அழகம்மை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி காரைக்குடி சுப்பையா அவர்களது திண்ணைப் பள்ளிக்கூடத்தில். தந்தையார் பாலக்காட்டில் தனவணிகம் செய்து வந்தார். அதனால் குடும்பம் அங்குச் சிலகாலம் வசித்தது. சொக்கலிங்கன் அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பின்னர் தந்தைக்கு பர்மாவில் வணிகம் செய்யும் வாய்ப்பு வரவே, இவரும் சென்றார். சில வருடங்கள் அங்கே வசித்து, வணிக நுணுக்கங்களோடு, ஆங்கிலம் மற்றும் பர்மிய மொழியையும் செம்மையாகக் கற்றுத் தேர்ந்தார். பதினெட்டாம் வயதில் காரைக்குடி திரும்பினார். தமிழின்மீது கொண்ட ஆர்வத்தால் பண்டிதர் சிதம்பர ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.

சைவத்தின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர் சொக்கலிங்கனார். அப்போது காரைக்குடியில் மிகவும் புகழ் பெற்றிருந்தவர் சொ. முருகப்பா. இவர் 'சண்டமாருதம்' இதழின் ஆசிரியர். தீவிர சமய மற்றும் தமிழ்ப் பற்றுக் கொண்டவர். சமூக சீர்த்திருத்தவாதி. அவரது நட்பின் விளைவாக 1917ல் இந்து மதாபிமான சங்கம் தோன்றியது. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாக அச்சங்கம் கொண்டிருந்தது. ராய. சொக்கலிங்கனார் அதன் தலைவரானார். மகாகவி பாரதியார் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்ததுடன் ஏழு கவிதைகளையும் இயற்றி அச்சங்கத்தைப் போற்றினார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், ராஜாஜி, திரு.வி.க. ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி., ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, ரா.பி.சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்தில் சிறப்புரையாற்றி உள்ளனர்.

சொக்கலிங்கனாருக்கு 1918ல் பள்ளத்தூர் உமையாள் ஆச்சியுடன் திருமணம் நிகழ்ந்தது. ஆனாலும் மகப்பேறு வாய்க்கவில்லை என்பதால், தம் உறவினர் குழந்தையன் செட்டியாரை மகனாகவும், அவர் மகள் சீதையைப் பெயர்த்தியாகவும் கருதி வளர்த்தார். நகரத்தாரிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக தன வைசிய ஊழியர் சங்கம் என்ற ஒன்று ஆரம்பிக்கப் பெற்றது. அதன் சார்பில் 1920ல் 'தன வைசிய ஊழியன்' என்ற பெயரில் ஓர் இதழ் துவங்கப்பட்டது. முருகப்பா சிறிதுகாலம் அதன் ஆசிரியராக இருந்தார். பின்னர் சொக்கலிங்கனார் அந்தப் பொறுப்பேற்றார். இதழைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணிய அவர் 'ஊழியன்' என்று பெயர் மாற்றினார். வ. ராமசாமி ஐயங்கார் (வ.ரா.), தி.ஜ. ரங்கநாதன், புதுமைப்பித்தன் எனப் பலர் இதில் உதவியாசிரியர்களாகப் பணியாற்றினர். கொத்தமங்கலம் சுப்புவும் இதழின் வளர்ச்சிக்குப் பங்காற்றினார். எஸ்.எஸ். வாசன் இதழின் சென்னை விளம்பர முகவராகப் பணியாற்றினார். ஊழியன் சுமார் இருபதாண்டுகள் வரை இலக்கிய உலகில் கோலோச்சியது.

மகாத்மா காந்தியின் மீது ராய. சொவுக்குப் பற்று அதிகம். காந்திய வழியில் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். அதனால் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக் காலம் சிறையில் இருந்தார். தமிழ்நாட்டில் காந்திஜி சுற்றுப்பயணம் செய்த போது 1934ல் சொக்கலிங்கனாரின் இல்லத்தில் தங்கினார். 1938ல் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்ற ராய.சொ. புதிய பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். 'காந்தி மாளிகை' என்ற பெயரில் நகராட்சி அலுவலகக் கட்டடத்தை உருவாக்கினார்.

