இட்லி வகைகள்
காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் (பல்லுப் பல்லாக நறுக்கியது) - 2 மேசைக் கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
முந்திரிப் பருப்பு - 1 மேசைக் கரண்டி
நெய் - 1/2 கிண்ணம்
தயிர் - 1 கிண்ணம்
நல்லெண்ணெய் - 1 கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
அரிசி, உளுந்து ஒன்றாக ஊறவைத்து, சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். இதில் உப்பு, பெருங்காயம், தேங்காய், கடலைப் பருப்பு போட்டு 8 மணிநேரம் வைக்கவும். மாவு சற்றுப் பொங்கியதும் கடுகு தாளித்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம் போட்டு முந்திரி நெய்யில் வறுத்துப் போட்டு, தயிர், எண்ணெய், நெய், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்துக் கலந்து சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி இட்லி செய்யவும். முன் நாட்களில் தொன்னையில் ஊற்றிச் செய்வார்கள். அதனால் குடலை இட்லி என்று பேர் சொல்வதுண்டு. வெறும் இட்லித் தட்டில் ஊற்றினால் நெய், எண்ணெய் எல்லாம் வழிந்து வந்துவிடும். இதற்குத் தேங்காய்ச் சட்னி, வெங்காயக் கொத்சு தொட்டுக் கொள்ளலாம். நெய், எண்ணெய் தேவைக்கேற்பச் சேர்க்கவும்.

(பி.கு: பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு நனைத்தும் இதேபோல் இட்லி செய்யலாம். 1 கிண்ணம் பயற்றம் பருப்பு, 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு போட்டு அரிசி இல்லாமல் செய்யலாம்)

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com