ராய. சொக்கலிங்கனார் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர், ஆராய்ச்சியாளர். கம்ப ராமாயணத்திலும் வில்லி பாரதத்திலும் பல ஆயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர். கம்பன் கழக மேடைகளிலும், பட்டி மன்றங்களிலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றுவார். சமயம், இலக்கியம் சார்ந்த பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்திருக்கிறார். காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் 1958ல் 'தமிழ்க்கடல்' என்ற பட்டத்தை அவருக்கு அளித்துச் சிறப்பித்தது. 'இன்பம் எது?', 'குற்றால வளம்', 'காவேரி' போன்றவை இவரது உரைநடை நூல்கள். சொக்கலிங்கனாருக்கு திரு.வி.க. குரு போன்றவர். எனவே அவரது எழுத்து நடையையே ராய.சொ. பின்பற்றினார். தவிர, 'வருணகுலாதித்தன் மடல்', 'சோண சைல மாலை', 'அருணாசல புராணம்', 'திருவிளையாடற் புராணம் - மதுரைக் காண்டம்' போன்ற நூல்களை ஆராய்ந்து பிழைநீக்கிப் பதிப்பித்தார்.

இவற்றுடன் திருக்குறளுக்கு புதிய விளக்கமாக 'வள்ளுவர் தந்த இன்பம்' என்ற நூலையும், திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி விளக்க நூலையும் எழுதியிருக்கிறார். கம்பனை ஆராய்ந்து எங்கெல்லாம் சிவன் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறித்த ஆய்வு நூல் 'கம்பனும் சிவனும்'. வில்லிபாரத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் 'வில்லியும் சிவனும்'. தவிர, 'தேனும் அமுதும்', 'மீனாட்சி திருமணம்', 'சீதை திருமணம்', 'காதற்பாட்டு', 'திருமணப்பாட்டு', 'தெய்வப் பாமாலை', 'தேவாரமணி', 'இராகவன் இசைமாலை', 'திருக்கானப்பேர் பாமாலை' என இலக்கிய நயம் கொஞ்சும் பல நூல்களை எழுதியிருக்கிறார். காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டித் தான் முன்பு பாடிய எல்லாப் பாடல்களையும் சேர்த்து 'காந்தி கவிதை' என்னும் நூலாக்கி வெளியிட்டிருக்கிறார். காசி, ஸ்ரீசைலம், நேபாளம், அயோத்தி, துவாரகை, தேவாரத் திருத்தலங்கள், 108 திருப்பதிகள் எனப் பலவற்றிற்கும் பயணம் செய்து எழுதிய 'திருத்தலப்பயணம்' குறிப்பிடத் தகுந்த ஒன்று.

வள்ளல் அழகப்பர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ராய.சொ. அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆராய்ச்சித்துறை கெளரவத் தலைவராகப் பொறுப்பேற்றபோது தாம் அரிதின் முயன்று சேகரித்த அனைத்து நூல்களையும் பல்கலைக்கழகத்துக்கே வழங்கினார். சொ. முருகப்பருடன் இணைந்து கம்பனை ஆராய்ந்து அதில் இடைச்செருகலாக இருந்த பாடல்களைக் கண்டுபிடித்து, நீக்கிச் செம்பதிப்பு வெளியாகச் செய்தார். பர்மா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழ் மற்றும் சைவம் வளர உறுதுணையாக இருந்தார். பல சைவ சித்தாந்த மாநாடுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனால் 'சிவமணி', 'சிவம் பெருக்கும் சீலர்' என்ற பட்டங்கள் பெற்றார். மும்பை, கல்கத்தா தமிழ்ச் சங்கங்களிலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

1960ம் ஆண்டில் ராய.சொ.வின் மனைவி காலமானார். அதன் பின் முழுக்க முழுக்கச் சைவம் மற்றும் சமயப் பணியிலேயே முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். நகரத்தார் ஆலயங்களைச் சீர் செய்வதிலும், சிவாலயத் திருப்பணிகளிலும் அவரது நேரம் கழிந்தது. அப்போதைய கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியன், "ராய.சொ. ஒரு நடமாடும் நூலகம்" என்று பாராட்டினார். "தமிழ்க்கடலைப் பற்றிப் பேசப்புகுவது இப்பூமண்டலத்தை முக்கால் பகுதி சூழ்ந்திருக்கும் நீர்க்கடலைப்பற்றிப் பேசுவதோடொக்கும்" என்கிறார் டாக்டர். ந. சுப்புரெட்டியார். இப்படி அயராது உழைத்த தமிழ்க்கடல் சொக்கலிங்கனார் செப்டம்பர் 30, 1974 அன்று திருவாசகத்தை உச்சரித்தபடியே உயிர் நீத்தார். அவரது நூற்றாண்டு விழா 1998ல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ராய.சொக்கலிங்கனார் தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு முன்னோடி.

(தகவல் உதவி : டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் எழுதிய "தமிழ்க்கடல் ராயசொ")

பா.சு.ரமணன்

© TamilOnline.com